ராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்(குரு), வெள்ளி(சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள். ராகு-கேது இரண்டும் சாயா(நிழல்) கிரகங்கள். ராகு-கேது பற்றி பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. அவர்கள் செய்த தவவேள்விகளால் மகிழ்ந்த பரமேஸ்வரனும், விஷ்ணுவும், நவகிரக பரிபாலனம் செய்யும் பாக்கியத்தை, அந்தஸ்தை அவர்களுக்கு அளித்தனர். ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு-கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அவரவர் செய்த வினைப்பயன்படி ஜாதகத்தில் ராகு-கேது அமர்வார்கள்.
இருவரும் அவரவர் தசை மற்றும் பிற கிரக தசையின் புக்திகளில் யோக, அவயோக பலன்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள். மற்ற ஏழு கிரகங்கள் போல ராகு-கேதுவுக்கு சொந்தவீடு, உச்சவீடு, நீச்சவீடு என்று கிடையாது. ஆனாலும் இவர்களுக்கு உச்சவீடு இருப்பதாக சில ஊர்ஜிதமாகாத தகவல்கள் உள்ளன. அதே நேரத்தில் ராகு-கேதுவுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு. நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அஸ்வினி, கேதுவின் நட்சத்திரமாகும்.
ராகு-கேது அம்சங்கள்
ராகு-கேது இருவரும் அவர்கள் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கிறார்களோ அந்த கிரகத்தின் தன்மையை பிரதிபலிப்பார்கள். அவர்கள் எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்த நட்சத்திர கிரகத்திற்கு ஏற்ப பலா பலன்களை தருவார்கள். அதோடு மட்டும் அல்லாமல் அவர்களுடன் சேர்ந்த கிரகம், அவர்களைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் பலன்களையும் சேர்த்துத் தருவார்கள். பொதுவாக சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்தால் சுக்கிரனின் அம்சமாக பலன்களைத் தருவார்கள். சந்திரனின் வீடான கடகத்தில் இருந்தால் சந்திரனின் பலன்களைத் தருவார்கள்.
இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்பஸ்தானத்தில் இருந்தால் திருமண தோஷத்தைத் தருவார்கள். ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்தால், களத்திர தோஷத்தைத் தருவார்கள். பெண்கள் ஜாதகத்தில் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும். ஐந்தாம் இடமான புத்திரஸ்தானத்தில் இருந்தால் புத்திர தோஷத்தைத் தருவார்கள். அதேசமயம், மிகப்பெரிய ராஜயோகத்தை தரக்கூடிய வல்லமை ராகு-கேது இருவருக்கும் உண்டு. கேதுவின் தயவு இல்லாமல் யாரும் கோடீஸ்வரர் ஆக முடியாது. கேது ஞானத்தையும், யோகத்தையும், மோட்சத்தையும் ஒருங்கே தரக்கூடிய கிரகம்.
பொதுவாக லக்னத்திற்கு 3, 5, 6, 9, 10, 11 வீடுகளில் உள்ள ராகு-கேது காலசர்ப்ப ராஜயோகத்தை தருவார்கள். திடீர் தனயோகம், பட்டம், பதவி, எதிர்பாராத வளர்ச்சி, உழைப்பின்றியே செல்வம், திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றை தருவதில் ராகு-கேதுக்கு நிகர் யாருமில்லை எனலாம். கல்வி அறிவு தருவதில் ராகு-கேது மிக முக்கியமானவர்கள். லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகுவோ, கேதுவோ இருந்தால் ஏட்டுக்கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும், புத்தி சாதுர்யமும் வெளிப்படும்.
மேஷம், ரிஷபம், கன்னி ராசிகளில் இருக்கும் ராகு-கேது சிறப்பான பலன்களை தருவார்கள். அத்துடன் கடகமும், மகரமும் ஜலராசியாகும். இதைக் கடக ஆழி என்றும், மகர ஆழி என்றும் குறிப்பிடுவார்கள். இந்த இரண்டு ஆழிகளில்தான் நான்கு வேதங்களும் இருப்பதாக ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள் அவசியம். ஏனென்றால் கேதுதான் மருத்துவ கிரகம். மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்க, டாக்டர் துறையில் புகழ்பெற, மருந்துக்கடை, ஸ்கேன் சென்டர், லேப் போன்ற தொழில்கள் தொடங்க கேதுவின் அருள் இல்லாமல் இத்துறையில் நுழைய முடியாது.
திருமண அமைப்பு
திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது ராகு-கேது எங்கு இருக்கிறார்கள் என்பதை பார்த்து ஜாதகத்தை சேர்க்க வேண்டும். வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யக்கூடாது. ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தால் ஏழில் கேது இருக்கும். இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால், எட்டில் கேது இருக்கும். இந்த அமைப்பு ராகு-கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்ற அமைப்பு உள்ள ஜாதகத்துடன்தான் சேர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு மிக முக்கியமானதாகும்.
பத்தாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது ஒருவருக்கு உண்டாகும் தொழிலை நிர்ணயம் செய்யும். பத்தாம் இடத்து கிரகத்துடன் ராகு சேர்ந்தால் சினிமா துறையில் புகழ் பெற முடியும். செவ்வாய்-ராகு, சனி-ராகு என்ற சேர்க்கை கொண்டவர்கள் கேமராமேன் போன்ற டெக்னிக்கல் துறையில் கால் பதிக்கலாம். நிழற்படம், எடிட்டிங், அனிமேஷன் போன்ற துறைகளிலும் பிரகாசிக்கலாம். இசைத்துறையில் ஆழ்ந்த அறிவும், ஞானமும், பெயரும், புகழும் கிடைக்க கேதுவின் அருள் தேவை. லக்னம், மூன்று, ஒன்பது, பத்து போன்ற வீடுகளில் கேது இருந்தால் இசைத்துறையில் சாதிக்க இயலும்.
ராகு-கேது தோஷ பரிகாரங்கள்
சுக்கிர வார ராகுகால விரதம்:
ராகுவால் ஏற்படும் பல்வேறுவிதமான தோஷங்கள் நீங்க 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, காலை 11-30 முதல் 12 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். கடைசிவாரம் அதாவது, பதினொன்றாவது வாரம் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து மஞ்சள், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பாக்கு, பழ வகைகள், முழுத்தேங்காய், சர்க்கரைப் பொங்கல் வைத்து உங்களால் எத்தனை சுமங்கலிகளுக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு தரலாம்.
மங்களவார ராகுகால விரதம்:
இந்த விரதத்தை செவ்வாயுடன் ராகு சேர்ந்துள்ள ஜாதகர்கள் செய்யலாம். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, மாலை 4 முதல் 4.30 மணிக்குள் துர்க்கை அம்ம னுக்கு சிவப்பு புடவை சாற்றி எலுமிச்சம் பழம் மாலை போட்டு வணங்கலாம். எலு மிச்சம் சாதம் நற்சீரக பானகம் ஆகியவற்றை கோயிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.
பஞ்சமி திதி:
ராகு பரிகாரத்திற்கு மிகவும் சிறப்பான நாளாக பஞ்சமி திதி சொல்லப்பட்டுள்ளது. பஞ்சமி திதியன்று புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று புற்றுக்கு பால் வார்த்து வழிபடலாம். அத்துடன் அம்மன் சந்நதியில் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கோயிலில் பக்தர்களுக்கு உளுந்துவடை விநியோகம் செய்யலாம்.
பைரவர் வழிபாடு:
ஞாயிற் றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் சர்வ தோஷ நிவாரணம் உண்டு. வெள்ளிக் கம்பியில் உளுந்துவடை மாலை கோத்து பைரவருக்கு அணிவிக்கலாம்.
திருவாதிரை வழிபாடு:
ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஸ்ரீபெரும்புதூர் சென்று ஸ்ரீராமானுஜரை வழிபட்டால் சகலதோஷ தடைகள் நீங்கும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜரையும் தரிசிக்கலாம்.
குருவார விரதம்:
வியாழக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அல்லது மஞ்சள் நிற புடவை சாற்றி அபிஷேக அர்ச்சனை, ஆராதனைகள் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து விநியோகம் செய்யலாம்.
சங்கடஹர சதுர்த்தி:
கேது தோஷம் நீங்க ஏழு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அபிஷேக, அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வணங்கலாம். கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்பானதாகும். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கும் கேது பரிகாரம் செய்யலாம்.
No comments:
Post a Comment