Thursday, April 17, 2014

சனிதிசை


    சனிதிசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களில் சனி ஆயுள் காரகன் என்பதால் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு சிறப்பான ஆரோக்கியம் யாவும் அமையும். சனி ஒரு பாவ கிரகம் என்பதால் 3,6,10,11 போன்ற ஸ்தானங்களில் அமைவது நல்லது. அது போல சனிக்கு நட்பு கிரகங்களான சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, சாரமோ பெற்றிருந்தாலும் இக்கிரகங்களின் வீடுகளின் இருந்தாலும் சனி திசை நடைபெறும் காலங்களில் செல்வம் செல்வாக்கு யாவும் தேடி வரும். சனி மக்கள் காரகன் என்பதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியலில் உயர்பதவிகளும் தேடி வரும். லட்ச லட்சமாக சம்பாதிக்கும் அமைப்பு கொடுக்கும் சனி பகவான் கொடுக்க ஆரம்பித்தால் யாராலும் தடுக்க முடியாது. இத்திசை காலங்களில் பூமி மனை, வண்டி வாகன சேர்க்கைகள், செல்வம் செல்வாக்கு யாவும், நிறைய கடன் வாங்கும் தைரியமும் அதனால் வாழ்வில் முன்னேற கூடிய வாய்ப்பு கடன்களையும் அடைக்க கூடிய வல்லமை போன்ற யாவும் அமையும். பலரை வழி நடத்தி செல்லும் வாய்ப்பு, வேலையாட்களால் அனுகூலம் பழைய பொருட்கள், இரும்பு சம்மந்தப்பட்டவை போன்ற வற்றாலும் அனுகூலம் உண்டாகும்.

   அதுவே சனி பகவான் பலமிழந்திருந்து திசை நடைபெற்றால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், எலும்பு தொடர்புடைய நோய்கள் உண்டாகும். அதிலும் சூரியனின் வீட்டிலோ, சாரத்திலோ சனி அமைந்தால் தாய் தந்தையருக்கு பாதிப்பு, கல்வியில் தடை, தகுதிக்கு குறைவான வேலைகளை செய்யும் அமைப்பு, வேலையாட்களால் பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை உண்டாகும். நிறைய கடன் வேண்டிய சூழ்நிலையும் அதை அடைக்க முடியாமல் அவப்பெயரும் உண்டாகும். மற்றவரால் வெறுக்க கூடிய நிலை ஏற்படும். பொருளாதார நிலையும் மந்தமடையும்.

   பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் சனிக்குரியதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனிதிசை முதல் திசையாக வரும். சனி பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட அயுள், தாய் தந்தையருக்கு அனுகூலம் உண்டாகும். இளம் வயதில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் அமைப்பு, கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் கடின உழைப்பை மேற்கொண்டு பல்வேறு வழியில் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும். வேலையாட்களால் அனுகூலமும் பலரை வைத்து வேலை வாங்கும் யோகமும் சமுதாயத்தில் செல்வம் செல்வாக்குடன் வாழம் அமைப்பு  கொடுக்கும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் பலரை வழிடைத்தும் அமைப்பு நோயற்ற வாழ்க்கை அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

   அதுவே சனி பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அற்ப ஆயுள், அடிக்கடி நோய்கள் ஏற்பட கூடிய அமைப்பு மந்த நிலை கொடுக்கும். இளம் வயதில் நடைபெற்றால் ஆரோக்கியத்தில் பாதிப்பு, கல்வியில் தடை, சோம்பேறி தனம் பெரியோர்களிடம் கருத்து வேறுபாடு கொடுக்கும். மத்திம வயதில் நடைபெற்றால் சோம்பேறி தனம் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடிய நிலை, அடிமை தொழில் அமையும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் பொருளாதார நெருக்கடி ஆரோக்கியத்தில் பாதிப்பு, கண்டங்கள் ஏற்படும் சூழ்நிலை மன நிம்மதி குறைவு உண்டாகும்.

    சனி பலமின்றி அமைந்திருந்தால் தனித்து சொத்துகள் வாங்குவதோ, கடன்கள் வாங்குவதோ கூடாது. பேச்சில் நிதானமுடன் செயல் படுவது நல்லது. 

சனி திசை சனிபுக்தி

    சனிதிசை சனி புக்தியானது 3 வருடங்கள் 3 நாட்கள் நடைபெறும். 

சனிபலம் பெற்று அமைந்திருந்தால் இரும்புப் பொருட்கள் மற்றும் வண்டி வாகனங்களால் அனுகூலங்கள், அரசு வழியில் அனுகூலம், பெயர் புகழ் உயரும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பகைவரும் நட்பாக மாறும் அமைப்பு, உற்றார் உறவினர்களால் உதவி, மனைவி பிள்ளைகளுடன் ஒற்றுமை, ஆசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் போன்ற யாவும் உண்டாகும்.

   சனி பலமிழந்திருந்தால் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வேலையாட்களால் நிம்மதி குறைவு, மறைமுக எதிர்ப்புகளும் பகைவர்களும் அதிகரிக்க கூடிய நிலை, தேவையற்ற மனசஞ்சலம், பணநஷ்டம் மனைவி புத்திரர்களால் கடன் படும் நிலை, சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை, எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வீண்பழிகளை சுமக்கும் நிலை, சிறை செல்லும் அமைப்பு போன்றவை ஏற்படும்.

சனிதிசை புதன் புக்தி

   சனிதிசையில் புதன் புக்தியானது 2வருடம் 8 மாதம் 9 நாட்கள் நடைபெறும்.

புதன் பலம் பெற்றிருந்தால்  திருமண சுப காரியங்கள் கை கூடும் வாய்ப்பு, உற்றார் உறவினர் மற்றும் பங்காளிகளிடையே சமுகமான நிலை, நல்ல அறிவாற்றல், ஞாபக சக்தி புத்தி சாலிதனம், கல்வியில் ஏற்றம், கணக்கு கம்பியூட்டர் துறைகளிலும், கலை துறைகளிலும் ஈடுபாடு உண்டாகும். ஏஜென்ஸி கமிஷன் மூலம் அனுகூலம் உண்டாகும். கவிதை கட்டுரை எழுத்து துறையில் ஆர்வம் ஏற்படும். தாய் மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும்.

புதன் பலமிழந்திருந்தால் உறவினர்களிடம் பகைமை, மனைவி பிள்ளைகளிடையே கருத்து வேறுபாடு கலகம், பகைவரால் பயம், ஞாகசக்தி குறைவு, தலைவலி, நரம்பு தளர்ச்சி, இடம் விட்டு இடம் மாறும் நிலை, கல்வியில் ஈடுபாடு குறைவு, தாய் வழி உறவுகளிடையே பிரச்சனை ஏற்படும்.

சனி திசை கேதுபுக்தி

    சனி திசை கேது புக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் நடைபெறும். 

கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் வண்டி வாகன யோகம், மனைவிப் பிள்ளைகளால் மேன்மை, நண்பர்களின் உதவி ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்க்கொள்ளும் வாய்ப்பு உணடாகும். உத்தியோகத்திலும் உயர்வுகள் கிட்டும். சேமிப்பு பெருகும். 

கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் சொந்த பந்தங்களுடன் விரோதம் பெண்களால் பிரச்சனை, கலகம், பிரயாணங்களில் எதிர்பாராத விபத்து, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, பணவிரயம், உடல் நிலையில் பாதிப்பு, இடம் விட்டு இடம் சென்று வாழ வேண்டிய நிலை, மனநிலை பாதிப்பு, உத்தியோகத்தில் எதர்பாராத மாற்றம் போன்றவை உண்டாகும்.

சனிதிசை சுக்கிர புக்தி

    சனிதிசையில் சுக்கிரபுக்தி 3வருடம் 2மாதம் நடைபெறும். 

சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, இல்லற வாழ்வில் இனிமை, அழகிய குழந்தை பாக்கியம், புதிய வீடு மனை, வண்டி வாகன யோகம், ஆடை ஆபரண சேர்க்கை, உறவினர்களால் உதவி, அரசாங்கத்தால் அனுகூலம், கலைத்துறையில் ஈடுபாடு, தொழில் வியாபார நிலையில் மேன்மை உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் கிடைக்கும்.

    சுக்கிரன் பலமிழந்திருந்தால் பல பெண்களுடன் தொடர்பு கொள்ளும் அவல நிலை, அவமானம், இடமாற்றம், உற்றார் உறவினர்களிடையே வீண் பழி வறுமை, பயம், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கடன் பிரச்சனைகள், சர்க்கரை நோய், சிறு நீரக கோளாறு வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றை இழக்கும் அவலநிலை உண்டாகும்.

சனிதிசை சூரிய புக்தி
    
சனிதிசையில் சூரிய புக்தி 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும். 

சூரியன் பலம் பெற்று அமைந்திருந்தால் அரசு வழியில் அதிகார மிக்க பதவிகளை பெறும் அமைப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, பிதுர் வழியில் சிறப்பு உறவினர்களால் உதவி எடுக்கும் காரியங்களில் வெற்றி, உடல் நிலையில் சிறப்பு, தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்களும் உயர்வுகளும் உண்டாகும்.
சூரியன் பலமிழந்திருந்தால் தந்தைக்கு தோஷம், தந்தை வழி உறவுகளிடையே பகை குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கண்களில் பாதிப்பு, இருதய கோளாறு, அரசு வழியில் பிரச்சனைகள், பணவிரயம் தொழில் வியாபாரத்தில் லாபமற்ற நிலை ஏற்படும்.

சனிதிசையில் சந்திர புக்தி

    சனி திசையில் சந்திர புக்தியானது 1 வருடம் 7 மாதங்கள் நடைபெறும். 

சந்திரன் பலம் பெற்றிருந்தால் பயணங்களால் அனுகூலம், ஜலதொடர்புடைய தொழில்களால் லாபம், அசையும் அசையா சொத்துக்களால் லாபம், குடும்பத்தில் ஒற்றுமை, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், ஆடை ஆபரண மற்றும் வண்டி வாகன சேர்க்கைகள், ஆலய தரிசனம் செய்ய கூடிய வாய்ப்பு, தாய் தாய் வழி உறவுகளால் அனுகூலங்கள் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

    சந்திரன் பலமிழந்திருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், மனநிலை பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனைகள் ஜலத்தால் கண்டம், பயணங்களால் அனுகூலமற்ற நிலை, குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நாடு விட்டு நாடு சென்று அலையும் அவல நிலை, வயிறு மற்றும் சிறு நீரக பிரச்சனைகள் ஏற்படும்.

சனி திசையில் செவ்வாய் புக்தி

   சனி திசையில் செவ்வாய் புக்தி 1வருடம் 1மாதம் 9மாதங்கள் நடைபெறும். 

செவ்வாய் பலம் பெற்றிருந்தால் அரசு வகையில் ஆதரவு, பெரிய உயர்பதவிகளை வகுக்கும் யோகம், சகோதர வழியில் அனுகூலம், மனை பூமி வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபார நிலையில் உயர்வு, தன தான்ய விருத்தி, எதிரிகளை வெல்லும் ஆற்றல், தைரியம் துணிவு யாவும் உண்டாகும்.

    சனி செவ்வாய் இணைந்தே, பார்த்துக் கொண்டோ இருந்தால் எதிர்பாராத விபத்துக்களால் ரத்த காயம் படுதல், அறுவை சிகிச்சை செய்யக் கூடிய நிலை, பூமி மனை இழப்பு, பங்காளிகளிடையே வீண் விரோதம், பகைவர்களால் ஆபத்து ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள், குடும்பத்தில் பிரச்சனை அரசு வழியில் அனுகூலமற்ற பலன் தொழில் வியாபாரத்தில் நஷ்டம், வண்டி வாகனங்களால் வீண் விரயம் ஏற்படும்.

சனிதிசையில் ராகு புக்தி

    சனி திசையில் ராகு புக்தியானது 2வருடம் 10மாதம் 6நாட்கள் நடைபெறும்.

ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்திருந்தால் வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு, அரசு வழியில் அனுகூங்கள், பதவி உயர்வு, தாராள தன வரவு, தெய்வ அருளை பெறும் வாய்ப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, கமிஷன் ஏஜென்ஸி மூலம்  அதிகம் சம்பாதிக்கும் அமைப்பு கொடுக்கும்.

    ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மன கவலை, எதிர்பாராத விபத்துக்களால் கண்டம், வயிறு கோளாறு, விஷத்தால் கண்டம், உண்ணும் உணவே விஷமாகும் நிலை, விஷ பூச்சிகளால் பாதிப்பு, ஜீரம், தோல் நோய், குடும்பத்தில் பிரச்சனை மேலிருந்து தவறி கீழே விழும் நிலை, தவறான பெண் தொடர்பு, இடம் விட்டு இடம் சென்று திரியும் அவலநிலை உண்டாகும்.

சனிதிசையில் குரு புக்தி

சனிதிசையில் குருபுக்தி 2வருடம் 6மாதம் 12நாட்கள் நடைபெறும். 

குரு பகவான் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, மனைவி பிள்ளைகளால் அனுகூலம், திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, அழகிய புத்திர பாக்கியம் உண்டாகும் யோகம், புத்திர வழியில் பூரிப்பு, பெரிய மனிதர்களில் தொடர்பு உயர் பதவிகளை வகுக்கும் ஆற்றல், செல்வம் செல்வாக்கு உயரும் நிலை, தெய்வீக ஆன்மீக  பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

குரு பலமிழந்திருந்தால் தன தான்யம் நலிவடையும், பெரியோர்களிடம் வீண் சண்டை சச்சரவு பிராமணர்களின் சாபம், பிள்ளைகளால் மனசஞ்சலம், கருசிதைவு, அரசு வழியில் அவமானங்கள் கொடுக்கல் வாங்களில் பிரச்சனைகள் ஏற்படும்.

சனிக்குரிய பரிகாரங்கள்

    சனிக்கிழமைகளில் விரதமிருந்து கறுப்பு துணி, கறுப்பு எள்ளை முட்டை கட்டி அகல் விளக்கில் வைத்து எள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடுவது, சனிபகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது, எள் கலந்த அன்னம் படைத்து காக்கைக்கு வைப்பது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம். சனிப் பரீதி ஆஞ்சநேயரையும் துளசிமாலை, வடைமாலை வெண்ணை முதலியவற்றை சாற்றி வழிபடுவது உத்தமம். நீலக்கல்லை அணிவது உத்தமம்.

No comments:

Blogger Gadgets