Sunday, April 20, 2014

சொந்த தொழில் செய்யும் யோகம்


சொந்தமாக தொழில் செய்யக்கூடிய யோகம் என்பது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. இப்பொழுது சொந்தத் தொழில் யோகமானது ஒருவருக்கு எந்த கிரக அமைப்புகளால் உண்டாகிறது என்பதனை பற்றி ஜோதிட ரீதியாக  பார்ப்போம். 

ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 10ம் இடமானது தொழில் ஸ்தானமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 10 ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், மூல திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தாலும், 10ம் அதிபதி கேந்திர ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ம் வீட்டின் அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், திரிகோண ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய 1,5,9 க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்று வலுவுடன் அமையப் பெற்றிருந்தாலும் சொந்தத் தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகிறது. கேந்திர திரிகோணாதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்ற 10ம் அதிபதி, பரிவர்த்தனை பெறுவதும் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் சேர்க்கை பெறுவதும், சொந்த தொழில் யோகத்தை பலப்படுத்தும் அமைப்பாகும். 10ம் அதிபதியானவர் தனக்கு நட்பு கிரகங்களின் சேர்க்கை பெறக்கூடிய, நட்பு கிரகங்களின் நட்சத்திரத்தில் அமைவது சிறப்பாகும்.

ஜோதிடத்தை பொறுத்தவரை தொழில் ஸ்தானமான 10ம் வீட்டில் எத்தனை கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருக்கின்றதோ, அத்தனை தொழில்கள் செய்யக்கூடிய வாய்ப்பு அமையும். அதுபோல 10ம் அதிபதி எத்தனை கிரக சேர்க்கை பெற்று பலம் பெற்றிருக்கிறதோ அத்தனை விதமான தொழில்கள் செய்யக்கூடிய யோகமும் உண்டாகும். 

சொந்த தொழில் செய்வது லாபத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். போட்ட முதலீட்டிற்கு மேலாக பல மடங்கு லாபத்தை பெற்றால்தான் சொந்தத் தொழிலில் காலூன்றி நிற்க முடியும். போட்டி பொறாமைகள் நிறைந்த சமுதாயத்தில் லாபத்தை அடைவது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாகும்.  எதிர்பார்த்த லாபத்தை அடைய 10ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகளுடன் இணைந்து பலம் பெறுவது மட்டுமின்றி ஜென்ம லக்னத்திற்கு லாப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 11ம் வீடும், 11ம் வீட்டின் அதிபதியும் பலம் பெறுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தால் மேலும் மேலும் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். அதற்கும் தன ஸ்தானமான 2ம் வீடும், 2ம் வீட்டின் அதிபதியும் பலம் பெறுவதன் மூலம் பணவரவானது தாராளமாக அமையும். 

பொதுவாக ஒருவருக்கு சிறப்பான சொந்த தொழில் யோகமானது அமைய 10ம் இடம் பலம் பெறுவது மட்டுமின்றி ஜென்ம லக்னமும், ஜென்ம ராசி என வர்ணிக்கப்படகூடிய சந்திரனும் பலம் பெற வேண்டும். லக்னாதிபதி பலம் பெற்றால் நல்ல தைரியம், துணிவு, சுயமாக சிந்திக்கும் ஆற்றல் போன்ற யாவும் சிறப்பாக இருக்கும். அதுபோல மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் பலம் பெற்றால் நல்ல மனவலிமை இருக்கும். சிந்தித்து செயல்பட்டு திடமான முடிவெடுக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.

நவகிரகங்களில் முதன்மை கிரகமாக வர்ணிக்கப்படக்கூடிய சூரிய பகவான் பலம் பெற்று அமைந்துவிட்டால் அரசு வழியில் ஆதரவுகள் சமுதாயத்தில் நல்ல பெயர், புகழ், கௌரவம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். அதுவே சூரியன் & சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், பலமிழந்திருந்தாலும் அரசு வழியில் தேவையற்ற கெடுபிடிகள் ஏற்படும்.

புதன் பகவான் பலம் பெற்று ஒருவர் ஜனன ஜாதகத்தில் அமையுமேயானால் தொழில் ரீதியாக எதிலும் கணக்கிட்டு செயல்படும் ஆற்றல், சிந்தித்து செயல்படும் திறன், செய்யும் தொழிலில் பிறரிடம் எப்படி திறமையாக பேசவேண்டுமோ அப்படி திறமையாக பேசி காரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல், போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அதை தன் அறிவு திறமையால் சமாளித்து முன்னேற்றம் பெறக்கூடிய ஆற்றல் போன்ற யாவும் சிறப்பாக அமையும். 

தனக்காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் தொழில் ரீதியாக பண நடமாட்டங்கள் சிறப்பாக அமையும். பணம் கொடுப்பது வாங்குவது போன்றவற்றில் சரியாகச் செயல்பட்டு லாபத்தை அடைய முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். அதுவே குரு பலம் இழந்திருந்தால் செய்யும் தொழில் ரீதியாக சரியான லாபத்தை அடைய தடைகள் உண்டாகும். பணவிஷயத்தில் மற்றவர்களிடம் ஏமாறக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.

சனி பகவானவர் தொழில் காரகனாகவும் சிறந்த வேலையாட்கள் அமைவதற்கு காரகனாகவும் விளங்குகிறார். சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்து, தன் நட்பு கிரகங்களான புதன் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தால் தொழில் ரீதியாக நல்ல அனுகூலங்கள் உண்டாகும். சிறந்த வேலையாட்கள் அமையப் பெற்று அவர்களால் சாதகமான பலன்களும், அபிவிருத்தியும் பெருகும். அதுவே சனி பலமிழந்திருந்தால் செய்யும் தொழிலில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது இருக்கும்.  வேலையாட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலையும், வேலை ஆட்களே துரோகம் செய்யும் நிலையும் உண்டாகும்.

ஆக, ஒருவருக்கு சொந்த தொழிலானது சிறப்பாக அமைய 10ம் அதிபதியும் 10ம் வீடும் பலம் பெற்றிருந்து, நவகிரகங்களும் வலுவுடன் அமையப் பெற்றிருந்தால் சொந்தமாக தொழில் செய்து அதன் மூலம் வாழ்வில் வசதிகளையும், பொருளாதார உயர்வுகளையும் பெற்று சமுதாயத்தில் கௌரவமான மேன்மையினை அடைய முடியும்.

No comments:

Blogger Gadgets