Thursday, April 17, 2014

சொந்த தொழில் யோகம்



      ஏதாவது ஒரு தொழிலைச் செய்தால் தான் இவ்வுலகில் ஜீவிக்க முடியும். சம்பாதனை என்பதை எந்த வகையிலும் சம்பாதிக்கலாம். குறிப்பாக தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் சிலருக்கு தான் உண்டாகும். பலர் தொழிலில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்துள்ளனர். தொழில் மூலம் லாபம் ஈட்ட வேண்டும் என்ற அமைப்பு இருந்தால் தான் தொழிலில் சாதனை செய்ய முடியும். பொதுவாக ஜனன ஜாதகம் பலமாக இருந்தால் தான் சொந்தத் தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். சொந்த தொழில் யோகத்தைப் பற்றி ஜோதிட ரீதியாக கிரக அமைப்புகள் எப்படி அமைய வேண்டும் என பார்ப்போம்
     
பொதுவாக ஜென்ம லக்கினம், சந்திரன், சூரியன், சனி, புதன், குரு ஆகிய கிரகங்கள் பலமாக இருந்தால் தான் சொந்த தொழில் யோகம் உண்டாகும். அது போல தொழில் ஸ்தானமான 10ஆம் இடமும் பலம் பெற வேண்டும். அது மட்டுமின்றி தன ஸ்தானமான 2 ஆம் வீடு லாப ஸ்தானமான 11 ஆம் வீடு  கூட்டு தொழில் ஸ்தானமான 7 ஆம் வீடு வலுவுடன் அமையப் பெற்றால் நற்பலன் அடைய முடியும். ஜென்ம லக்னத்திற்கு 2,11க்கு அதிபதிகள் இணைந்தோ பரிவர்தனை பெற்றோ இருப்பது சிறப்பாகும். அது போல 2,10க்கு அதிபதிகள் அல்லது 2,7க்கு அதிபதிகள் அல்லது 10,11க்கு அதிபதிகள் 7,10க்கு அதிபதிகள் இணைவதும் பரிவர்தனை பெறுவதும் சிறப்பாகும். குறிப்பாக 10 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெறுவதும் கேந்திர திரி கோணத்தில் அமையப் பெறுவதும் தொழில் யோகத்தை வலிமைப் படுத்தும்.

      பொதுவாக முக்கிய கிரகமான சூரியன் குரு பலம் பெற்று ஜென்ம லக்னத்திற்கு 7 முதல் 12 ஆம் பாவம் வரை அல்லது 10 அல்லது 3 ஆம் பாவம் வரை 5க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பது நல்ல அமைப்பாகும். குறிப்பாக அதிக கிரகங்கள் 10 ஆம் வீட்டில் இருப்பதும் 10 ஆம் அதிபதியுடன் சேர்க்கை பெற்று இருப்பதும் தொழில் யோகத்தை பலப்படுத்துவதாகும்.
     
சொந்தமாக தொழில் செய்யும் யோகம் ஏற்பட ஜென்ம லக்னமும், சந்திரனும் வலுப் பெற வேண்டும். ஜென்ம லக்னாதிபதி பலம் பெற்றால் தான் தைரியம், துணிவு சுயமாக சிந்திக்கும் நிலை, செயல்படும் வலிமை உண்டாகும். அது போல மனோ காரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் பலமாக அமையப் பெற்றால் தான் மன வலிமை உண்டாகும். சொந்த தொழில் செய்வதற்கு சில கிரகங்கள் முக்கிய பங்கு வகுக்கிறது. அக்கிரகங்கள் ஏதாவது ஒரு வகையில் பலம் பெற்றால் தான் சொந்த தொழில் யோகம் உண்டாகும். குறிப்பாக தொழில் ரீதியாக கிரகங்களின் காரகத்துவத்தை பார்த்தால் நவ கிரகங்களில் தலைவனாக விளங்கக் கூடிய சூரியன் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஆத்ம காரகன் சூரியன் பலம் பெற்றால் தான் நல்ல உடல் அமைப்பு உண்டாகும். தைரியத்துடன் உழைக்கும் சக்தி உண்டாகும்.

      சூரியன் பலத்துடன் இருந்தால் தான் சமுதாயத்தில் பெயர், புகழ், கௌரவம் போன்றவை உண்டாகும். சூரியன் பலமிழந்து இருந்தால் தனித்து செயல்படும் தன்மை குறைந்து விடும். சூரியன் வலிமையுடன் அமையப் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் தான் தொழில் செய்யும் வலிமை உண்டாகும்.
     
புதன் பகவான் தொழில் அமைப்பிற்கு மிக முக்கிய கிரகமாக விளங்குகிறார். புதன் பகவான் அறிவுத் திறன், சிந்திக்கும் ஆற்றல், புத்தி கூர்மை, திட்டம் தீட்டுதல், கணக்கிட்டு செயல்படும் திறன், போன்றவைக்கு அதிபதியாவார். அது மட்டுமின்றி வணிகம், ஸ்பெகுலேசன், போன்றவைக்கு புதனே காரகனாவார். புதன் பகவான் ஒருவன் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் தான்  எதையும் எதிர் கொள்ளும் பலம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு செயல்படும் வலிமை உண்டாகும்.  அது போல பேச்சு திறமைக்கும் புதன் தான் காரகன் ஆவார். ஆக, புதன் பலம் பெற்றால் தான் தொழிலில் எப்படி பேச வேண்டுமோ அப்படிப் பேசும் ஆற்றல் எதையும் கணக்கிட்டு செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

      குரு பகவான் தனக்காரகன் ஆவார். அது போல பண நடமாட்டத்திற்கும் கொடுக்கல், வாங்கலுக்கும் குருவே காரகன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று இருந்தால் தான் அவர் கொடுக்கல் வாங்கலில் திறமையாக செயல் பட முடியும். அது போல பண விஷயத்தில் சரியாக செயல்பட்டு லாபத்தை ஈட்ட முடியும். குரு பலம் இழந்தவர்கள் பலர் கொடுக்கல் வாங்கலில் பல்வேறு இழப்புகளை சந்தித்து உள்ளார்கள். ஆக,தொழில் செய்வதற்கு குருவின் பலம் மிக முக்கியமாகும்.
     
சனி பகவான் வேலையாட்களுக்கு காரகன் ஆவார். சனி ஒருவர் ஜாதகத்தில் பலமாக இருந்தால் தான் வேலையாட்களை வழி நடத்தும் பலம் உண்டாகும். சனி ஒருவர் ஜாதகத்தில் வலு விழந்திருந்தால் வேலை ஆட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. அது போல வேலை ஆட்களால் பல்வேறு நஷ்டங்களை சந்திக்க நேரிடும். ஆக, நவ கிரகங்கள் பலம் பெறுவது மட்டுமின்றி ஜென்ம லக்னத்திற்கு 10 ஆம் பாவமும் பலம் பெற வேண்டும். 10ஆம் அதிபதி பலம் பெற்றால் தான் சொந்த தொழிலில் சாதிக்க முடியும்.
     
ஜென்ம லக்னத்திற்கு 10 ஆம் அதிபதியும் சந்திரனுக்கு 10 ஆம் அதிபதியும் தொழில் யோகத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். லக்னத்திற்கு 10 ஆம் அதிபதி சந்திரனுக்கு 10 ஆம் அதிபதி இவ்விரு கிரகங்களில் எக்கிரகம் பலம் பெறுகிறதோ அக்கிரகம் சம்மந்தப்பட்ட தொழில் யோகம் உண்டாகும். 10 ஆம் வீட்டில் பாவிகள் அமையப் பெற்றால் தொழிலில் பல்வேறு சோதனைகள் உண்டாகும்.
     
ஆக ஒருவர் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், புதன் சனி, குரு ஆகிய கிரகங்கள் பலம் பெற்று ஜென்ம லக்னத்திற்கு 10 ஆம் அதிபதி 2,7,11க்கு அதிபதியுடன் இணைந்தோ, பரிவர்தனைப் பெற்றோ இருந்தாலும் 5க்கும் மேற்பட்ட கிரகங்கள் 7 முதல் 12 ஆம் பாவத்திற்குள்ளோ அல்லது 10 முதல் 3 ஆம் பாவத்திற்குள்ளோ இருந்தால் சொந்த தொழில் யோகம் உண்டாகும். குறிப்பாக ஜெனன ஜாதகம் பலம் பெற்று ஜென்ம லக்னத்திற்கு யோகத்தை தரக் கூடிய கிரகங்களின் தசா புத்தி வந்தால் தொழிலில் சாதனை செய்யக் கூடிய அமைப்பு உண்டாகும்.
                                                             

No comments:

Blogger Gadgets