தாராள பணவரவை ஏற்படுத்தும் கிரக அமைப்பு
பணத்திற்காகத்தான் மனிதன் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதைத்தான் ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான். வாழ்க்கையை வசதியாக வாழ்வதற்கும் தாராள தன வரவிற்கும் யோகங்கள் உண்டாக வேண்டுமல்லவா, இப்பொழுது தாரளமான தனச்சேர்க்கை யாருக்கு உண்டாகிறது என பார்ப்போமா?
நவகிரகங்களில் பணத்திற்கு காரகனாக இருப்பவர் குரு பகவானாவார். குரு ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று பலமாக அமைந்திருந்தாலும், குறிப்பாக தனித்து அமையால் நட்பு, கிரக சேர்க்கையுடன் இருந்தாலும் பணவரவானது சிறப்பாக இருக்கும். அதிலும் குரு தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் போன்றவற்றுடன் இணைந்து கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால், பணவரவுகளுக்கு பஞ்சமே இருக்காது. தாராள தன வரவுகளால் செல்வம், செல்வாக்கு உயரும்.
ஒருவரது ஜென்ம ராசி மண்டலத்தை 12 ஆக பிரித்துள்ளார்கள். இதில் தனவரவைப் பற்றி குறிப்பிடுவது 2ம் வீடாகும். மேற்கூறியவாறு குரு பலம் பெற்றிருந்தால் தாராள தன வரவுகள் உண்டாகும் என்றாலும், 2ம் வீட்டதிபதி யோகத்தைத் தரக்கூடிய கேந்திர ஸ்தானங்கள் என வர்ணிக்கப்படும் 1,4,7,10 வீடுகளிலும் மற்றும் திரிகோண ஸ்தானங்கள் என வர்ணிக்கபடும் 5,9 ம் வீடுகளிலும், லாப ஸ்தானமான 11 லும் அமையப் பெற்றாலும். அந்த வீட்டதிபதிகளின் சேர்க்கைப் பெற்றாலும் தாராள தன வரவுகள் உண்டாகி செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
குரு மற்றும் 2 ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி பாவகிரக சேர்க்கை, பாவகிரக பார்வை பெறாமல் இருப்பது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். ஒருவரின் ஜனன ஜாதகத்தைக் கொண்டு, அவருக்கு உண்டாகி இருக்கக்கூடிய யோகங்களைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வது மட்டுமின்றி, அவருடைய சொந்த பந்தங்களால் அவருக்கு ஏற்படக்கூடிய அதிர்ஷ்டத்தைப் பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். ஒருவரின் ஜாதகத்தில் தந்தை ஸ்தானம் 9ம் வீடாகும். தந்தைகாரகன் சூரிய பகவானாவார். 9ம் வீடும், சூரியனும் பலம் பெற்று 2ம் அதிபதியின் சம்மந்ததுடன் இருந்தால், அவருக்கு பெற்ற தந்தையின் மூலம் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும்.
அதுபோல ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீடும், சந்திரனும் தாய்க்குரியதாகும். இதனால் 2,4 க்கு அதிபதிகள் பலம் பெற்று தாய் காரகன் சந்திரனும் பலமாக இருந்துவிட்டால் தாய் வழியில் செல்வ சேர்க்கைகளும் அதிர்ஷ்டங்களும் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 3,11 ம் வீடுகளும், செவ்வாயும் உடன் பிறப்புகளைப் பற்றி குறிப்பிடுவதாகும். சகோதர காரகன் செவ்வாய் பலம் பெற்று 3,11 க்கு அதிபதிகளுடன் 2ம் அதிபதியின் சம்மந்தமும் உண்டாகியிருந்தால் உடன் பிறந்தவர்கள் மூலம் அதிர்ஷ்டமூம் வாழ்க்கையில் உயர்வுகளும் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடு வாழ்க்கைத் துணை மற்றும் கூட்டாளிகளைப் பற்றி குறிக்கக்கூடியதாகும். 2,7 க்கு அதிபதிகள் பலம் பெற்றிருந்தால் வாழ்க்கை துணையாலும் கூட்டாளிகளாலும் முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடையக்கூடிய உன்னத அமைப்பு உண்டாகும். ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் மனைவி மற்றும் பெண்களால் பொருளாதார மேன்மையை அடைய நேரிடும். பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் கணவர் மூலமாக பொருளாதார மேன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் அடைய நேரிடும்.
ஜென்ம லக்னத்தித்கு 2,5 க்கு வீட்டதிபதிகளுடன் குரு பகவான் பலம் பெற்றிருந்தால், பெற்றெடுத்த பிள்ளைகள் மூலம் பொருளாதார மேம்மைகளையும, உயர்வுகளையும் பெற முடியும்.
சனி பகவானும் 2 ம்வீடும் பலமாக இருந்தால் வேலையாட்களின் ஒத்துழைப்பால் பல்வேறு அதிர்ஷ்டங்களை அடைய நேரிடும்.
மேற்கூறியவாறு அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் எப்பொழுது அடைய முடியும் என பார்த்தால், அந்தந்த யோகங்களை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களின் தசாபுக்திகள் வரும் போது யோகங்களின் பலம் அதிகரித்து கொருளாதார மேன்மையையும், தாராள தன வரவையும் பெற முடியும்.
No comments:
Post a Comment