காதல், கலப்புத் திருமணங்கள் செய்து வைக்கும் கிரகங்கள் எவை?
இன்றைய கால கட்டத்தில் காதல், கலப்புத் திருமணங்கள் என்பது சர்வ சாதாரணமாக போய்விட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஆணும் பெண்ணும் சந்திப்பதும் பேசுவதும் ஒரே கல்லூரியில் சேர்ந்தே படிப்பதும் ஒரே இடத்தில் பணியாற்றுவதும் காரணங்கள்.
திருமண விநோதங்கள்
காதல் திருமணங்கள் என்பது மிகவும் விநோதமானது. கண்டதும் காதல், அல்லது பல வருட காதல், மாணவ பருவத்திலேயே காதல், பணிபுரியும் இடங்களில் காதல், முதலாளி, தொழிலாளி இடையே காதல் என்று பல வகைகள் உள்ளன. அந்தஸ்தில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் இருக்கும் இருவர், காதல் மூலம் இணைகிறார்கள். தாய் தந்தையர் தம் மகன், மகள் பற்றி பல மனக்கோட்டை கட்டி வைத்திருப்பர். அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், பெரிய படிப்பு, பெரிய உத்யோகம், பெரிய இடம் என்று ஏதேதோ கற்பனையில் இருப்பார்கள். ஆனால் திடீரென்று ஒருநாள் இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டு வந்து பெற்றோரின் மனக்கோட்டையைத் தகர்ப்பார்கள். இதுதான் கோள்களின் விளையாட்டு.
ஜாதகமும் - காதல் திருமணமும்
காதல் திருமணங்கள் பற்றிய கிரக சேர்க்கை, அம்சங்கள், பல ஜோதிட நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இருந்தாலும் சுருதி, யுக்தி, அனுபவம் மிக முக்கியமாகும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு காதல் திருமணம் நடந்துள்ளது. அதேநேரத்தில் காதல் கிரக அமைப்புகள் இருந்தும் காதலிக்காமல் இருக்கலாம். அதற்கு வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் அமையாமல் இருக்கலாம். ஆனால் கிரக அமைப்புகள் இரண்டு அல்லது அதற்குமேல் அமையுமானால், நிச்சயம் காதல் திருமணம்தான். திருமண வயது நடைபெறும்போது கோசார நிலை மற்றும் தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் காதல் செய்யத் தூண்டும், காதல் வயப்பட நேரிடும். காதல் திருமணம் செய்ய அந்த வயதுதான் முக்கிய காரணம். ஆகையால் இத்தகைய கிரக அமைப்பு உள்ளவர்களின் பெற்றோர்கள் முன் கூட்டியே ஜோதிடர்களிடம் கலந்தாலோசித்து எச்சரிக்கையாக இருக்கலாம். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனித்து நல்லதை எடுத்துச் சொல்லி மனதில் பதிய வைக்கலாம். சிலருக்கு நல்ல தசாபுக்திகள் நடந்து வந்தால் சொல்வதைக் கேட்டு ஓரளவு மனம் மாறக்கூடும். ஏனென்றால் காதலிக்கும் அனைவரும் மணம் முடிப்பதில்லை.
காதல் கொள்வதற்கான கிரக அமைப்புகள்
காதல், கலப்புத் திருமணங்களுக்கு அவரவர் ஜாதக கிரக நிலைகளே முக்கிய காரணம். இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினையும் பிராப்தமும்தான் காரணம். லக்னாதிபதி, சுக்கிரன், குரு, புதன், ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை, ஜாதகத்தில் அவர்களுக்கு இருக்கும் பலம் ஆகியவைதான் காதல் திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன. கீழ்க்காணும் அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவை காதல் திருமணத்துக்கு வழிகாட்டுபவையாகும்.
1. எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 இடங்களில் தனித்து இருப்பது. குறிப்பாக மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாறு தனித்த குரு இருப்பது காதல் திருமணம் செய்ய காரணமாகும்.
2. ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்குரியவன் ஆகிய இரண்டு இடங்களில் ராகு-கேது சம்பந்தம் ஏற்பட்டால் கலப்புத் திருமணம்.
3. களத்திரகாரகன் சுக்கிரனுடன் ராகு-கேது சேர்க்கை பெற்றால் காதல் திருமணம்.
4. ஏழாம் இடத்தில் கேது இருந்து, லக்னாதிபதியும், சுக்கிரனும், பலம் குறைந்து இருந்தால் கலப்புத் திருமணம்.
5. லக்னத்தில் ராகு-சனி சேர்க்கை பெற்று குரு பார்வை இல்லையென்றால் காதல் திருமணம்.
6. ஏழாம் வீட்டில் செவ்வாய், ராகு சேர்க்கை காதல் திருமணம்.
7. பன்னிரண்டாம் இடத்தில் உள்ள பலம் குறைந்த குரு குலதர்மத்திற்கு விரோதமான திருமணத்தை ஏற்படுத்துவார்.
8. ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் சேர்க்கை பெற்று இருவரில் ஒருவர் கேது சாரத்தில் இருந்தால் காதல் திருமணம்.
9. லக்னாதிபதி, சுக்கிரன், ஏழாம் அதிபதி மூவரும் சேர்ந்து 2, 7, 8, 12ல் இருந்தால் பல பிரச்னைகளுக்கு நடுவே திருமணம் நடக்கும்.
10. லக்னத்திலோ அல்லது ஏழாம் வீட்டிலோ சந்திரன் இருந்தால் காதல் கூடிவரும்.
11. சனி-சந்திரன் சேர்க்கை, பார்வை, லக்னாதிபதி பலம் குறைவு ஆகியவற்றால் திருமணத்திற்கு முன்பே தாம்பத்ய உறவு ஏற்படும்.
12. லக்னத்திற்கு ஏழுக்குடையவன் நவாம்சத்தில் குருவின் வீட்டில் இருந்தால் மதம் மாறி திருமணம் செய்விப்பார்.
மேற்கூறிய இந்த கிரக அமைப்புகள்படி, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் காதல் திருமணம் செய்துள்ளார்கள். இந்த அமைப்புகளுடன் பிறந்தவர்கள் பண்டைய காலங்களில் இல்லையா? அவர்கள் எல்லாம் காதல் திருமணம் செய்தார்களா என்று கேள்விகள் எழலாம். அந்தக்கால கட்டத்தில் ஆண், பெண் சந்திப்பது என்பதே அரிது. அதுவும் பால்ய விவாகமும் நடைபெற்ற காலம். பல குடும்பங்களில் குழந்தைகள் பிறந்த உடனே இது தாய்மாமனுக்கு, அக்கா மகனுக்கு என்று முடிவு செய்து விடுவார்கள். மேலும் சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரு கட்டுக்கோப்பாக இருந்த காலம். ஆகையால் காதல் திருமணங்கள் மிகவும் அரிதாகவே இருந்தது. கடந்த 50 ஆண்டுகளாக லேசாக வளர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் வேர்விட்ட இந்த செடி, இந்த காலத்தில் பெரிய மரமாக வளர்ந்துள்ளது. ஆதலால், காதல், கலப்புத் திருமணங்கள் அதிகரித்து உள்ளன.
திருமணம் நடைபெறும் காலம்
காதல் திருமணம் செய்வதற்கு அந்தகால கட்டத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் பெரிதும் காரணமாகின்றன. 2, 5, 7, 8, 12 ஆகிய வீடுகளின் சம்பந்தப்பட்ட தசாபுக்தி, அந்தரங்களில் காதல் திருமணம் அரங்கேறுகிறது. மேலும், ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனியின் காலத்திலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யும் அமைப்பு ஏற்படுகிறது. சந்திரன், புதன், ராகு கேது தசைகளில் திருமண பந்தம் கூடிவருகிறது; சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
No comments:
Post a Comment