Lakhinam

லக்கணப் பலன்கள்

1. மேஷ லக்கினம்:
மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் செல்வ சீமான்களாக சிறந்து விளங்குவார்கள். பொருள் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பிறரிடம் அன்பாகவும் நல்ல முறையிலும் பழகுவார்கள். பலர் போற்றிப் புகழும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் துரிதப் போக்கை உடையவர்கள். மற்றவர்களுடைய ஏச்சுப் பேச்சுகளை லட்சியம் செய்ய மாட்டார்கள். ஆடை ஆபரண விஷயத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும்எந்த நிலையிலும் இருக்க விரும்பக் கூடியவர்கள்.பிறருடைய நற்குணங்களைப் பாராட்டி அவர்களுடைய தகுதிக்குத் தக்க ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பார்கள். இவர்களிடம் பெரும்பாலோருக்கு மத்திம ஆயுளே பிரதானமாகக் கருதப்படுகிறது.

2.ரிஷப லக்கினம்:
ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்கள் செல்வ சீமானாக வாழக் கூடியவராவார்கள். அன்பான மனைவி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள் ஆவார்கள். கணிதத் துறையில் வல்லவர் எனப் பெயர் எடுப்பார். இவர்களிடம் சூது, வாது, வஞ்சனைகள் குடி கொண்டிருக்கும். உண்மை பெருவாரியாக இல்லாத இடத்தில் இப்பிரிவினர் உண்மைக்குக் புறம்பான கட்சியின் பக்கம் சாயக் கூடியவர்கள் ஆவார்கள். இவர்களுக்குப் புத்திரப்பேறு குறைந்தும் அல்லது இல்லாமலும் போகும். ஆண்கள் தமது வயதுக்கு மூத்த பெண்களை மணந்து கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். இப்பிரிவில் பெரும்பாலோர் கலைத்துறையில் ஈடுபட்டு இருப்பார்கள்.

3. மிதுன லக்கினம்:
மிதுன லக்கினத்தில் பிறந்தவர்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவர். பிறரிடம் வெளிபடையாகக் கூச்சமின்றிப் பேசக் கூடியவர். இவர்களுக்குக் கணிதத்தில் புலமை உண்டு. கற்பனை சக்தி அதிகம் உடையவர். பெண்கள் வகையில் இவர்களுக்கு நாட்டமும் ஈடுபாடும் ஏற்படும். சிலர் அவர்களின் மூலம் ஆதாயத்தையும் அடைவர். இந்த லக்கனக்காரர்கள் வீம்புக்காக அதிகப் பொருள் செலவு செய்து வாதத்தில் ஈடுபடுவார்கள். அதில் வெற்றியும் அடைவார்கள். இவர்களுக்குப் பணம் பெரிதல்ல, புரட்சி புருஷர்கள் எனலாம்.

4. கடக லக்கினம்:
கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் ஏற்றத் தாழ்வு வாழ்க்கையை உடையவர்கள் ஆவார்கள். அரசியலில் பெரும் பங்கு கொண்டவர்கள் எனலாம். இவர்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதைவிட வெளி வட்டார நிகழ்ச்சிகளில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். இவர்களை பிறர் எளிதில் ஏமாற்ற முடியாது. இவர்களுக்குப் பொருள் வளத்தைவிட புகழ் மாலை அதிகம் கிடைக்கும். இப்பிரிவினர்கள் எத்துறையிலும் சிறந்து விளங்குவார்கள். பொருளாதாரப் பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இவர்கள் மன்னிக்கும் சுபாவம் உடையவர்கள். தான தருமம் செய்வதில் தாராள மனப்பான்மை கொண்டவர்கள்.

5. சிம்ம லக்கினம்:
சிங்கத்தைக் கண்டு பயப்படாத மிருகங்கள் உண்டா அதைப்போல் சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களைக் கண்டு பிறர் இவரை நெருங்க கொஞ்சம் தயங்குவது உண்டு கம்பீரமான தோற்றம் உடையவர்கள். திடபுத்தி உடையவர்கள். முன்கோபமும் இடை இடையே ஏற்பட்டு மின்னல் வேகத்தில் மறையும். இவர்கள் மன்னிக்கும் சுபாவம் உடையவர்கள். இவர்களுக்கும் பொருளாதாரப் பிரச்சனை அடிக்கடி குறுக்கிடும்.இவர்கள் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆயினும்,”சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை” என்ற பழமொழிப்படி இவர்களுக்கு யாராவது ஒரு ஆரம்ப கர்த்தா உடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு சேமிப்பு சுகப்படாது. பெரும்பாலும் மாமிச உணவு வேட்கை உடையவராக இருப்பார்கள். இவர்கள் தமது கொள்கை,மதம் போன்றவைகளில் தீவிரப் பற்று உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

6. கன்னி லக்கினம்:
கன்னி லக்கினத்தில் பிறந்தவர்கள் பேச்சிலும் அளந்து பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் எப்போதும் வியாபார நோக்கம் காணப்படும். கல்வி முற்றுப் பெறாமல் தடைப்பட்டு இருக்கக் கூடியவர்கள். பொருள் சேர்ப்பதில் வல்லவர்கள். சிக்கனமும் கஞ்சத்தனமும் இவர்களிடம் குடி கொண்டிருக்கும்.’ உதவி என்பது இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.சிறு உதவிக்குக் கூடி இவர்களிடம் பல நாள் காத்திருந்து பொறுமையைக் கையாள வேண்டி இருக்கும். நயவஞ்சகப் பேச்சால் மற்றவர்களுடைய பொருளைக் கவரக் கூடியவர்கள். இவர்கள் பயன் கருதியே தமக்கு நண்பர்கள் பலரை சேர்த்துக் கொள்வார்கள். இவர்கள் அளவான குடும்பத்தை உடையவர்கள்.

7. துலா லக்கினம்:
துலா லக்கினத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் வியாபாரத் துறையில் ஈடுபட கூடியவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வியாபாரத் துறையில் அதிக சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள்,செல்வம் சேர்ப்பதில் சமர்த்தர்களாக இருப்பார்கள். இந்த லக்கினக்காரர்களுக்கு இயற்கையாகவே நீண்ட ஆயுள் ஏற்படும். இவர்களிடமும் சூது வஞ்சனை மறைந்திருக்கும். கூட்டு வியாபாரத்தில் மிக்க லாபம் அடையக் கூடியவர்கள். இவரிடம் கூட்டு சேரும் வேறு லக்கினக்காரர் இவருக்குக் கீழ்ப்படிந்தே இருக்கக் கூடிய நிலை ஏற்படும்.பொதுவாக இரும்பு எந்திரம், லாரி டிரான்ஸ் போர்ட், அச்சுத்துறை இரும்பு, கட்டிட கான்ட்ரக்ட் போன்றவைகளில் இவர்களுக்கு ஜீவனம் அமையும்.

8. விருச்சிக லக்கினம்:
விருச்சிக லக்கினம் விஷராசி என்பதால் இந்த லக்கனக்காரர்கள் கொஞ்சம் விஷமத் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். கல்வி கேள்விகளிலும் நுணுக்கங்களிலும் வல்லவர்களாக இருப்பார்கள். பெண்கள் பால் பற்றுடையவர்கள். ஆதரவு குணமும் முன்கோபமும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் சரளமாக செல்வம் சேரும். கலகம் செய்யக்கூடிய மனப்பான்மை எப்போதும் இருக்கும். இவர்கள் அறியாமையினால் செய்யும் சிறு தவறுகள் கூட மற்றவர்களுக்குத் தீங்காய் முடியும். “சித்தம் போக்கு சிவம் போக்கு” என்றபடி இவர்களாக விரும்பினால் தாராளமாக தர்மம் செய்வார்கள். மொத்தத்தில் நடுத்தரப் போக்கு உடையவர்கள் என்றே சொல்லலாம்.

9. தனுசு லக்கினம்:
தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுள்ளவர்கள்.சொத்துக்கள் உடையவர். பிறரிடம் இனிமையாகப் பழகக் கூடியவர்கள். சிக்கனக்காரர்கள்,தர்ம குணமும் உடையவர்கள்.உறவினர்களுடன் சுமுகமான உறவு வைத்திருப்பார்கள். இப்பிரிவினர்கள் பலதரப்பட்ட வியாபாரங்களில் ஈடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். அதிக லாபம் எதிர்பாராமல் நியாயமான வழியில் வியாபாரத்தில் ஈடுபடக் கூடியவர்கள். சில சமயம் பொருளாதாரத் தட்டுப்பாடு இவர்களுக்கும் ஏற்படக் கூடும். என்றாலும் எப்படியும் சமாளித்து விடுவர். நல்ல குடும்ப அமைப்பு உடையவர். அரசாங்க விருதுகளும் பெறக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10. மகர லக்கினம்:
மகர லக்கினத்தில் பிறந்தவர்கள் பலதரப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவார்கள். விதவிதமான ஆடை ஆபரணம் வஸ்திரம் போன்றவைகளை அணிந்து மகிழக் கூடியவர்கள். பிறன் மனை விழையக்கூடிய பண்பும் இவர்களிடம் உண்டு சாதுரியமாகப் பேசக்கூடியவர்கள். முன்னேற்றம் கருதிப் பல திட்டங்களைப் போட்டு அதில் வெற்றியும் காணக் கூடியவர்கள். இப்பிரிவினர்களில் பெரும்பாலோர் கலைத் துறைகளான சங்கீதம், நடனம்,நாடகம்,சினிமா போன்றவைகளில் ஈடுபடக் கூடியவர்கள். இவர்களுக்கு மதப்பற்றைவிட கலைப்பற்றில் அதிக நாட்டம் ஏற்படும். இவர்களில் ஒரு சிலருக்கு கடின சித்தம் ஏற்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட தாரங்கள் அமைவது உண்டு.

11.கும்ப லக்கினம்:
கும்ப லக்கினத்தில் பிறந்தவர்கள் மனைவியின் மீது அதிகப் பற்று உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குப் புத்திரப் பேறு ஏற்படக் கால தாமதமாகும். சிலருக்குப் புத்திரப் பிராப்தி ஏற்படாமல் போகும். இவர்கள் தற்புகழ்ச்சி கொண்டவர்கள் தற்பெருமை கொண்டவர்கள். பெரும்பாலோர் பல திறப்பட்ட நியாயத்தில் ஈடுபட்டு நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவர்களுக்குத் திருமணம் கால தாமதமாக நடைபெறும். நல்ல செல்வம் சேர்க்கக் கூடியவர்களாகவும், நல்ல குடும்ப அமைப்பை உடையவர்களாகவும், விளங்குவார்கள். கல்வி கேள்விகளில் அதிக ஈடுபாடு ஏற்படாது.ஆயினும் உலக அறிவு நிறையப் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக வியாபாரத் தந்திரம் நிறையப் பெற்றவர்கள் என்றால் அது மிகையாகாது.தர்மகுணம் உடையவராயினும் சோதிக்கும் மனப்பான்மை இவரிடம் நிறைய உண்டு.

12. மீன லக்கினம்:
மீன லக்கனத்தில் பிறந்தவர்கள் பூர்வீக சொத்தை அழித்து விடுவார்கள். அல்லது அதை மாற்றித் தமது பொருளாக ஆக்கிக் கொள்வார்கள். இவர்கள் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும் எப்படியாவது சிறுக பொருள் வந்து சேர்ந்துவிடும். இவர்களிடமிருந்து எந்த ரகசியத்தையும் நாம் அறிந்து கொள்ளமுடியாது. இவர்களுக்குப் பெரும்பாலும் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். இவர்களது போக்கை அறிந்து கொள்வதே மிகவும் கடினமாக இருக்கும். தாராள மனப்பான்மை உடையவராய் இருந்த போதிலும் நடைமுறையில் சிறிது கஞ்சத்தனமாக நடந்து கொள்வார்கள். மொத்தத்தில் இவரால் மற்றவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படாது.

No comments:

Blogger Gadgets