Wednesday, April 16, 2014


ஜாதகப்படி கெட்டி மேளம் கொட்டும் நேரம்...


திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களின் பிறப்பின் பிரதான நோக்கமே  திருமண வழியான வம்ச விருத்தியில்தான் இருக்கிறது. இதில் ஏழை-பணக்காரன், அரசன், ஆண்டி என்கிற பாகுபாடு கிடையாது. இத்தகைய திருமணம் சிலருக்கு சரியான வயதில் சிறிய முயற்சிகளின் பேரில் கூடிவருகிறது. சிலருக்கு அதீத முயற்சிகளின் பேரில் நடக்கிறது. பலருக்கு நூற்றுக்கணக்கான ஜாதகங்களைப் பார்த்து பிரம்மப் பிரயத்தனம் செய்த பிறகுதான் திருமண பந்தம் கூடி வருகிறது. 

இன்னும் சிலர் திருமண பிராப்தம் கூடி வராமல் பிரம்மச்சாரிகளாகவும் முதிர்கன்னிகளாகவும் வாழ்க்கை நடத்துகிறார்கள். எல்லா கோயில்களுக்கும் போய் வந்தாகிவிட்டது. எல்லா பரிகார பூஜைகளும் செய்தாகிவிட்டது. பலமுறை குருபலன் வந்து போய்விட்டது. எல்லா வகையான ஜோதிடமும் பார்த்தாகிவிட்டது. இன்னமும் திருமண யோகம் கூடிவரவில்லையே என எண்ணிலடங்கா பெற்றோர்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். 

இந்த நிலைக்கு என்ன காரணம்? 

ஏன் பலருக்கு திருமண பந்தம் சுலபத்தில் அமைவதில்லை? 

இதற்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் தீர்வு என்ன?

எதற்கும் பிராப்தம் வேண்டும்

ஜாதகம் என்பது நாம் பிறக்கும்போது அந்த நேரத்தில் நவகிரகங்கள் எந்தெந்த ராசிக் கட்டத்தில் இருக்கின்றன என்பதை நமக்கு அறிவிக்கின்ற ஒரு அம்சமாகும். இதன் மூலம் ஜாதகரின் பிறப்பின் தன்மையையும் யோக, அவயோகங்களையும் நாம் அறிந்துகொள்ள முடியும். ஒருவர் வீடு வாங்குவாரா என்றால் அதற்கு உரிய ஸ்தானமான நான்காம் இடத்தை பார்த்து நல்ல யோகத்தில் இருந்தால் வீடு வாங்குவார் என்று ஜோதிடர் சொல்வார். அவர் ஒரு வீடு வாங்குவாரா அல்லது அவருக்கு 2, 3 வீடுகள் அமையுமா என்பது அவரின் பூர்வ கர்ம பிராப்தப்படி கிடைக்கிறது. இதைத்தான் நாம் வாங்கி வந்த வரம் என்கிறோம். பிராப்தத்தைப் பற்றி பகவான் ரமணர், காஞ்சி பெரியவர் போன்றோர் பல்வேறு சமயங்களில் கோடிட்டு காட்டியுள்ளார்கள். 

ஒரு சமயம் பல அன்பர்கள் ரமணர் முன்னிலையில் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவருக்கு விக்கல் எடுத்தது. உடனே பகவான் அவருக்கு தண்ணீர் தருமாறு சொன்னார். அதையடுத்து பக்கத்து அறையில் இருந்து ஒருவர் அவருக்கு அருந்த நீர் கொண்டு வந்து கொடுத்தார். தண்ணீரை அருந்திய அவர் பகவானை நோக்கி, ‘‘பகவானே பிராப்தத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இப்போது எனக்கு தண்ணீர் கிடைத்ததும் என் பிராப்தமோ?’’ என்று கேட்டார். அதற்கு  பகவான் சிறிதும் தாமதிக்காமல், ‘‘எல்லாமே உன் பிராப்தப்படிதான் நடக்கின்றன’’ என்று அருளினார். 

மற்றொரு அன்பர் காஞ்சி பெரியவரிடம், ‘‘நான் கோயில் கட்ட ஆசைப்படுகிறேன்’’ என்று சொன்னார். அதற்கு மகா சுவாமிகள் ‘‘உனக்கு பிராப்தம் இருந்தால் நடக்கும்’’ என்றார். பிற்காலத்தில் அந்த அன்பருக்கு பழைய புராதானமான கோயில் ஒன்று திருப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்தளவிற்கு பிராப்தம் என்பது மிக முக்கியமாகும். ‘நடக்காது என்பது என் முயற்சி செய்யினும் நடக்காது’ - இது பகவான் ரமணரின் தீர்க்கமான வார்த்தைகளாகும்.

திருமணம் நடைபெறும் காலம்

பரிகாரங்கள், நேர்த்திக் கடன்கள் போன்றவை எல்லாம் எந்தக் காலத்திலும் வீண் போகாது. பகவானுக்காக செலவழிக்கப்படும் பணமும் நேரமும் நிச்சயம் பலன் தரும். ஒரு சிலருக்கு உடனே பலன் கிடைக்கிறது. ஒரு சிலருக்கு சிறிது தாமதமாகிறது. இதற்கு காரணம் அவரவர் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அம்சம், சேர்க்கை, திசாபுக்திகளாகும். திருமணத்தை பொறுத்தவரை அஸ்திவாரம் களத்திரஸ்தானம் எனப்படும் ஏழாம் இடமும் அதன் அதிபதியுமாகும். அதற்கு அடுத்து தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் இரண்டாம் இடமும் இரண்டாம் அதிபதியுமாகும். 

அதற்கு அடுத்து ஆண்கள் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாமிடமாகும். இதுவே பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் என அறியப்படுகிறது. ஆக, 2, 7, 8 ஆகிய வீடுகள், ஸ்தானங்கள், ஸ்தானாதிபதிகள் நம் மண வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. ஏழாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண பாக்யம் கூடிவரும். இரண்டாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண யோகம் கூடிவரும்.

ஐந்தாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, இரண்டாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண பாக்யம் கிடைக்கும். ஒன்பதாம் அதிபதி தசையில் லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஏழாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண பாக்யம் கிடைக்கும். ராகு-கேது திசைகளில் திருமணம் கூடி வராது என்று சிலர் கூறுவர். ஆனால் நிச்சயமாக கூடிவரும். ராகு-கேது திசையில் 1, 5, 7, 9 ஆகிய கிரகங்களின் புக்திகளில் திருமண யோகத்தை ராகு-கேது தருவார்கள். குரு, சுக்கிரன், சந்திரன் போன்ற சுப கிரக சேர்க்கை பெற்று இருந்தாலும் சுபயோக பாக்யம் உண்டு.

கோச்சார கிரக அமைப்பு

கோச்சாரம் என்றால் தற்காலம் ஏற்படும் கிரக மாறுதல்களை குறிப்பதாகும். அதாவது, சனிபெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி போன்றவையாகும். இதனால் ஒரு சிலருக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு சரியாக பலன் கிடைக்காது. கோச்சாரத்தில் குருபலன் பற்றி எல்லோரும் அறிவார்கள். குரு பலன் வந்துவிட்டதா என்று கேட்பார்கள். எனினும் இந்த குரு மாறுவதால் எல்லா மாற்றங்களும் நிகழுவதில்லை. குருபலன் இல்லாதபோதும் திருமணம் கூடிவரும். ஏனென்றால் ஜாதக அமைப்பின்படி உள்ள தசாபுக்தி அந்தர யோக நேரமே நமக்கு சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி தருகின்றன. 

ஆகையால் குரு பலன் இல்லையே என்ற கவலை வேண்டாம். எட்டாம் இடத்தில் கோச்சாரத்தில் குரு இருந்தாலும் குரு பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் படுவதால் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். ஜென்ம குருவாக இருந்தாலும் குரு பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் படுவதால் திருமண யோகத்தை கொடுப்பார். 

ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, திருமண வயதில் உள்ள ஆண், பெண் இரு பாலருக்கும் ஏழரைச் சனி நடந்தால் சுபயோக சுப பாக்யம் கிடைக்கும். பெரியவர்களுக்கு விரய சனி நடக்கும்போது குடும்பத்தில் சுபசெலவுகளை சனீஸ்வரர் ஏற்படுத்தி வைப்பார். தன குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டில் பொங்கு சனியாக வரும்போது திருமண பிராப்தத்தை தருவார்.

கோச்சார அமைப்பில் ராகு-கேது இருக்கும் ராசியை குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் வந்து சேரும் பொழுதும் அல்லது கடந்து செல்லும் போதும் அல்லது பார்க்கும் பொழுதும் சுப விஷேசங்கள் கூடிவரும். ராகு-கேது ஒருவரின் ராசிக்கு 2, 3, 5, 6, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது கல்யாண யோகம் உண்டு. ஆகையால் எதற்குமே நேரம், காலம் மிக முக்கியமாகும். அதைவிட நமக்கு அனுபவிக்கும் பிராப்தம் இருப்பது அவசியம். இவை இரண்டுமே இருப்பது கிரகங்களிடம். 

No comments:

Blogger Gadgets