Wednesday, February 19, 2014

திருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்:

குடும்ப வாழ்வில் கணவன், மனைவி ஒற்றுமை மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்பட்டால்தான் மண வாழ்க்கை என்பதே மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். நவக்கிரகங்களால் நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. அவற்றில் திருமணத்தையே தீர்மானிக்கும் கிரகமாக சுக்கிரன் விளங்குகிறார். திருமணத்தை மட்டுமின்றி ஆடம்பரமான வாழ்க்கை அமைவதற்கும் சுக்கிரன் மிக முக்கிய கிரகமாவார். ஒருவருக்கு பூமி, மனை, யோகம், வண்டி வாகனங்கள், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமைவதற்கு சுக்கிரன் மிக முக்கிய காரகனாகிறார். ஆடை, ஆபரணங்கள், அணிகலன்கள் போன்றவைகள் சேருவதற்கும் சுக்கிரனே காரகனாகிறார்.

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனானவர் கேந்திர திரிகோணங்களில் நட்பு வீட்டில் அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்று சுபகிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தாலும் அந்த ஜாதகருக்கு இயற்கையாகவே மண வாழ்க்கை சிறப்பாக அமைவது மட்டுமின்றி சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழும் யோகம் உண்டாகிறது.

சுக்கிரன் கிரகச் சேர்க்கையின்றி சுபர் பார்வையுடன் அமையப் பெறுவது சிறப்பு. அப்படி சுக்கிரன் கிரக சேர்க்கைப் பெறுவாராயின் களத்திரம் தோஷம் உண்டாகும். குறிப்பாக சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், சுக்கிரன் பாவிகளின் சேர்க்கை பெற்று ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் போன்றவற்றில் அமைந்திருந்தாலும் வாழ்வில் தடம் மாறி செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது.

சுக்கிரன் மேற்கூறியவாறு அமைந்திருந்தால் நற்பலன்களை தரமாட்டார் என்பது மட்டுமின்றி சுக்கிரனை பற்றி ஆராய்கின்ற போது மிக முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் அஸ்தங்கம் ஆகும். அதாவது சுக்கிர பகவான் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்குவது மட்டுமின்றி, சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பார். சூரியனானவர் மிகவும் சக்தி வாய்ந்த உஷ்ணகிரகம் என்பதால், சூரியனுக்கு மிக அருகில் எந்த கிரகம் சென்றாலும் அந்த கிரகத்தின் வலிமையை முழுமையாக குறைத்து விடுவார். சூரியனை ஒட்டியே சுக்கிரன் சஞ்சரித்தாலும் சூரியனுக்கு முன்பின் 8 டிகிரிக்குள் அமையப் பெற்றால் பலம் குறைந்து அஸ்தங்கம் பெறுகிறார். அதுவும் ஒரு டிகிரிக்குள் அமைவரானால் சுக்கிரன் தன் முழு பலத்தையுமே இழந்துவிடுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் பலமிழந்த அஸ்தங்கம் பெற்று விட்டால் ரகசிய நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை, சிலருக்கு திருமணமே நடைபெறாமல்  போகக்கூடிய  அனுகூலமற்ற நிலை உண்டாகிறது.

சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு சுக்கிரனின் தசா, புக்தி நடைபெறும் காலங்களில் ரகசிய நோய்களின் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. சுக்கிரன் தேவகுருவான  குருவின் சேர்க்கை பெற்றாலும் களத்திர தோஷம் தான்.

ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்தால் அதன் தசாபுக்தி காலங்களில் வாழ்வில் பல உயர்வுகள் தேடிவரும். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெறுமேயானால் பெண்களால் சாதகமான பலன்களும், தொழில் ரீதியாக உயர்வுகளும் ஏற்படும். பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் மட்டுமின்றி பெண்களுக்கு மிக முக்கிய கிரகமாக விளங்கக் கூடிய செவ்வாயும் பலம் பெற்றிருந்தால் வாழ்க்கைத் துணையால் நல்ல மேன்மைகள் உண்டாகிறது. சுக்கிர ஓரையில் திருமணம் சம்பந்தப்பட்ட சுபகாரியங்களை மேற்கொள்வதும் நல்லது.

No comments:

Blogger Gadgets