Wednesday, February 19, 2014

ஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்:

ஒரு நல்ல குணவதியான பெண் என்பவள் அன்பு, பண்பு, பாசம் போன்ற நற்குணங்களைப் பெற்றவளாக இருந்து, தன் குடும்பத்தை நல்ல வழியில்  நடத்திச் செல்கிறாள். இதனால் பிறந்த இடத்திற்கும் புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கிறாள். தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்து, அனைவரிடமும் நல்ல பெயரையும் பெற்றுக் கொள்கிறாள். அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளும் நற்பண்புகள்  நிறைந்தவர்களாகவும், பெரியோர்களை மதித்து நடக்கும் பண்புள்ளவர்களாகவும் வளர்கிறார்கள். 

ஒரு பெண்ணின் நற்குணம் ஒரு குடும்பத்தையே உயர்த்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. பொருமை, ஈகை குணம், சகிப்புத் தன்மை போன்ற யாவும் நிறைந்த பெண் சமுதாயத்தில் உன்னதமான உயர்வை அடைவாள். இப்படி உன்னதமான நற்பண்புகளைக் கொண்ட பெண்ணால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நற்பலன்கள் உண்டாகும். ஜோதிட ரீதியாக பார்க்கும்போது ஒவ்வொரு லக்னத்தில் பிறந்த பெண்ணிற்கும்  ஒவ்வொரு குணநலன்கள் உண்டு.

மேஷ லக்னத்தில் பிறந்த பெண், எல்லாவகையிலும் முதன்மையானவளாகவும், அழகான உடலமைப்பைக் கொண்டவளாகவும், செல்வம் செல்வாக்குடன் வாழக்கூடிய யோகம் பெற்றவளாகவும், மற்றவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பவளாகவும் உற்றார் உறவினர்களிடையே  பாசம் அதிகம் உடையவளாகவும் இருப்பாள். புத்திர வழியில் சில மன சங்சலங்களை அடைவாள். 

ரிஷப லக்னத்தில் பிறந்த பெண் நல்ல புத்திசாலியாகவும், நல்ல குணவதியாகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவளாகவும், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவளாகவும், கணவருக்கு கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருப்பாள். சிறந்த புத்திர பாக்கியம், ஆடை, ஆபரண சேர்க்கையும், கவர்ச்சியான உடலமைப்பையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வாள். 

மிதுன லக்னத்தில் பிறந்த பெண் சுகபோக வாழ்வில் அதிக நாட்டம் உடையவளாக இருப்பாள். முன்கோபியாகவும், கடினமாக வார்த்தைகளைப் பேசி மற்றவர்களின் மனதை புண்படுத்துபவளாகவும் இருப்பாள். பெண் புத்திர பாக்கிய யோகம் உண்டாகும். மத்திம வயதில் கணவருக்கு கண்டத்தை உண்டாக்கும். வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். 

கடக லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல பேச்சாற்றலும் உற்றார் உறவினர்களிடம் அன்பாக  பழகக்கூடிய குணமும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டவளாக இருப்பாள். ஆடை, ஆபரண சேர்க்கை யோடு சீறும் சிறப்பாக வாழ்வாள். 

சிம்ம லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு முன்கோபம் சற்று அதிகமாக இருக்கும். குடும்பத்தினரிடம்  ஒத்துப்போவதில் சில சங்கடங்கள் உண்டாகும். நல்ல புத்திசாலியாகவும், மற்றவர்களிடம் விசுவாசமாகவும் இருப்பாள். எதிலும் தனித்து நின்ற போராடி வெற்றி பெறுவாள். கணவருக்கு கண்டத்தை ஏற்படுத்தினாலும் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். 

கன்னி லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு மற்றவர்களுக்கு அடங்கி நடக்கும் சுபாவம் இருக்கும்.மகிழ்ச்சியான வாழ்க்கையும், செல்வம், செல்வாக்கும், ஆடை, ஆபரண சேர்க்கையும் இருக்கும். சிறந்த செல்வந்தரை மணக்கக்கூடிய யோகம் உண்டாகும்.  கல்வி, கேள்விகளில்  சிறந்து விளங்குவாள். நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல் உண்டாகும். 

துலா லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு கலை, இசை போன்றவற்றில் ஆர்வம்  அதிகம் இருக்கும். பல கலைகளை கற்றுத் தேர்வாள். பேச்சில் கடுமை இருக்கும் கணவருக்கு அடங்காத குணம், சோம்பேறித்தனம் போன்ற யாவும் இருக்கும். புத்திரர்களால் மனச்சஞ்சலம் அடைவாள். 

விருச்சிகலக்னத்தில் பிறந்த பெண்கள் பிறரை குற்றம் குறை கூறுபவர்களாக ருப்பார்கள் தடித்த உருவமும் யாருக்கும் அடங்காத குணமும் இருக்கும். குடும்ப வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது. 

தனுசு லக்னத்தில் பிறந்த பெண்கள் அழகான உடலமைப்பும், கவர்ச்சியான தோற்றமும், கணவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், நல்ல புத்திசாலியாகவும் திகழ்வாள். குடும்பத்தை நல்ல வழியில் நடத்தி செல்லும் பண்பும் இருக்கும். 

மகர லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல புத்திர பாக்கியம் பெற்று எதிரிகள் இல்லாத சுகமான வாழ்வை வாழ்வார்கள். பல புனித ஸ்தலங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். வாழ்வின் கடைசி காலத்தில் சுமங்கலியாக மரிப்பாள். 

கும்ப லக்னத்தில் பிறந்த பெண்கள் செல்வசெழிப்புடன் பிறந்தாலும் வறுமை நிலையிலேயே வாழ்வாள். உடல் ஆரோக்கியத்திலும் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கை அவ்வளவு திருப்தியாக அமையாது. 

மீன லக்னத்தில் பிறந்த பெண்கள் உற்றார், உறவினர்களை மதிக்கும் சுபாவமும், பெரியவர்களிடம் மரியாதை கொண்டவளாகவும் இருப்பாள். ஆடை, ஆபரண சேர்க்கையும், செல்வம், செல்வாக்கும் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்புடன இருக்கும்.

No comments:

Blogger Gadgets