Wednesday, February 19, 2014

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:
   
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தை பெறுவது மிருகசீரிஷ நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இதில் 1,2&ம் பாதங்கள் சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும் 3,4&ம் பாதங்கள் புதனின் ராசியான மிதுனத்தில் அடங்கும். அதனால் முதல் இரண்டு பாதங்களில் பிறப்பவர்கள் ரிஷப ராசி காரர்களாகவும், 3,4&ம் பாதங்களில்  பிறந்தவர்கள் மிதுன ராசி காரர்களாகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெமுத்துக்கள் வே, வோ, கா,கி ஆகியவை. தொடர் எழுத்துக்கள் வை, வொ ஆகியவையாகும்.

குண அமைப்பு :
     
ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். தன்னை தானே வழி நடத்திக் கொள்ளும் திடமான நம்பிக்கை கொண்டவர்கள். எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பொதுவாகவே மொழிப்பற்றும் இனப்பற்றும் அதிகம் இருக்கும். கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தாய் நாட்டை மறக்காதவர்கள். யார்  சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுய சிந்தனையோடு எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். முன் கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம்  தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும். தவறை கண்டால் தயக்கமின்றி தட்டி கேட்டுகும் தைரியம்  இருக்கும்.

குடும்பம்:

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் குடும்பத்தில் விட்டு கொடுக்கும் பண்பில்லாதவர்களாக இருப்பார்கள். இதனால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவாகவே இருக்கும் அடிக்கடி மன சஞ்சலங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். வெளி நபர்களிடம் விட்டுக் கொடுக்கும் பண்பிருக்கும் அளவிற்கு வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடக்க மாட்டார்கள். பெண்களுக்கு தாய் வழியில் நிறைய வசதிகள் வந்து கொண்டேயிருக்கும். செல்வம் செல்வாக்கிற்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருட்களை எல்லாம் வாங்கி போட்டு சொகுசான வாழ்க்கை வாழ்வார்கள். அன்புக்கு கட்டுபட்டவராக இருந்தாலும் இவர்களுடைய குண அமைப்பால் கடைசி காலத்தில் தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எளிதாக எடுத்துக் கொண்டு வாழம் ஆற்றல் கொண்டவர்கள். பிள்ளைகளிடம் கராராக நடந்து கொள்வார்கள்.

தொழில்:

செய்யும் உத்தியோகத்தில் நெறி முறை தவறாமல் நடந்து கொள்வார்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆற்றல் இருக்-கும். நாட்டியம், நாடகம், சங்கீதம் போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். கடின உழைப்பாளிகள், பேச்சாலும், செயலாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பார்கள். கற்பூர புக்தி உண்டு என்று கூறலாம். அரசியல், பொது மேலாண்மை, சட்டம் போன்ற துறைகளில் புகழ் பெறுவார்கள். பணம் படிப்பு போன்றவை குறைவாக இருந்தாலும் தான் நிறைவாக வாழ்வதாகவே காட்டி கொள்வார்கள். தங்களுடைய சொந்த கருத்துக்களை யாரிடமும் வெளியிடாமல் சாதித்துக் காட்டும் திறமைசாலிகள் என்றால் மிகையாகாது. வண்டி வாகனங்களை வேகமாக ஒட்டிச் செல்வதில் அதிக ஆர்வம் இருக்கும்.

நோய்கள்:

     மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக உழைப்பதால் கை, கழத்து எலும்பு போன்றவற்றில் வலியும், வயிற்று வலி குடல் இறக்கம், நீரிழவு, வாதம் போன்றவற்றில் பாதிப்பும் உண்டாகும். பயணங்களில் அடிபட கூடிய வாய்ப்பு உண்டு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.

திசைபலன்கள்:

    மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக செவ்வாய் திசை வரும் செவ்வாய் திசை காலங்கள் மொத்தம் ஏழு வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம்.செவ்வாய் திசையில் எதிலும் துடிப்பு,ரத்த சம்பந்தபட்ட பாதிப்பு உண்டாகும் 

இரண்டாவது திசையாக ராகு திசையாக வரும். இத்திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். இளமை காலத்தில் ராகு திசை வருவதால் ராகு பலம் பெற்றிருந்தால் மட்டும் நல்ல கல்வி அறிவை பெற முடியும் இல்லையெனில் கல்வியில் மந்த நிலை, முன் கோபம் முரட்டு சுபாவம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் அவப் பெயர் பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

மூன்றாவதாக வரும் குருதிசை காலங்களில் சற்று உயர்வுகளை பெற முடியும். பூமி மனை வாங்கும் யோகம் பொருளாதார மேன்மையும் செய்யும் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.

நான்காவதாக வரும் சனி திசை மாரக திசை என்றாலும் சனி பலம் பெற்று அமைந்து விட்டால் சமுதாயத்தில் நல்ல உயர்வினையும், வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தருவார். இரும்பு சம்மந்தப்பட்டவைகளால் அனுகூலமும் உடனிருக்கும் தொழிலாளர்களால் உயர்வும் உண்டாகும். நல்ல செல்வந்தர்களாக வாழக் கூடிய ஆற்றல் இருக்கும்.
     
மிருக சீரிஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் கருங்காலி மரமாகும். இம்மரத்தை வழிபடுவதால் நல்ல பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதத்தில் இரவில் பத்து மணிக்-கு தலைக்கு மேல் வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்:

திருமணம், காது குத்துதல், சீமந்தம் செய்தல் ஆபரணங்கள் செய்தல், தானியம் வாங்குதல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், யாத்திரை செல்லுதல், கல்வி கற்க தொடங்குதல் கால் நடைகள் வாங்குதல் போன்றவற்றை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள்:

ஓசூர்:

     கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள சந்திர சூடேஸ்வரர் மரக தாம்பிகை திருக்கோவில் 

கிருஷ்ண கிரி:

     தர்மபுரிக்கு வடக்கு 48 கி.மீ தொலைவிலுள்ள சந்திர மௌலிஸ்வரர், பார்வதியம்மை திருக்கோயில்

முசிறி:

கரூர் மாவட்டம் காவிரியின் வடகரையிலுள்ள கற்பூர வல்லி சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில்

சென்னைக்கு அருகிலுள்ள மதுராந்தகத்தில்:

எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜனகவல்லி, உடனுறை ஏரி காத்த ராமன் எனப்படும் ஸ்ரீ கோதண்ட ராமன் திருக்கோயில் ஆகியவையாகும்.

கூற வேண்டிய மந்திரம்
     
விச்வேச்வராய நரகார்வை தாரணாய
கர்ணாம்ருதாய சசிகேகர தாரணாய 
கர்பூரகந்தி தவளாய ஜடாதராய
தாரித்திய துக்க தஹணாய நமச் சிவாய.

மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்
     
சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்ய கூடாது.

No comments:

Blogger Gadgets