Wednesday, February 19, 2014

கண்டத்தை ஏற்படுத்துபவர்கள் யார்:

               நாம் அனைவருக்கும் எப்பொழுதும் நல்லதே நடப்பதில்லை. அதுபோது எப்பொழுதும் கெட்டதே நடப்பதில்லை. வாழ்க்கை என்பது வண்டிச் சக்கரம் போல் ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும். பொதுவாகநமது வாழ்க்கையை வழி நடத்துவது நவ கிரகங்கள் தான். ஜனன ஜாதகத்தில் நவ கிரகங்கள் பலமாக இருந்தால் தான் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். யாருக்கு எப்போது கண்டம் உண்டாகிறது. கண்டத்திற்கு ஒப்பான உடல்நிலை பாதிப்புகள் எப்போது உண்டாகிறது என்பதனை பற்றி பார்ப்போம்.
     நவகிரகங்களில் ஆயுள் காரகனாக விளங்கக் கூடிய கிரகம் சனி பகவான்.  சனி ஒருவர் ஜாதகத்தில் வலுவாக அமையப் பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும். சனி பகவானுக்கு மட்டும்தான் நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற கிரகமாகும். சிறப்பு வாய்ந்த கிரகமான சனி பகவான் ஆயுள் காரகன் மட்டுமின்றி ஜீவன காரகனாகவும் வர்ணிக்கப்படக் கூடியவராவார். சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றாலும் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன் புதன் சேர்க்கைப் பெற்றாலும், சுக்கிரன் புதன் வீட்டில் இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். சனி நீசம் பெற்றோ சூரியனுக்கு அருகில் அமையப் பெற்று அஸ்தங்கம் பெற்றோ ஆட்சி உச்ச ஸ்தானத்தில் வக்ரம் பெற்றோ இருந்தால் ஆயுள், ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகிறது.
          
        மரணத்திற்கு ஒப்பான கண்டத்தை ஏற்படுத்தக் கூடியது எது என்று பார்த்தால் சில ஸ்தானங்களை மாரக ஸ்தானம்என்று பிரித்துள்ளார்கள். குறிப்பாக சரல் லக்னம் என வர்ணிக்கப்படக்கூடிய மேஷம், கடகம், துலாம், மகரத்திற்கு 2, 7க்குடையவர்களும் ஸ்திர லக்னமென வர்ணிக்கக் கூடிய ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்திற்கு 3, 8க்குடையவர்களும், உபய லக்னம் என வர்ணிக்கப்படக் கூடிய மிதுனம், கன்னி, தனுசு, மீனத்திற்கு 7, 11க்கு உடையவர்களும் மாரகாதிபதி ஆவார்கள். 

      பொதுவாக லக்ன லக்னத்திற்கு 8ம் அதிபதியும், சனி பகவானும் பலம் பெற்று இருந்தாலும், மற்ற கிரக அமைப்பும் சாதகமாக இருந்தால் நீண்டஆயுள் உண்டாகும். குறிப்பாக மாரகாதிபதியின் திசா புக்தி வருகின்ற சமயங்களில் நமக்கு கண்டங்கள் ஏற்படும் என்றாலும், அக்கிரகங்களின் அமைப்பிற்கேற்ப பலாபலன்கள் உண்டாகும்.


           ஒருவருக்கு கண்டத்தை ஏற்படுத்தக் கூடிய கிரகங்களின் திசை மற்றும் புக்தி காலங்கள் வரும் எனில் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் பாதிப்பினை ஏற்படுத்தாமல் போகாது. வருகின்ற திசா புக்தியின் கிரகமானது ஒரு வீட்டு ஆதிபத்யம் கொண்ட கிரகமாக இருந்தால் (சூரியன், சந்திரன்) கண்டிப்பாக பாதிப்பினைத் தருவார். ஆனால், வருபவர் இரு வீட்டு ஆதிபத்ய கிரகம் என்றால் மாரகத்தை துணிந்து செய்ய மாட்டார். அதற்கு பதில் மாரகத்திற்கு ஒப்பான கண்டத்தையும் பல்வேறு கஷ்டங்களையும் உண்டாக்குவார்.
            
               மாரக ஸ்தானாதிபதிகளை சுப கிரகங்கள் பார்த்தால் பெரிய கெடுதலை ஏற்படுத்தாமல் விட்டு விடுவார். அதுவே மாரக ஸ்தானாதிபதிகளை பாவ கிரகங்கள் பார்த்தாலும், பாவ கிரக சேர்க்கைப் பெற்றாலும் கொடிய வியாதியினை உண்டாக்குவார்.
            
          பொதுவாக ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக இருந்தால் மாரகாதிபதியின்  திசாபுக்தி காலத்தில் எதிர்பாராத உடல்நிலை பாதிப்புகள் மற்றும் கண்டங்களை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக மாரகாதிபதியும், மாரக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களிலும் கெடுதியை உண்டாக்கும் என்றாலும் சுபர் பார்வை பெற்று பலமாக இருந்தால் கெடுதலை ஏற்படுத்த மாட்டார்கள். மாரகாதிபதியும் மாரகஸ்தானத்தில் உள்ள கிரகங்களும் பலமிழந்து அதன் திசா புக்தி நடைபெறுகின்ற போதுதான் எதிர்பாராத கண்டங்கள் சோதனைகள் எல்லாம் ஏற்படும். குறிப்பாக திசாபுக்தி சாதகமற்ற நேரத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி நடைபெற்றால் பாதிப்புகள் அதிகரிக்கும்.

No comments:

Blogger Gadgets