Thursday, February 6, 2014

சந்திராஷ்டமம்:

சந்திராஷ்டமம் – ஏன் பார்க்கப்பட வேண்டும்.?

மனிதன் தனக்கு நிகழப் போவதை தெரிந்து கொள்ள மட்டும் ஜோதிடம் உருவாக்கப்படவில்லை. விளைவுகளைத் தெரிந்து கொள்ள மட்டும் ஒரு வேதம் உருவாக்கப்பட்டிருக்குமானால் அது இவ்வளவு காலம் நிலைத்திருக்காது. விளைவுகள் என்ன என்பதிலிருந்து யார் மூலம் எங்கு எப்பொழுது நடைபெறும் என்று கூறுவது மட்டுமல்லாமல் அதை அனுபவிக்க வேண்டுமானல் நாம் எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், எதனை எப்பொழுது செய்ய வேண்டும் என்றும் ஜோதிடம் கூறுகிறது. அதில் ஒன்றுதான் சந்திராஷ்டமம். எந்த ஒரு செயலும் வெற்றியுடன் நடைபெற நம் மனம் நமக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அப்படிப் பட்ட மனத்திற்கு காரகராக விளங்குபவர் தான் சந்திரன். அவருடைய பங்களிப்பு இல்லாமல் நம்மால் சுயமாக திறம்பட சிந்திக்க முடியாது. சிந்தனை – சந்திரன் – கஷ்டம் இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்தது தான் சந்திராஷ்டமம்.

சந்திராஷ்டமம்
சந்திரன் நம் ஜென்ம ராசிக்கு எட்டில் பயணிக்கும் போது ஏற்படும் நிலை. உதாரணமாக அஷ்வினி ஜென்ம நட்சத்திரம் என்றால் ஜென்ம ராசி மேஷம். 8ம் ராசி விருச்சிகம். விருச்சிகத்தில் கோட்சார ரீதியாக சந்திரன் வரும் காலம் மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம். மேலும் துல்லியமாக 17வது நட்சத்திர காலம் தான் சந்திராஷ்டம காலம். அதாவது அஷ்வினிக்கு 17வது நட்சத்திரம் அனுசம். அனுச நட்சத்திரம் நடப்பில் உள்ள நாள் அஷ்வினி நட்சத்திரகாரர்களுக்கு சந்திராஷ்டம தினம்.

சந்திரன்

சந்திரன் நவகோள்களில் மிக முக்கியமானவர். இவர் நிற்கும் இடம் தான் நம்முடைய ஜென்ம ராசி இவர் நிற்கும் நட்சத்திரம் தான் நம்முடைய ஜென்ம நட்சத்திரம்.
இவரின் முக்கிய பொருப்புகளில் ஒன்று மனம். நம்மால் எப்படியெல்லாம் சிந்திக்க முடியும் என்பதை விளக்குபவர் தான் இந்த சந்திரன்.

அஷ்டம் (எட்டு)
எட்டாம் இடம் மறைவு ஸ்தானம். இந்த இடத்தில் உள்ள கிரகங்களுக்கு இந்த இடத்திற்குரிய கிரகங்களுக்கு தங்களின் பலன் கொடுக்கும் நிலை சற்று மந்தப்படுகிறது. இது அனைத்து கிரகங்களுக்கும் அனைத்து பாவங்களுக்கும் பொருந்தும்.

சந்திராஷ்டமம் – ஏன் பார்க்கப்பட வேண்டும்.?
நம் மனம் தான் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எதைச் செய்ய வேண்டும். எது நல்லது என்று கூறுகின்றது. அந்த மனத்திற்கு காரகன் தான் சந்திரன். அவர் நல்ல நிலையில் இருக்கும் போது நல்ல யோசனைகள் திட்டங்கள் தீர்வுகள் தோன்றும். அதே சந்திரன் 8ல் மறைந்துவிட்டால் யோசனைகள் திட்டங்கள் தீர்வுகள் எல்லாம் நன்மைபயக்குமாறு அமையாது எனவே தான் அன்றைய தினம் மிக முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது என்று ஜோதிடம் கூறுகின்றது. மனம் தான் செயல் வடிவமாக, பேச்சு வடிவமாக உணர்ச்சி வடிவமாக செயல்படுகிறது அப்பொழுது அந்த மனம் நல்ல முறையில் சிந்தித்தால் தான் நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கே நன்மை பயக்குமாறு அமையும்.

தீர்வு என்ன?

அன்று மௌனவிரதம் இருப்பது சிறந்தது. அப்படி முடியவில்லைஎனில்
அன்று அமைதியாய் இருங்கள். யாரிடமும் தேவையில்லாத சொற்களை கூறவேண்டாம். முடிந்தவரை முக்கிய முடிவுகளை ஒத்திப் போடுங்கள். அப்படி முடியவில்லையென்றால் நன்றாக சிந்தித்து நல்லோர் பலரை ஆலோசித்து பெற்ற தாயிடம் ஆசி பெற்று பின் துவங்கவும்.

இதனை உணர்ந்தால் ஜோதிடத்தில் கூறப்படும் விளைவுகள் மாற்றப்பட்டுவிடுமா? இல்லை. உங்களை நீங்கள் பக்குவப்படுத்திக் கொள்கிறீர்கள். அதே சமயம் முடிந்தவரை நீங்கள் விளிப்புணர்வுடன் இருக்கிறீர்கள். மற்றவர்களின் சொல்லுக்கு மதிப்பளிக்கிறீர்கள். இவையெல்லாம் உங்களுக்கு சாதகமான திசா புத்தி நடக்கும் காலங்களில் வெற்றியின் விளைவுகளை அதிகப்படுத்திக் கொடுக்கும். பாதகமான திசா புத்தி நடக்கும் காலங்களில் வெற்றியின் விளைவுகளை கட்டுப்படுத்திக் கொடுக்கும் அல்லது தோல்விகள் இருப்பின் அதை வெற்றியாக மாற்றக்கூடிய அனுபவத்தைக் கொடுக்கும். இப்படி உணரவில்லையென்றால் எடுக்கக் கூடிய முடிவுகளால் எற்படும் நட்டம் அதிகமாகவும் அல்லது இலாபம் குறைவாகவும் கிடைக்கலாம். அன்றைய தினத்தில் உங்களின் மனநிலை சிறப்பாக செயல்படாததே காரணம்.

No comments:

Blogger Gadgets