Monday, February 24, 2014

இந்த பைரவ வழிபாட்டை யாருக்கு திருமணம் தாமதமாகிறதோ அந்த கன்னிப்பெண்/இளைஞர் மட்டுமே செய்ய வேண்டும்;அவர்கள் சார்பாக யார் செய்தாலும் பலன் தராது.

யாருக்கு திருமணத் தடை இருக்கிறதோ அவருக்கு என்ன திசை நடைபெறுகிறது ? என்பதை உரிய ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்;அந்த திசையின் கிழமையில் வாரம் ஒரு கிழமை வீதம் ஏழு கிழமை மட்டும் இந்த பைரவ வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.

சூரிய மஹாதிசை நடைபெற்றால் ஏழு ஞாயிற்றுக்கிழமைகளும்

சந்திரமஹாதிசை நடைபெற்றால் ஏழு திங்கட்கிழமைகளும்

செவ்வாய் மஹாதிசை நடைபெற்றால் ஏழு செவ்வாய்க்கிழமைகளும்

புதன் மஹாதிசை நடைபெற்றால் ஏழு புதன்கிழமைகளும்

வியாழ(குரு)மஹாதிசை நடைபெற்றால் ஏழு வியாழக்கிழமைகளும்

சுக்கிரமஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும்

சனிமஹாதிசை நடைபெற்றால் ஏழு சனிக்கிழமைகளும்

ராகு மஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும்


கேது மஹாதிசை நடைபெற்றால் ஏழு வெள்ளிக்கிழமைகளும் இந்த வழிபாட்டைப் பின்பற்ற வேண்டும்.இந்தக் கிழமையில் வரும் இராகு காலநேரத்தில் இந்த வழிபாடு செய்ய வேண்டும்;இந்த வழிபாடு செய்ய விரும்புவோர் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும் கைவிட வேண்டும்;அவ்வாறு கைவிட்டப்பின்னரே இந்த பைரவ வழிபாடு செய்ய வேண்டும்;அப்படி செய்தால் மட்டுமே வழிபாடு பலன்களைத் தரும்.முடிந்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவ சன்னதியிலும் இந்த வழிபாடு செய்யலாம்;முதல் வாரத்தில் எந்த பைரவப் பெருமானை வழிபட இருக்கிறோமோ,அதே பைரவப்பெருமானைத் தான் ஏழு வாரங்களுக்கும்(வாரம் என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் கிழமை என்று பொருள்) வழிபட வேண்டும்;கோவிலை மாற்றக் கூடாது.

பழமையான சிவாலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு பின்வரும் பொருட்களை படையலாக இடவேண்டும்;முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை அல்லது செவ்வரளிமாலையை பைரவப் பெருமானுக்கு சந்தனக் காப்பு செய்த பின்னர் அணிவிக்கச் சொல்ல வேண்டும்;இரண்டு நெய்தீபங்களை அவரது சன்னதியில் அல்லது சன்னதி இருக்கும் பகுதியில் ஏற்றி வைக்க வேண்டும்;ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு பாக்கெட் வாங்கி வந்து அவரது பாதத்தில் பாக்கெட்டை திறந்து வைக்க வேண்டும்; 

முடிவாக திருமணத் தடை நீங்க என்று ஸ்ரீகாலபைரவப்பெருமானுக்கு தனது பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு ரூ.60/-தட்சிணை தர வேண்டும்;இதேபோல தொடர்ந்து ஆறு கிழமைகள் வழிபாடு செய்ய வேண்டும்;ஏழாவது கிழமையன்று ஸ்ரீகாலபைரவப் பெருமானுக்கு படையலாக அவல் பாயாசம் படைக்க வேண்டும்;(வீட்டில் தயார் செய்ய இயலாதவர்கள் நட்பு/உறவினர் வீட்டில் செய்யலாம்) அர்ச்சனையின் முடிவில் படையல்களில் டயமண்டு கல்கண்டு பாதியை அங்கே வருபவர்களுக்கு பகிர்ந்து தர வேண்டும்;ஏழாவது கிழமையில் அவல் பாயாசத்தை அங்கே வருபவர்களுக்குப் பகிர்ந்து தர வேண்டும்;

இந்த ஏழு கிழமைகள் வழிபாடு செய்தப் பின்னர்,90 நாட்களுக்குள் தகுந்த வரன் தேடி வரும்;திருமண வாழ்க்கை அமைந்து விடும்

No comments:

Blogger Gadgets