குற்றாலம் : குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கற்காலம் முதல் தற்காலம் வரை மனிதனின் வாழ்க்கை முறை மாறினாலும் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சில ஐதீகங்கள் மாறாது. அந்த வகையில் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் தனித்தனியாக வழிபட வேண்டிய தெய்வங்கள், மரங்கள், பயன்படுத்த வேண்டிய நிறங்கள் என முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர். நட்சத்திரங்கள் 27. இந்த 27 நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய 27 மரங்களும் தென்றல் தவழும் குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில் அருகே வளர்க்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நட்சத்திரங்களுக்கான மரங்கள் இருக்கும் ஒரே இடமாக குற்றாலநாதர் சுவாமி கோயில் திகழ்ந்து வருகிறது.
27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய மரங்களின் விபரம்: அஸ்வினி- எட்டி, பரணி- நெல்லி, ரோகிணி- நாவல், மிருகசீரிஷம்- கருங்காலி, திருவாதிரை- செங்கருங்காலி, புனர்பூசம்- மூங்கில், பூசம்- அரசு, ஆயில்யம்- புன்னை, மகம்- ஆல், பூரம்- பலாசம், உத்திரம்- ஆத்தி, ஹஸ்தம்- அத்தி, சித்திரை- வில்வம், சுவாதி- மருது, விசாகம்- விளா, அனுஷம்- மகிழ், கேட்டை- பிராய், மூலம்- மரா, பூராடம்- வஞ்சி, உத்திராடம்- பலா, திருவோணம்- எருக்கு, அவிட்டம்- வன்னி, சதயம்- கடம்பு, பூரட்டாதி-தேவா, உத்திரட்டாதி- வேம்பு, ரேவதி- இலுப்பை. இந்த 27 நட்சத்திர மரங்களும் கோயில் அறங்காவலர் குழுவினரால் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குற்றாலம் கோயிலில் வளர்க்கப்பட்டு வரும் நட்சத்திர மரங்களை இங்கு வரும் பயபக்தியுடன் வணங்கி செல்கின்றனர்.
No comments:
Post a Comment