Wednesday, February 19, 2014

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மணவாழ்க்கை:

மகிழ்ச்சியான மணவாழ்க்கைதான் ஒவ்வொரு மனிதரின் குடும்ப வாழ்க்கைக்கும் ஆணி வேராக இருக்கும்.  வாழ்ந்தால் அவர்களைப் போல வாழ வேண்டும் என மற்றவர் உதாரணம் கூறுவதற்கேற்ப வாழ்ந்து காட்ட வேண்டும். குறை நிறை இல்லாத குடும்பங்களே இல்லை. வீட்டுக்கு வீடு வாசற்படிதான். என்றாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுடன் இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல வழியில் நடத்தி செல்வதன் மூலமே மகிழ்ச்சி என்பது அந்த குடும்பத்தில் குடியேறும். வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை என்பது குறிக்கோளாக கொள்ள வேண்டும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடித்தளமே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதுதான். விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம், அனுசரித்துச் செல்லும் குணமும் இருந்தாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காலையில் காபி போட்டுத்தர நேரமாகி விட்ட காரணத்தால் விவாகரத்து கோரும் இக்காலத்தில், மன மெர்த வாழ்க்கை அமைவதற்கு ஜெனன ஜாதகத்தில் கிரகங்களின் ஆதிக்கங்கள் பலமாக இருந்தல் அவசியம்
.
ஒருவருக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய 7ம் பாவமும், களத்திர காரகன் சுக்கிரனும் பலமாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடியவை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபசேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவைகள் ஆகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவை பாவகிரகங்களாகும். மணவாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு 7ம் அதிபதி சுபரமாக இருப்பதும், 7ம் வீட்டில் சுபகிரகம் இருப்பதும் நல்லது. 7ம் அதிபதி பாவியாக இருக்கும் பட்சத்தில் சுபர் நட்சத்திரத்தில் அமைவதும், சுபர் பார்வையுடனிருப்பதும், சொந்த வீட்டில் அமைவதும் கெடுதியில்லை. பொதுவாக 7ம் அதிபதியும் களத்திர காரகனான சுக்கிரன் கிரக சேர்க்கையின்றி தனித்து அமையப்பெற்று, சுபர் நட்சத்திரத்தில் சுபர் பார்வையுடனிருப்பது நல்லது.

7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர  ஸ்தானமான  1,4,7,10 ல் அமைந்தோ, திரிகோண ஸ்தானம்  என கூறக்கூடிய 1,5,9 லோ அமையப் பெறுவது சிறப்பு. பொதுவாக, எந்தவொரு ஸ்தானத்திற்கும் சுபகிரக பார்வை இருப்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக, குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். குரு பகவான் தான் இருக்கும் இடங்களிலிருந்து 5,7,9 ஆகிய ஸ்தானத்திற்கு கிடைக்கப் பெற்றால் அதில் எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் அதன் கெடுதிகள் அனைத்தும் விலகி நற்பலன்கள் உண்டாகும். இவ்வளவு மகத்துவங்களை பெற்ற குருவின் பார்வை ஜென்ம லக்னத்திற்கு, 7ம் வீட்டிற்கோ, 7ம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ அமையுமானால் மணவாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும், 7ம் அதிபதியும் சுக்கிரனும், பெண்களுக்கூரிய செவ்வாயும் கிரக சேர்க்கையின்றி இருப்பது நல்லது. 7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் நல்லது என்ற காரணத்தால்தான் பொதுவாக மக்கள் 7ம் இடம் சுத்தமாக இருக்கிறதா என பேச்சவாக்கில் கேட்பார்கள். திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய  2,4,8,12 ல் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் பலமாக அமையப்பெற்றால் மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

No comments:

Blogger Gadgets