Monday, March 31, 2014

பஞ்ச மகா புருஷ யோகத்தின் சிறப்பம்சங்கள்

     
ஜோதிடம் என்பது மனிதனின் உயிர் நாடியாகும். ஒவ்வொருவரின் வாழ்விலும் நடந்தவை நடப்பவை, நடக்க இருப்பவை போன்றவற்றைப் பற்றி அறிய ஜோதிடம் ஒரு கால கண்ணாடியாக விளங்குகிறது. பொதுவாக ஜோதிடர் என்பவர் ஒருவரின் ஜெனன  கால ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களை ஆராய்ந்து பலன் கூறவாரே தவிர அவரால் எதையும் மாற்றி அமைத்து விட முடியாது. கிரகங்களுக்குரிய தக்க பரிகாரங்களை செய்வதன் மூலம் வேண்டுமானால் ஒரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். சில கிரக அமைப்புகள் நற்பலனையும் சில கிரக அமைப்புகள் கெடு பலனையும் உண்டாக்கும். இதில் நற்பலனை உண்டாக்கும் கிரக அமைப்புகளால் உண்டாகும் பஞ்ச மகா புருஷ யோகத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.
     
யோகத்தில் சிறந்த யோகம் பஞ்ச மகா புருஷ யோகமாகும். பொதுவாக கேந்திர ஸ்தானங்கள் எனக் கூறப்படும் 1,4,7,10 ஆகிய ஸ்தானங்கள் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஸ்தானங்களில் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறுகின்ற போது பல்வேறு அற்புதங்கள் உண்டாகிறது. அதனைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம். 

அம்ச யோகம்

நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானமான 1,4,7,10ல் குரு ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஒருவர் ஜாதகத்தில் அமையப் பெற்றால் அம்ச யேகாம் உண்டாகிறது. இதனால் செல்வம் செல்வாக்கு புத்திர வழியில் மேன்மைகள், பெரிய மனிதர்களின் நட்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயரக் கூடிய யோகம் போன்ற பல்வேறு வகையில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும்.

ருச்சுக யோகம்

     நவ கிரகங்களில் செவ்வாய் ஒரு மிகச் சிறந்த கிரகமாகும். ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரங்களில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தால் ருச்சுக யோகம் உண்டாகிறது-. இந்த யோகத்தால் பூமி மனை வாங்கும் யோகம், நல்ல நிர்வாக திறமை, உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் போலீஸ் இராணுவம் போன்றவற்றில் பணி புரியும் வாய்ப்பு, உடன் பிறந்தவர்களால் அனுகூலம், உடலில் நல்ல ரத்த ஒட்டம், எதிலும் தைரியத்துடன் செயல்படக் கூடிய ஆற்றல் போன்ற நற்பலன்கள் உண்டாகிறது. அதிலும் குறிப்பாக 10ல் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் ருச்சுக யோகம் உண்டாவது மட்டுமின்றி திக் பலமும் பெறுவதால் பல வகையில் அதிகாரமான பதவிகளை வகிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல அறிவாற்றலும் நிர்வாகத் திறமையும் கொடுக்கும்.

பத்திர யோகம்

ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் புதன் பகவான் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது-. இதனால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபக சக்தி, சமுதாயத்திற்கு ஒரு நல்ல அந்தஸ்து உயர்வு, உண்டாகும். குறிப்பாக 4ல் பலம் பெற்றிருந்தால் கல்வியில் மிகப் பெரிய சாதனை செய்யக் கூடிய அமைப்பு, 7ல் பலம் பெற்றிருந்தால் மனைவி மற்றும் கூட்டு தொழிலால் அனுகூலங்கள் 10ல் பலம் பெற்றிருந்தால் தொழில் துறையில் சாதனை மேல் சாதனை செய்யக் கூடிய அமைப்பு உண்டாகும். பொதுவாக புதன் சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் சுபராகவும் பாவிகள் சேர்க்கை பெற்றால் பாவியாகவும் மாறுவார். புதன் பகவான் சுபர் சேர்க்கை பெற்று சுபராகும் பட்சத்தில் கேந்திரங்களில் பலம் பெற்று பத்திர யோகம் ஏற்பட்டால் கேந்திராதிபதி தோஷம் ஏற்படும் என்பதால் யோகத்தின் பலனை முழுமையாக அடைய முடியாது. புதன் பகவான் பாவிகள் சேர்க்கை பெற்று கேந்திரங்களில் அமைந்தால் மட்டுமே யோகத்தின் பலனை அடைய முடியும்.

மாளவியா யோகம்

ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் மாளவியா யோகம் உண்டாகிறது. இதனால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, செல்வம், செல்வாக்கு சேரும் யோகம், அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்களால் அனுகூலம் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை ஆபரண சேர்க்கை போன்ற யாவும் உண்டாகும். பஞ்ச மகா புருஷ யோகத்தில் மாளவியா யோகம் மட்டுமே 12 லக்ன தாரருக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேஷ லக்னத்திற்கு 7லும் ரிஷபத்திற்கு லக்னத்திலும், மிதுன லக்னத்திற்கு 10லும் கடக லக்னத்திற்கு 4லும், சிம்ம லக்னத்திற்கு 10லும் கன்னிக்கு 7லும் துலாத்திற்கு லக்னத்திலும் விருச்சிகத்திற்கு 7லும், தனுசுக்கு 4லும் மகரத்திற்கு 10லும், கும்பத்திற்கு 4லும், மீனத்திற்கு லக்னத்தில் அமையும் போது மாளவியா யோகம் உண்டாகும்.

சச யோகம்
     
ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ சனி பகவான் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சச யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் நீண்ட ஆயுள், நிலையான செல்வம், சமுதாயத்தில் நல்ல உயர்வு, மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெயர், புகழ், அசையா சொத்து யோகம், வேலையாட்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

No comments:

Blogger Gadgets