கிரஹங்கள் அடுத்த ராசிகளின் பார்வை
ஒரு ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும்போது, அதை விட்டுப் போவதற்குமுன்பே அடுத்த ராசிகளைப் பார்ப்பார்கள். கிரஹங்கள், தாங்கள் இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுமுன், அந்தந்த அடுத்த ராசியின் குண விசேஷங்களை முன்னதாகவே அடையப்பெற்று, அதற்குத் தகுந்தவாறு அடுத்த ராசியின் பலாபலன்களை ஜாதகருக்கு கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அதாவது,
சூரியன் - 5 நாள்
புதன், சுக்ரன் - 7 நாள்
செவ்வாய் - 8 நாள்
குரு - 2 மாதம் ராகு, கேது - 3 மாதம்
சனி - 6 மாதம்
ராகு, கேது இவைகள் கிரஹங்கள் அல்ல. இவைகள் சாயா கிரஹங்கள். சூரியன், சந்திரன் வானத்தில் சஞ்சாரம் செய்யும் பாதைகள் குறிக்கிடும் இடங்கள் (Nodes). இப்புள்ளிகள் அப்பிரதட்சணமாகச் சுற்றும். வராஹமிஹிரன் தான் எழுதிய பிரஹத் ஜாதகம் என்ற ஆதிகால நூலில் ராகு கேதுகளை கிரஹங்களாகக் குறிப்பிடவில்லை. மற்ற ஏழு கிரஹங்களை வைத்துதான் ஜோதிட பலன்களைக் கூறியுள்ளார். அவருக்குப் பிறகு தோன்றிய ஜோதிட மேதைகள்தான் ராகு கேதுகளையும் சேர்த்து ஒன்பது கிரஹங்களாகக் கருதி பலன்களைச் சொல்லியுள்ளார்கள். ராகு கேது எப்பொழுதும் ஒன்றுக்கொன்று சமசப்தமத்தில் அதாவது 1800 பாகைகளில் இருக்கும். ராகு கேதுகளுக்கு சொந்த வீடும் கிடையாது; பார்வைகளும் இல்லை எனப் பலர் கருதுகிறார்கள். இக்கிரஹங்கள் எந்த ராசியில் உள்ளனவோ, எந்த கிரஹத்தோடு கூடி உள்ளனவோ அல்லது எந்த கிரஹங்களின் பார்வைகளைக் கொண்டு உள்ளனவோ அக்கிரஹங்களின் தத்துவங்களைக் கொண்டுதான் பலாபலன்களை அளிப்பார்கள். க்ஷீர சாகரம் என்னும் பாற்கடலைத் தேவர்களும் அரக்கர்களும் கடைந்து அமிர்தம் எடுத்தார்கள் எனப் புராணம் சொல்கிறது. அப்பொழுது ஓர் அரக்கன் தேவவுருவில் வந்து அமிர்தத்தை விஷ்ணுவிடம் பெற்றான். மாறுவேடத்தில் வந்த அரக்கனை சூரிய சந்திரர்கள் விஷ்ணுவிற்குக் காட்டிக் கொடுத்தார்கள். அதன் பேரில் திருமால் தன் சக்ராயுதத்தால் அரக்கன் சிரத்தைத் துண்டிக்க, சிரம் ராகுவாகவும், உடல் கேதுவாகவும் ஆயிற்றென பெரியோர் கூறுவர். சூரிய சந்திரர்கள் தன்னைக் காட்டிக் கொடுத்ததால் இவர்களுக்கு ராகு கேதுவினால் பலத்த பகைமை ஏற்படுகிறது. இந்த சாயா கிரஹங்களுடன் சேர்ந்த எந்த கிரஹமும் தோஷத்தை அடைகிறது. முக்கியமாக சூரியனுக்கு ராகுவும் சந்திரனுக்குக் கேதுவும் பலத்த தோஷம் உண்டாக்குகின்றன.
No comments:
Post a Comment