ஜோதிட ரீதியாக எதிர்ப்பு உள்ள ஜாதகம்
ஜோதிட ரீதியாக எதிர்ப்பு யாருக்கு ஏற்படுகிறது என்று பார்த்தால் ஜெனன லக்கினத்தில் 6ம் அதிபதி அதிபலம் பெற்று ஜென்ம லக்கினாதிபதி பலம் இழந்து காணப்படும் நிலையில் எதிர்ப்பு ஏற்படுகிறது.
ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 6ம் வீட்டை வைத்து எதிர்ப்பு பற்றியும், எதிர்ப்பு யார் மூலம் ஏற்படும் என்பதையும் தெளிவாகக் கூற முடியும். பொதுவாக 6ம் வீட்டின் அதிபதியை விட ஜென்ம லக்கினாதிபதி பலம் பெற்று இருந்தால் எதிர்ப்பு இல்லாமல் இருக்கும். அது போல 6ம் வீடு உபஜய ஸ்தானம் என்பதால் 6ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்றவை பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் எதிர்ப்பை சமாளிக்கும் வலிமை எதிரிகளைப் பந்தாடும் பலம் உண்டாகும். 6ம் அதிபதி பலம் இழந்து காணப்பட்டாலும் 6ம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் எதிரிகளைச் சமாளிப்பதே மிகப் பெரிய வேலையாகி விடும்.
பொதுவாக யாரால் எதிர்ப்பு உண்டாகிறது என்பதைப் பார்க்கும் போது ஜென்ம லக்னத்திற்கு 6ம் வீட்டில் உள்ள கிரகம் 6ம் அதிபதி சேர்க்கை பெறும் கிரகமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும், 6ல் அமையப் பெற்றாலும் அவரே அவருக்கு எதிரியாகவும், அவரின் செயல்பாடுகளே அவரின் முன்னேற்றத்திற்கு இடையூறாகவும் அமைந்து விடுகிறது. 6ம் வீட்டின் அதிபதியை விட ஜென்ம லக்னாதிபதி பலம் பெறுவது மிகவும் உத்தமம்.
லக்கினத்திற்கு 2ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களே எதிரியாக மாறும் நிலை, கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை எதிர்ப்பாக மாறும் சூழ்நிலை, கொடுத்து வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலையால் எதிர்ப்பு உண்டாகும் அமைப்பு ஏற்படும்.
அது போல் ஜென்ம லக்கினத்திற்கு 3,6க்கு அதிபதிகள் இணைந்து 3 ஆம் அதிபதி பலம் இழந்து இருந்தால் சகோதர, சகோதரி மூலம் எதிர்ப்பு உண்டாகிறது. 3,6க்கு அதிபதியுடன் பலம் இழந்த செவ்வாய் சேர்க்கை உண்டானால் உறுதியாக சகோதரனுடன் பகைமை உண்டாகும். சகோதரர் இல்லையென்றால் பங்காளியுடனாவது எதிர்ப்பு உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 4ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றால் நெருங்கிய நண்பர்களே எதிரியாகும் சூழ்நிலை 4,6 அதிபதியுடன் சந்திரன் இணைந்தால் தாயே எதிரியாகும் அமைப்பு, தாய் வழி உறவினர்கள் எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும்.
அது போல ஜென்ம லக்னத்திற்கு 5ம் அதிபதி பலம் இழந்து 6ம் வீட்டில் அமையப் பெற்றாலும், 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும் புத்திரர்கள் எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும்.
பொதுவாக 7ம் வீட்டை களத்திர ஸ்தானம் என்றும், கூட்டுத் தொழில் ஸ்தானம் என்றும் கூறுவார்கள். 6ம் அதிபதியுடன் 7ம் அதிபதி இணைந்து பாவிகள் பார்வை பெற்றால் கைப் பிடித்த மனைவியே எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும். குறிப்பாக 7ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்து உடன் சுக்கிரன் இருந்தால் வாழ்நாள் முழுவதும் மனைவியே எதிரியாக இருக்கும் சூழ்நிலை உண்டாகும். 6,7க்கு அதிபதி சேர்க்கை பெற்று, 7ம் அதிபதி பலம் இருந்தால் கூட்டாளிகள் எதிரியாக மாறும் சூழ்நிலை உண்டாகிறது.
தந்தை ஸ்தானமான 9ம் வீட்டின் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்தால் தந்தையும், தந்தை வழி உறவினர்களும் எதிரியாக மாறும் சூழ்நிலை 6,9க்கு அதிபதிகள் சேர்க்கையுடன் சூரியன் இணைந்தால் உறுதியாக தந்தையால் மிகப் பெரிய எதிர்ப்பை எதிர் கொள்ள நேரிடும்.
தொழில் ஸ்தானமான 10ம் அதிபதி பலம் இழந்து 6ல் அமைந்தாலும், 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும் செய்யும் தொழிலில் எதிர்ப்பு, உத்தியோகத்தில் இருந்தால் சக ஊழியர்கள் எதிர்ப்பு என பல்வேறு சோதனைகளை எதிர் கொள்ள நேரிடும்.
11ஆம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதி சேர்க்கை பெற்றால் மூத்த உடன் பிறப்புடனும், நெருங்கிய உறவினர்களுடனும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். பொதுவாக 6ம் அதிபதியுடன் சேர்க்கை பெறும். கிரகத்தின் இயல்புக்கு ஏற்ப எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும் 6ம் வீட்டை குரு போன்ற சுப கிரகங்கள் பார்வை செய்தால் எதிர்ப்பைச் சமாளிக்கும் திறன் ஏற்படும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மறையும்.
No comments:
Post a Comment