Thursday, March 27, 2014

பஞ்சம ஸ்தானமும் புத்திர பாக்யமும்



       
ஜென்ம லக்னத்திற்கு பஞ்சம ஸ்தானம் என வர்ணிக்கப்டும் 5 ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும் 5 ஆம் வீட்டை புத்திரன், புத்திரி, பூர்வீகம், உயர் கல்வி போன்றவைகளை மிகத் தெளிவாக அறிய உதவும் பாவமாகும். போட்டி பொறாமைகள் நிறைந்த இவ்வுலகில் நமது பூர்வீகம் பலமாக இருந்தால் தான் இந்த எந்திர உலகில் எளிதில் ஜீவிக்க முடியும்.
     
அதாவது மானிடனாய் பிறப்பதில் பூர்வ புண்ணிய பலத்துடன் பிறப்பது மிகவும் நல்லது. நம் மூதாதையர் முன்னோர்கள் நமக்கென சொத்து, சுகங்கள், சேர்த்து வைப்பது மட்டுமின்றி சில புண்ணியங்களை சேர்த்து வைத்திருந்தால் தான் எந்த வித கெடுதியும் இன்றி சுக போக வாழ்க்கையினை இவ்வுலகில் வாழ முடியும்.
     
சொத்துக்கள் ஒரு புறம் இருந்தாலும் நம் முன்னோர்கள் எதாவது கெடுதலை செய்து விட்டால் அது நம்மையும் நம் சந்தியினரையும் அதிகமாக பாதிக்கும். ஜாதகம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் ஒருவரது பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களது வாழ்வு சங்கடங்கள் நிறைந்ததாகி விடும்.
     
ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், போன்றவை ஏன் ஏற்படுகின்றது என்று பார்த்தால் நம் முன்னோர்கள் யாராவது நாகத்தை அடித்துக் கொன்று விட்டாலும் இரு நாகங்கள் இணைந்து சந்தோஷமாக இருக்கின்ற பொழுது அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி விட்டாலும் இது போன்ற நாக தோஷத்தால் நாகம் என வர்ணிக்கப்படும் ராகு பகவானால் தோஷங்கள் உண்டாகி புத்திர பாக்கியம் பெறத் தடை திருமணத் தடை போன்ற அனுகூலமற்ற பலன் உண்டாகிறது. இதற்கு பரிகாரமாக ராகு, கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் விலகி நல்லது உண்டாகிறது. அது போல ஒருவரது தந்தை, பாட்டன் போன்றோர் மற்ற பெண்களின் வாழ்க்கையில் சில கெடுதிகளை செய்து விட்டால் அதுவே களத்திர தோஷமாக மாறி திருமணத் தடை திருமணம் அமைந்தாலும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.

      இது போன்ற கெடுதிகள் எல்லாம் விளக்கும் பாவமாக விளங்குவது 5 ஆம் பாவமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5 ஆம் அதிபதி நீசம் பெற்று பகை பெற்றிருந்தாலும் 5 ஆம் அதிபதி சனி ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்படுகிறது. அதாவது பூர்வீக வழியில் ஜாதகருக்கு அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகிறது. அது மட்டுமின்றி பூர்வீக வழியில் அதாவது உறவினர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகிறது-. 5 ஆம் வீடு பூர்வீக ஸ்தானம் மட்டுமின்றி புத்திர ஸ்தானமும் என்பதால் தகுந்த காலத்தில் நல்ல குழந்தைகளை ஈன்றெடுக்க முடியாத அவல நிலை உண்டாகிறது.
     
பொதுவாக இவ்வளவு சிறப்பு வாய்ந்து 5 ஆம் வீடு பலம் பெற்றிருந்தால் நல்ல புத்திரர்களை ஈன்றெடுக்கும் அமைப்பு பூர்வீகத்தால் ஏற்றம், உயர்வு உண்டாகும். குறிப்பாக 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 5ஆம் வீட்டில் குரு, சுக்கிரன் சந்திரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும் 5 ஆம் வீட்டை சுபர் பார்வை செய்து 5ல் பாவிகள் இல்லாமல் இருந்தாலும் அந்த ஜாதகரின் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலைமுறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும். அது மட்டுமின்றி 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ஜாதகரின் வாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அது மட்டுமின்றி அழகிய குழந்தைகளை ஈன்றெடுக்கும் அமைப்பு, புத்திரர்களால் மகிழ்ச்சி, உண்டாகும்.

No comments:

Blogger Gadgets