புத்திர பாக்கியத்தில் ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா ?
பெண்ணிற்கு தாய்மையடையும் பாக்கியம் உண்டாவதைப் பற்றி ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒருவரின் ஜனன ஜாதக ரீதியாக 5ம் பாவம் புத்திர ஸ்தானம் என்றாலும், பெண்களுக்கு 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும் புத்திர ஸ்தானமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி நவகிரகங்களில் குரு பகவான் புத்திர காரகனாக கருதப்படுகிறார்.
எனவே, பெண்களுக்கு 5ம் பாவமும் 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும், புத்திர காரகன் குருவும் பலமாக அமைந்துவிட்டால் சிறப்பான புத்திர பாக்கியத்தை பெற்றெடுக்கும் யோகமும் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கும், சந்திரனுக்கும் 5,9 க்கு அதிபதிகள் ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான தாய்மை யோகம் உண்டாவது மட்டுமின்றி புத்திர காரகன் குருவும் பலம் பெற்று 5,9ம் பாவத்தையோ 5,9 ம் அதிபதிகளையோ பார்வை செய்தால் அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கும் யோகம் பெண்ணிற்கு உண்டாகிறது. 5,9 ம்வீடுகள் சுபக்கிரகங்களின் வீடாக இருந்து சுப பார்வை பெறுவது நல்லது. 5,9 ம் அதிபதிகள் பாவியாக இருந்தாலும், வலுப்பெற்று அமைந்து சுப பார்வை பெறுவதாலும் சிறப்பான தாய்மை பாக்கியத்தை உண்டாக்கும்.
ஆண்குழந்தை பாக்கியம்
குறிப்பாக, ஆண்குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியம் யாருக்கு அமைகிறது என பார்த்தால், நவக்கிரகங்களில் ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் 5,9 ல் இருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளாக இருந்தாலும் அழகான ஆண் குழந்தை யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி ஆண் கிரகங்களின் வீடு என வர்ணிக்கப்படக்கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் 5,9 க்கு அதிபதிகள் பலமாக அமைந்திருந்தால் சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பெண் குழந்தை யோகம்
பெண் குழந்தை என்றாலே கருவிலேயே கலைத்து விடக்கூடிய அவலநிலையும், கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் சூழ்நிலைகளும் மாறி ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை உண்டாகி உள்ளதால், பெண் குழந்தைகளைபெற்றெடுக்கும் யோகம் யாருக்கு என பார்க்கின்ற போது, நவகிரகங்களில் பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன், சுக்கிரன் ஆகியவை 5,9 ல் வலுவாக அமைந்தாலும், 5,9 க்கு அதிபதிகளாக இருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளின் சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும் அழகிய பெண் குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல 5,9 க்கு அதிபதிகள் ரிஷபம், துலாம், கடகம் ஆகிய பெண்கிரக வீடுகளில் இருந்தாலும் சிறப்பான பெண் குழந்தை யோகம் உண்டாகும்.
No comments:
Post a Comment