Thursday, March 27, 2014


தன யோகம்

பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு தன ஸ்தானம் ஆகும். 11ம் வீடு லாபஸ்தானம் ஆகும். 9ம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 4ம் வீடு அசையும், அசையா சொத்து ஸ்தானமாகும். 10ம் வீடு தொழில் ஸ்தானமாகும். 

பொதுவாக தன ஸ்தானாதிபதி 1, 4, 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், பாக்கிய ஸ்தானமான 9ம் அதிபதி 1, 2, 4, 5 10, 11க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் பரிவர்த்தனைப் பெற்றாலும் 10ம் அதிபதி 1, 2, 4, 5, 11க்கு அதிபதிகளுடன், சேர்க்கை பெற்றாலும் 11ம் அதிபதி 1, 2, 4 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும் லக்னாதிபதி 4, 5க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றாலும், தாராள தன வரவு உண்டாகும்.

பொதுவாக தனாதிபதி எந்த கிரக சேர்க்கை பெறுகிறதோ, எந்த பாவாதிபதியுடன் சேர்க்கை பெறுகிறதோ, அந்த பாவம், அக்கிரகம் யாரை குறிக்கிறதோ அவர்கள் மூலம் தாராளமான தன வரவுகள் உண்டாகும்.

தந்தை
ஜென்ம லக்னத்திற்கு 9ம் வீடு தந்தை ஸ்தானம்.  தந்தை காரகன் சூரியன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் 2, 9க்கு அதிபதி பலம் பெற்று இருந்தாலும் 2, 9க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று உடன் சூரியனும் பலம் பெற்றிருந்தாலும் 2, 9ல் பாவ கிரகங்கள் அமையாமல் சூரியன் பாவிகள் சேர்க்கை பெறாமலும் இருந்தால் தந்தை மூலமாக தாராள தன வரவு உண்டாகும். குறிப்பாக 9ம் அதிபதி வலுவாக அமையப் பெற்று 2, 4க்கு அதிபதிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் தந்தை மூலமாக தாராள தன வரவுகள் உண்டாகும்.

தாய்
ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீடு தாய் ஸ்தானம் ஆகும். 2ம் அதிபதியும் 4ம் அதிபதியும் இணைந்திருந்தாலோ, பரிவர்த்தனைப் பெற்றாலும், சுபர் வீட்டில் அமையப் பெற்று சுபர் பார்வை பெற்றாலும், இருவரும் இணைந்து பலம் பெற்றாலும் தாய் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். 

அதுபோல தாய் காரகன் சந்திரன் 2, 4க்கு அதிபதிகளுடன் இணைந்து பலமாக அமையப் பெற்றால் தாய் வழியில் நல்ல அனுகூலம் மிகுந்த பலன்கள் உண்டாகும்.

சகோதரன்
ஜென்ம லக்னத்திற்கு 3ம் பாவம் இளைய சகோதர ஸ்தானம் ஆகும். 11ம் வீடு மூத்த சகோதர ஸ்தானம் ஆகும். சகோதர காரகன் செவ்வாய் ஆவார். பொதுவாக 1, 3க்கு அதிபதிகள் குரு போன்ற சுப கிரக சேர்க்கைப் பெற்று 2ல் அமையப் பெற்றாலும் 3ம் அதிபதி 2ல் அமையப் பெற்று குரு போன்ற சுப கிரக பார்வை பெற்றாலும் 2, 3க்கு அதிபதிகள் இணைந்து கேந்திர திரிகோணங்களில் பலம் பெற்றாலும் 3ம் அதிபதி செவ்வாய் சேர்க்கையோ, பார்வையோ பெற்று 2ம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 3, 11க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் உடன் பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள் ஏற்றங்கள் உண்டாகும். 

3ம் அதிபதி உச்சம் பெற்று ஆண் கிரகப் பார்வை பெற்றாலும் 3, 4க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும் 3, 4க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றோ, சேர்க்கைப் பெற்றோ உடன் செவ்வாய் இருந்தாலும், 3, 10க்கு அதிபதிகள் சேர்க்கைப் பெற்றோ, பார்வை பெற்றோ இருந்தாலும் உடன்பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள், அசையா சொத்து யோகம், கூட்டுத் தொழில் யோகம், தாராள தன சேர்க்கை உண்டாகும்.

மனைவி
ஜென்ம லக்னத்திற்கு 7ம் பாவம் மனைவி ஸ்தானம் ஆகும. மனைவிக்கு காரகன் சுக்கிரன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரனும் 7ம் வீட்டு அதிபதியும் பலமாக இருந்தால் மனைவி மூலமாக தாராளமான தன வரவுகள் உண்டாகும். 

குறிப்பாக 7ம் அதிபதி 2, 4, 5, 9, 11க்கு அதிபதிகளுடன் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் கேந்திர திரிகோணாதிபதியுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் மனைவி மூலமாக அசையா சொத்து சேர்க்கை அனுகூலங்கள் உண்டாகும். சுக்கிரனும் பலம் பெற்று விட்டால் தாராளமான தன வரவுகள் மனைவி மூலம் யோகங்கள் ஏற்றங்கள் உண்டாகும். அதுமட்டுமின்றி 7, 10க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றால் மனைவியுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்து தாராளமான தன வரவினை அடையும் அமைப்பு உண்டாகும்.
பூர்வீகம்
ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். ஒருவர் ஜாதகத்தில் 5ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையாமல் 5ம் அதிபதி 2, 9, 11க்கு அதிபதிகளுடன் சேர்க்கைப் பெற்றாலும் பரிவர்த்தனைப் பெற்றாலும் பூர்வீக வழியில் சொத்துக்கள் தாராளமான தன வரவுகள் உண்டாகும்.

குறிப்பாக 5ம் அதிபதி 4ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றாலும், 4, 5க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும்,  வலுவாக அமையப் பெற்றாலும் பூர்வீக வழியில் சொத்துக்களை அடையும் யோகமும் அதன் மூலம் தாராள தன வரவும் உண்டாகும்.

No comments:

Blogger Gadgets