Monday, March 31, 2014


திருமணத்திற்கு தடையை ஏற்படுத்தும் 

களத்திர தோஷம்

பொதுவாக நமது ஜனனகாலத்தை வைத்துத்தான் ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இருப்பிடங்களைக் குறிக்கிறார்கள். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. 

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சென்ற பிறவியில் செய்த தவறுகள், பாதகங்கள், பாவங்களைப் பொறுத்தே கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இடம் பெறும். பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீய பலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. 

நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம். பிரச்சனை என்ற ஒன்று இருந்தால், தீர்வு என்று ஒன்று இருக்க வேண்டுமே. அந்தத் தீர்வுகளைத் தான் பரிகாரம் என்று சொல்கிறோம். ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் என்ன? அவற்றிற்கு உரிய பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம். 

இப்போது களத்திர தோஷத்தைப் பற்றியும் அதற்கான பரிகாரப் பலன்களையும் பார்ப்போம். களத்திரம் என்றால் இல்வாழ்க்கைத் துணையைக் குறிப்பதாகும். களத்திர தோஷம் என்றால் இல்வாழ்க்கையில் அதாவது திருமண வாழ்க்கையில் ஏற்படும் தோஷம் அல்லது தடையைக் குறிப்பதாகும். 

களத்திரகாரகன் அல்லது களத்திரஸ்தானாதிபதி சுக்கிரனாகும். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் 7-வது இடம் தான் களத்திர ஸ்தானம். களத்திர தோஷம் ஏற்படக் காரணமாயிருக்கும் கிரகங்கள், கிரக சேர்க்கைகள் எவை என்றால் - லக்கினத்திற்கு 7-இல் அதாவது களத்திர ஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை, லக்கினத்திற்கு 7-இல் சுக்கிரன் நீச்சம் பெற்று இருத்தல், 

லக்கினத்திற்கு 7-க்கு உடையவன் 6,8,12-இல் தனித்து இருத்தல், பாபக்கிரகங்களுடன் சேர்ந்து இருத்தல், லக்கினத்திலிருந்து, 3,7,9-இல் பாபக் கிரகங்கள் இருத்தல் லக்கினத்திலிருந்து 7-க்கு உடையவனின் திசை நடத்தல், 7-இல் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்திருத்தல், 4-ஆம் இடத்தில் சனி, செவ்வாய், 

ராகு அல்லது கேது சேர்ந்திருத்தல் ஆகும். இதை இன்னும் சுருக்கமாகச் சொன்னால் 7-வது வீட்டிற்கு உரிய கிரகமோ அல்லது சுக்கிரனோ, பாவக் கிரகங்களின் பார்வை பெற்று இருந்தாலோ அல்லது 6,8-க்கு உரியவனிடம் சேர்ந்து இருந்தாலோ அல்லது 6,8,12-இல் மறைந்து இருந்தாலோ களத்திர தோஷம் என்று அர்த்தம். பொதுவாக, லக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் உள்ள கிரகங்களைக் கொண்டு தான், 

ஒருவருக்கு களத்திர தோனூம் இருக்கிறதா, இல்லையா என்று ஜாதகர்கள் முடிவு செய்கிறார்கள். சிலர், லக்கினத்திற்கு ஏழு, எட்டு ஆகிய வீடுகள் காலியாக இருந்தால் சுத்த ஜாதகம் என்று சொல்வார்கள். அப்படிச் சொல்லிவிட முடியாது. ஏழுக்கு உடையவனின் வலிமை, சுக்கிரனின் வலிமையை வைத்தே களத்திர ஸ்தானத்தில் தோஷம் உள்ளதா, இல்லையா என்ற முடிவிற்கு வரவேண்டும். 

சில கிரகங்களுக்கு 7-இல் சுப கிரகங்கள் இருந்தாலும், சுக்கிரன் நல்லதல்ல, இதனை "காரகோ பாவ நாஸ்தி'' என்று ஜோதிட நூல்கள் வர்ணிக்கின்றன. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்கினங்களுக்கு 7-இல் புதன், குரு, போன்ற சுப கிரகங்கள் இருந்தாலும், களத்திர தோஷம் இருக்கிறது. 

களத்திர தோஷம் இருந்தால், அதனை நிவர்த்தி செய்யாமல் திருமணம் செய்யக்கூடாது. களத்திர தோஷம் இருப்பவர்களுக்கு பொதுவாகத் திருமணம் தாமதமாகும். சிலருக்கு திருமணம் நடப்பதே குதிரைக் கொம்பாகிவிடும். இதனையும் மீறி, தோஷம் இருந்து, திருமணம் நடந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் தோன்றி, திருமண பந்தம் முறியும். 

களத்திர ஸ்தான அதிபதி, களத்திர காரகனான சுக்கிரன் பகைவீட்டில், பகை கிரகங்களின் பார்வையில் இருந்தால், கணவன் அல்லது மனைவியின் பிரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. 7-ஆம் பாவத்தில், சுக்கிரன் அமையும் பொழுது, அதனுடன் சேரும் கிரகங்கள் தன்மையை வைத்து ஏற்படக்கூடிய சுபயோகத்தை இப்போது பார்க்கஷாம். 

சுக்கிரன், சந்திரன் சேர்ந்திருந்தால், நல்ல மனைவி, தனம் கிடைக்கும், புதன், சுக்கிரன் இருந்தால் - சரீரசுகம் பெற்றவராக இருப்பார். மனைவி அழகானவளாக, நல்லவளாகக் கிடைப்பாள். சூரியன், சுக்கிரன், சனி, இருந்தால்-தான், தருமங்கள் செய்வதில் நாட்டமிருக்கும். 

அதிகமான காம உணர்வும் தோன்றும். சுக்கிரன், புதன், சந்திரன் இருந்தால், கௌரவமான வாழ்க்கை கிடைக்கும். சுக்கிரன், சந்திரன், சனி, இருந்தால் வேத விற்பன்னராக இருப்பர். குரு, சுக்கிரன், சந்திரன் இருந்தால், பெண்களுக்கு மிகவும் பிரியமானவராக இருப்பர். நற்குணங்களும் இருக்கும். சுக்கிரன், குரு செவ்வாய் இருந்தால் பெரும் புகழ் கிட்டும். 

அரசின் ஆதரவும் இருக்கும். சுக்கிரன், சந்திரன், சனி இருந்தால் செல்வம் செல்வாக்கு கிட்டி, சுக போக வாழ்க்கையும் கிட்டும். சுக்கிரன், புதன், சந்திரன் இருந்தால் தலைவனாகும் நிலை அல்லது தலைமைப் பதவியை வகிக்கும் நிலை உண்டாகும். சுக்கிரன், குரு, புதன், இருந்தால் அதிகப் பொருள் வரவு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நல்ல மனைவி போன்றவைகள் கிடைக்கும். 

சுக்கிரன், புதன், சனி இருந்தால் - பொன், பொருள் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றலும் இருக்கும். சுக்கிரன், குரு, சனி இருந்தால், சகல வசதிகளும் பெற்று, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர எப்போதும் ஆட்கள் காத்துக்கிடப்பார்கள். 

குரு, சுக்கிரன் இருந்தால் - நல்ல புத்தியோடு பகையை வெல்லும் சாமர்த்தியமும் இருக்கும். சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் இருந்தால் அந்த ஜாதகர் அழகுடையவராக இருப்பார். பலருக்கு நியாயம் சொல்லும் நீதிபதியாகவும் இருப்பார். 

சுக்கிரன், குரு, செவ்வாய், சந்திரன் இருந்தால் சகஷ காரியங்களிலும் கெட்டிக் காரராகவும், தர்மவானாகவும் இருப்பர். சுக்கிரன், குரு, செவ்வாய், சனி, இருந்தால் உண்மையாக வாழ்பவராக, மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருப்பர்.

குருவுடன் மற்ற கிரகங்கள் சேர்கை பலன்கள் 

குருவுடன் சூரியன் சேர்ந்தால் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் கிட்டும். செல்வாக்கைப் பயன்படுத்தி வாழ்க்கையில் பல வெற்றிகளை எளிதாகப் பெற முடியும். சில சாதனைகளைப் புரிந்து மற்றவர்களுடைய பாராட்டைப் பெறுவார்கள். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். 

குருவுடன் சந்திரன் சேர்ந்தால் மிகவும் யோகமான பலன்கள் கிடைக்கும். செல்வச் செழிப்பில் மிதப்பார்கள். ஏராளமான வருமானம் வரும். எவ்வளவு செலவு செய்தாலும் செல்வம் குறையாது. வாழ்க்கையில் மிகவும் வசதியாக வாழ்வார்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். உற்சாகத்துடன் செயல்படுவார்கள். 

குருவுடன் செவ்வாய் சேர்ந்தால் மிகவும் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். ஏராளமாகச் செல்வம் சேரும். வீடு, நிலம், பூமி, பொன்னாபரணங்கள் சேரும். வாகன வசதி உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும். தெய்வீகப் பணிகளில் சிறப்பாகச் செயலாற்றுவார்கள். 

குருவுடன் புதன் சேர்ந்தால் தொழில், வியாபாரத்தில் பல நெருக்கடிகள் தோன்றும். எதிர்பார்க்கும் லாபம் கிட்டாது. வருமானத்தை விடச் செலவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் சண்டையும் சச்சரவுமாக இருக்கும். நினைப்பது போல் எதுவும் நடக்காது. பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் திணற வேண்டியிருக்கும். 

குருவுடன் சுக்கிரன் சேர்ந்தால் அவர்கள் எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தாலும் அதை வெளிக்காட்டுவதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்காது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறுவது போல் தோன்றினாலும் லாபம் குறைவாகக் கிட்டும். செல்வாக்கு நன்றாக இருக்கும். 

குருவுடன் சனி சேர்ந்தால் தொழில், வியாபாரத்தில் தாராளமாக இலாபம் கிட்டினாலும் பல சிக்கல்கள் தோன்றும். மனைவியாலும் உடன் பிறந்தவர்களாலும் பல பிரச்சினைகள் ஏற்படும். சொத்துகள் சம்பந்தமாக விவகாரங்களும் வழக்குகளும் ஏற்படும். கடுமையாகச் செயல்பட்டே எந்த வெற்றியையும் பெற முடியும்.


 குருவுடன் ராகு சேர்ந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும். அசையா சொத்துகளும் பொன்னாபரணங்களும் சேரும். வாகன வசதி உண்டாகும். கவுரவப் பதவிகளும் உயர் பதவிகளும் தேடி வரும். விவாகரத்து பெற்ற பெண்கள், விதவைகள், நடிகைகள் போன்றோருடைய தொடர்பால் பல நன்மைகள் ஏற்படும். வளமான வாழ்க்கை அமையும். 

குருவுடன் கேது சேர்ந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும். அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் கிட்டும். வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதித்து வருவார்கள். வேறு மொழி பேசும் மனிதர்களால் பல பயனுள்ள நன்மைகள் ஏற்படும். செல்வ வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.

சச யோகம்


ஜெனன ஜாதகத்தில் யோகங்கள் சிறப்பாக அமைந்தால் தான் வாழ்வு மிக சிறப்பாக இருக்கும். நவ கிரகங்கள் ஆயுள் காரகன் என்று வர்ணிக்கப்படும் சனி பகவான் சிறப்பாக அமைந்தால் ராஜ போக வாழ்வு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் சனி பகவான் மகரம் கும்பத்தில் அமைந்து ஆட்சி பெற்றோ, சனி துலாத்தில் அமைந்து உச்சம் பெற்று இருந்து சனி அமைந்த வீடு லக்கின கேந்திரமாகவே, சந்திர கேந்திரமாகவோ இருந்தால் சச யோகம் உண்டாகிறது. சச யோகம் ஆனது பஞ்சமகா புருஷ யோகத்தின் ஒரு பிரிவு ஆகும். ஆயுள் காரகனான சனியால் இந்த யோகம் உண்டாகுவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார். அது மட்டுமின்றி சமுதாயத்தில் கௌரவம் மிக்க பதவிகளை அடையும் யோகம் உண்டாகும். குறிப்பாக சச யோகம் உண்டானால் அரசனுக்கு ஒப்பான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும் என பண்டை கால நூல்கள் கூறுகிறது.

     பலரை வழி நடத்து உன்னத அமைப்பு, நல்ல அறிவாற்றல் மக்கள் செல்வாக்கு உண்டாகும். குறிப்பாக சக யோகம் உண்டாகிவருக்கு சனி மகா திசை நடைமுறையில் வந்தால் அவர்கள் வாழ்வை மிக சிறப்பாக இருக்கும். அது போல சுக்கிரன் லக்கினமான ரிஷபம், துலாத்தில் பிறந்தவர்களுக்கும், புதன் லக்கினமான மிதுனம், கன்னியில் பிறந்து சந்திர கேந்திரத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் சனி லக்னமான மகரம் கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சசயோகம் உண்டாகி சனி திசை வந்தால் வாழ்வில் மிகப் பெரிய ஏற்றம் உண்டாகும்.  சனிக்கு பகை கிரகமான சூரியன், செவ்வாய் லக்கினத்தில் (சிம்மம், மேஷம், விருச்சிகம்) பிறந்தவர்களுக்கு சனியால் உண்டாகும் யோகம், சனி திசை பலா பலன்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூறு முடியாது.

பஞ்ச மகா புருஷ யோகத்தின் சிறப்பம்சங்கள்

     
ஜோதிடம் என்பது மனிதனின் உயிர் நாடியாகும். ஒவ்வொருவரின் வாழ்விலும் நடந்தவை நடப்பவை, நடக்க இருப்பவை போன்றவற்றைப் பற்றி அறிய ஜோதிடம் ஒரு கால கண்ணாடியாக விளங்குகிறது. பொதுவாக ஜோதிடர் என்பவர் ஒருவரின் ஜெனன  கால ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களை ஆராய்ந்து பலன் கூறவாரே தவிர அவரால் எதையும் மாற்றி அமைத்து விட முடியாது. கிரகங்களுக்குரிய தக்க பரிகாரங்களை செய்வதன் மூலம் வேண்டுமானால் ஒரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். சில கிரக அமைப்புகள் நற்பலனையும் சில கிரக அமைப்புகள் கெடு பலனையும் உண்டாக்கும். இதில் நற்பலனை உண்டாக்கும் கிரக அமைப்புகளால் உண்டாகும் பஞ்ச மகா புருஷ யோகத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.
     
யோகத்தில் சிறந்த யோகம் பஞ்ச மகா புருஷ யோகமாகும். பொதுவாக கேந்திர ஸ்தானங்கள் எனக் கூறப்படும் 1,4,7,10 ஆகிய ஸ்தானங்கள் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஸ்தானங்களில் கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறுகின்ற போது பல்வேறு அற்புதங்கள் உண்டாகிறது. அதனைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்ப்போம். 

அம்ச யோகம்

நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானமான 1,4,7,10ல் குரு ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஒருவர் ஜாதகத்தில் அமையப் பெற்றால் அம்ச யேகாம் உண்டாகிறது. இதனால் செல்வம் செல்வாக்கு புத்திர வழியில் மேன்மைகள், பெரிய மனிதர்களின் நட்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயரக் கூடிய யோகம் போன்ற பல்வேறு வகையில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும்.

ருச்சுக யோகம்

     நவ கிரகங்களில் செவ்வாய் ஒரு மிகச் சிறந்த கிரகமாகும். ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரங்களில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தால் ருச்சுக யோகம் உண்டாகிறது-. இந்த யோகத்தால் பூமி மனை வாங்கும் யோகம், நல்ல நிர்வாக திறமை, உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் போலீஸ் இராணுவம் போன்றவற்றில் பணி புரியும் வாய்ப்பு, உடன் பிறந்தவர்களால் அனுகூலம், உடலில் நல்ல ரத்த ஒட்டம், எதிலும் தைரியத்துடன் செயல்படக் கூடிய ஆற்றல் போன்ற நற்பலன்கள் உண்டாகிறது. அதிலும் குறிப்பாக 10ல் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் ருச்சுக யோகம் உண்டாவது மட்டுமின்றி திக் பலமும் பெறுவதால் பல வகையில் அதிகாரமான பதவிகளை வகிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல அறிவாற்றலும் நிர்வாகத் திறமையும் கொடுக்கும்.

பத்திர யோகம்

ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் புதன் பகவான் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது-. இதனால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபக சக்தி, சமுதாயத்திற்கு ஒரு நல்ல அந்தஸ்து உயர்வு, உண்டாகும். குறிப்பாக 4ல் பலம் பெற்றிருந்தால் கல்வியில் மிகப் பெரிய சாதனை செய்யக் கூடிய அமைப்பு, 7ல் பலம் பெற்றிருந்தால் மனைவி மற்றும் கூட்டு தொழிலால் அனுகூலங்கள் 10ல் பலம் பெற்றிருந்தால் தொழில் துறையில் சாதனை மேல் சாதனை செய்யக் கூடிய அமைப்பு உண்டாகும். பொதுவாக புதன் சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் சுபராகவும் பாவிகள் சேர்க்கை பெற்றால் பாவியாகவும் மாறுவார். புதன் பகவான் சுபர் சேர்க்கை பெற்று சுபராகும் பட்சத்தில் கேந்திரங்களில் பலம் பெற்று பத்திர யோகம் ஏற்பட்டால் கேந்திராதிபதி தோஷம் ஏற்படும் என்பதால் யோகத்தின் பலனை முழுமையாக அடைய முடியாது. புதன் பகவான் பாவிகள் சேர்க்கை பெற்று கேந்திரங்களில் அமைந்தால் மட்டுமே யோகத்தின் பலனை அடைய முடியும்.

மாளவியா யோகம்

ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் மாளவியா யோகம் உண்டாகிறது. இதனால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, செல்வம், செல்வாக்கு சேரும் யோகம், அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்களால் அனுகூலம் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை ஆபரண சேர்க்கை போன்ற யாவும் உண்டாகும். பஞ்ச மகா புருஷ யோகத்தில் மாளவியா யோகம் மட்டுமே 12 லக்ன தாரருக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேஷ லக்னத்திற்கு 7லும் ரிஷபத்திற்கு லக்னத்திலும், மிதுன லக்னத்திற்கு 10லும் கடக லக்னத்திற்கு 4லும், சிம்ம லக்னத்திற்கு 10லும் கன்னிக்கு 7லும் துலாத்திற்கு லக்னத்திலும் விருச்சிகத்திற்கு 7லும், தனுசுக்கு 4லும் மகரத்திற்கு 10லும், கும்பத்திற்கு 4லும், மீனத்திற்கு லக்னத்தில் அமையும் போது மாளவியா யோகம் உண்டாகும்.

சச யோகம்
     
ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ சனி பகவான் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சச யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் நீண்ட ஆயுள், நிலையான செல்வம், சமுதாயத்தில் நல்ல உயர்வு, மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெயர், புகழ், அசையா சொத்து யோகம், வேலையாட்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

பன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்


 நவ கிரகங்களில் நிழல் கிரகம் என வர்ணிக்கப்படும் ராகு&கேது இருவருக்கு சொந்த வீடு இல்லை. தங்கள் இருக்கும் இடத்தையே சொந்த வீடாக கொண்டு பலன் தருவார்கள். பொதுவாக ராகு பகவான் தந்தை வழி தத்தாவிற்கு திடீர் வளர்ச்சி, தீய பழக்க வழக்கம், வேறு சாதி, வேறு மதம், வயிறு கோளாறு, விபத்து, நவீன கரமான செயல் போன்றவைக்கு காரகன் ஆவார். 

கேது பகவான் ஞானம், தெய்வீக செயல், ஆன்மீக பணி, காதல், வேறு சாதி, வேறு மதம், விஷத்தால் கண்டம் போன்றவைக்கும், மறு ஜென்மத்திற்கு காரகன் ஆவார். பொதுவாக ராகு&கேது பாவிகள், உப ஜய ஸ்தானமான 3,6,10,11ல் ஜெனன காலத்தில் அமையப் பெற்றால் அனுகூல பலனை உண்டாக்குவார். ராகு கேது இருவரும் கேந்திரத்தில் இருந்தால் அந்த பாவத்தை பாதித்தாலும் ராகு கேது நின்ற வீட்டதிபதி பலமாக இருந்தால் ஏற்ற மிகு பலனை உண்டாக்குகிறார்கள். பொதுவாக சனி சுக்கிரன் நண்பர்கள், புதன், கேது சமம். சூரியன், சந்திரன், செவ்வாய் பகைவர்கள், ராகு&கேது இருவரும் உடன் இருக்கும் கிரகத்தின் இயல்புக்கு ஏற்ற படி பலனை வழங்குவார்கள். ராகு கேது பொதுவாக தோஷத்தை உண்டாக்கி வாழ்வில் பல்வேறு நிலையில் இடையூறுகளை உண்டாக்குகிறார்கள்.
     
ஜென்ம லக்கினத்திற்கு 12 பாவங்களில் ராகு&கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்;-&
    
ஜென்ம லக்கினத்தில் ; ராகு  இருந்தால் முன் கோபம், வேகம், விவேகம், முரட்டுத்தனம் அகோர முகம் இருக்கும். கேது இருந்தால் நிதானம், ஆன்மீக, தெய்வீக எண்ணம், சோம்பேறித்தனம் ஏற்படும்.

2ல் இருந்தால் ;  2ல் ராகு இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத நிலை, பேச்சில் முரட்டுத்தனம், தன நெருக்கடி, களத்திர தோஷம் உண்டாகும். 2ல் கேது இருந்தால் ;  பேச்சில் நிதானம், குடும்ப வாழ்வில் ஈடுபாடு இல்லாத நிலை, ஆன்மீக தெய்வீக செயல்களில் ஈடுபாடு ஏற்படும்.
     
3ல் இருந்தால்  ;  3ல் ராகு இருந்தால் எடுக்கும் முயற்சியில் வெற்றி தைரியம் துணிவு ஏற்படுமென்றாலும்  சகோதர தோஷத்தை தரும் 3ல் கேது இருந்தால் ;  ஏற்றம், உயர்வு, உடன் பிறப்பிற்கு தோஷம் என்றாலும் பெண் உடன் பிறப்பு ஏற்படலாம்.
     
4ல் இருந்தால் ;  4ல் ராகு இருந்தால் கல்வியில் தடை, தாய்க்கு தோஷம் கண்டம், சொந்த வீடு வாகனம், அமையத் தடை, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்பு ஏற்படும் 4ல் கேது இருந்தால் ;  தாய்க்கு தோஷம், கல்வியில் தடை என்றாலும் மருந்து கெமிக்கல் தொடர்புள்ள கல்வி, பரந்த மனப்பான்மை உண்டாகும்.

5ல் இருந்தால் ;  ராகு 5ல் இருந்தால் உயர் கல்வியில் தடை, பூர்வீக தோஷம், புத்திர தோஷம் வயிறு வலி உண்டாகும். கேது 5ல் இருந்தால் ;  வயிறு கோளாறு, புத்திர தோஷம் என்றாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும்.
     
6ல் இருந்தால் ;  ராகு 6ல் இருந்தால் எடுக்கும் முயற்சி வெற்றி, எதிரிகளை வெல்லும் அமைப்பு தைரியம் துணிவு உண்டாகும். நிண்ட ஆயுள் எதிர் பாராத பண வரவு உண்டு. கேது 6ல் இருந்தால் ;  புகழ், பெருமை, எடுக்கும் முயற்சியில் அனுகூலம், வீண், வம்பு வழக்கு ஏற்படும்.
    
7ல் இருந்தால் ;  ராகு 7ல் இருந்தால் களத்திர தோஷம், வே-று மதம் பெண்ணை திருமணம் செய்யும் நிலை, கூட்டாளிகளால் அனுகூலம் இல்லாத நிலை ஏற்படும் கேது 7ல் இருந்தால் ;  காதல் திருமணம், மண வாழ்வில் பிரச்சனை உண்டாகும். சுக வாழ்வு பாதிப்பு.

8ல் இருந்தால் ;  ராகு 8ல் இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கும் நிலை, விபத்து, விஷத்தால் கண்டம், களத்திர வழியில் உறவினர்கள் பகை உண்டாகும்.கேது 8ல் இருந்தால் ;  உடல் நிலை பாதிப்பு, உறவினர் பகை, விபத்து குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகும்.
     
9ல் இருந்தால் ;  ராகு 9ல் இருந்தால் வெளியூர் வெளிநாடு மூலம் அனுகூலம், தந்தைக்கு கெடுதி, தந்தை வழி உறவினர் பகை, தவறான பழக்க வழக்கம் உண்டாகும். பெண்னென்றால் புத்திர தோஷம் உண்டாடும்.கேது 9ல் இருந்தால் ;  தந்தைக்கு தோஷம், தெய்வீக காரியம், பொது காரியங்களில் ஈடுபடும் நிலை, பொருளாதார நெருக்கடி, கஷ்டம் உண்டாகும்.

10ல் இருந்தால் ;  ராகு 10ல் இருந்தால் எதிர்பாராத உயர்வு, ஏற்றம் நவீனகரமான செயல் மூலம் சம்பாதிக்கும் அமைப்பு, திடீர் தன வரவு ஏற்படும். கேது 10ல் இருந்தால் ;  பொதுக் காரியங்களில் ஈடுபடும் நிலை, எதிலும் நிதானம், நேர்மை இருக்கும்.

11ல் இருந்தால் ;  ராகு 11ல் இருந்தால் எதிர்பாராத உயர்வு ஏற்படும். தொழில் சுய முயற்சியால் வெற்றி, ஸ்பெகுலேஷன் மூலம் உயர்வு உண்டாகும். மூத்த சகோதர தோஷம் ஆகும். கேது 11ல் இருந்தால் ;  எடுக்கும் முயற்சியில் வெற்றி அனுகூலம், தொழில் ரீதியாக லாபம் உண்டாகும். மூத்த சகோதர தோஷம், சகோதரி வாய்ப்பு உண்டு.
  
12ல் இருந்தால் ; ராகு 12ல் இருந்தால் கண்களில் பாதிப்பு, கட்டில் சுக வாழ்வில் பிரச்சனை என்றாலும் வெளியூர் வெளிநாடு மூலம் அனுகூலம் உண்டாகும். கேது 12ல் இருந்தால் ; ஸ்தல தரிசனம் உண்டாகும். மறு பிறவி இல்லை. கட்டில் சுக வாழ்வில் ஈடுபாடு இல்லாத நிலை ஏற்படும்.



அதிகாரப் பதவி


அங்காரகன் என வர்ணிக்கப்படும் செவ்வாய் பகவான் யார் ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்கின்றாரோ அவர்களுக்கு தான் அந்த யோகம் உண்டாகிறது. நவ கிரகங்களில் செவ்வாயை சேனாதிபதி என்பார்கள். சண்டை, போர், நெருப்பு, எதிரிகளை அழித்தல் சண்டை பயிற்சி போன்றவைக்கெல்லாம் செவ்வாய் தான் காரகன் ஆவார்.
     
குறிப்பாக செவ்வாய் வலு இழந்து பாவிகள் சேர்க்கை பெற்று கோட்சார ரீதியாக சஞ்சாரம் செய்யப்படுகின்ற போது தான் நாட்டில் அசம்பாவிதங்கள், போர் தீவிரவாதத்துவம் அதிகரிக்கும் நிலை போன்ற செயல்கள் நடக்கின்றன. இது போன்ற செயல்களுக்கு எல்லாம் அதிபதியாகிய செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் 10 ஆம் வீட்டில் வலிமையாக அமையப் பெற்றால் ராணுவத் துறையில் பணி புரியும் அமைப்பு உண்டாகிறது.
     
குறிப்பாக ஜென்ம லக்னத்திற்கு 10 ஆம் வீட்டில் செவ்வாய் வலுவாக அமையப் பெற்றால் ராணுவம் போலீஸ் போன்ற துறைகளில் பணி புரியும் அமைப்பு உண்டாகிறது. குறிப்பாக கடகம், விருச்சிகம், மீனம் ராசி நேயர்களுக்கு 10ல் செவ்வாய் அமையப் பெற்றால் ராணுவம் பாதுகாப்பு தொடர்புடைய துறைகளில் பணி புரியும் யோகம் உண்டாகும். செவ்வாய் 10 ஆம் வீட்டில் திக் பலம் பெறுகிறார். இதனால் ஒருவருக்கு அதிகாரம் செய்யக் கூடிய பலம் உண்டாகிறது.

      10ல் செவ்வாய் பாவிகள் சேர்க்கைப் பெற்று அமையப் பெற்றால் குறிப்பாக வலு இழந்து அமையப் பெறுவது நல்லதல்ல. அப்படி அமையப் பெற்றால் சில சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிலை உண்டாகும். 10ல் செவ்வாய் 10 ஆம் அதிபதி சேர்க்கை பெற்று அமையப் பெற்றால் அரசாங்கத்தில் பெரிய உயர் பதவி கிடைக்கும். 10 ஆம் அதிபதி செவ்வாய் நவாம்சத்தில் அமையப் பெற்றால் அந்த ஜாதகர் பூமி, நெருப்பு, எண்ணெய் ராணுவம், போலீஸ், போன்ற துறைகளில் பணி புரியும் நிலை உண்டாகும்.
    
10ல் செவ்வாய், புதன் அமையப் பெற்றால் விஞ்ஞானி ஆகும் நிலை விசாரணை அதிகாரி, பொறியியல் வல்லுனர் ஆகும் நிலை உண்டாகும். 10 ஆம் வீட்டில் செவ்வாய், குரு அமையப் பெற்றால் ராணுவத்துறையில் பணி புரியும் நிலை உண்டாகும். அது மட்டுமின்றி மருத்துவமனையில் பணி புரியும் அமைப்பும் உண்டாகிறது. சனி, செவ்வாய், இணைந்து 10ல் அமையப் பெற்றால் ராணுவம், போலீஸ், பாதுகாப்பு, மருத்துவமனை போன்ற துறைகளில் கூலி ஆளாக வேலை செய்யும் நிலை உண்டாகும்.
     
செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி உச்சம்  பெற்றிருந்தாலும் ஜென்ம லக்னாதிபதி 10 ஆம் அதிபதியாக இருந்தாலும் செவ்வாய் 10 ஆம் வீட்டை பார்வை செய்தாலும்  10ஆம் அதிபதி சேர்க்கை பெற்றாலும் 10 ஆம்  அதிபதி செவ்வாயின் நவாம்சத்தில் இருந்தாலும் இந்த ஜாதகர் போலீஸ், ராணுவம் பாதுகாப்பு தொடர்புடைய துறைகளில் பணி புரியக் கூடிய நிலை உண்டாகும். 10 ஆம் வீட்டில் செவ்வாய் அதி பலம் பெற்றிருந்தால் இது போன்ற பணிகளில் சிறந்து விளங்கக் கூடிய நிலை உண்டாகும்.

 ஜோதிட ரீதியாக எதிர்ப்பு உள்ள ஜாதகம்  


 ஜோதிட ரீதியாக எதிர்ப்பு யாருக்கு ஏற்படுகிறது என்று பார்த்தால் ஜெனன லக்கினத்தில் 6ம் அதிபதி அதிபலம் பெற்று ஜென்ம லக்கினாதிபதி பலம் இழந்து காணப்படும் நிலையில் எதிர்ப்பு ஏற்படுகிறது. 

ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 6ம் வீட்டை வைத்து எதிர்ப்பு பற்றியும், எதிர்ப்பு யார் மூலம் ஏற்படும் என்பதையும் தெளிவாகக் கூற முடியும். பொதுவாக 6ம் வீட்டின் அதிபதியை விட ஜென்ம லக்கினாதிபதி பலம் பெற்று இருந்தால் எதிர்ப்பு இல்லாமல் இருக்கும். அது போல 6ம் வீடு உபஜய ஸ்தானம் என்பதால் 6ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்றவை பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் எதிர்ப்பை சமாளிக்கும் வலிமை எதிரிகளைப் பந்தாடும் பலம் உண்டாகும். 6ம் அதிபதி பலம் இழந்து காணப்பட்டாலும் 6ம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தாலும் எதிரிகளைச் சமாளிப்பதே மிகப் பெரிய வேலையாகி விடும்.
     
பொதுவாக யாரால் எதிர்ப்பு உண்டாகிறது என்பதைப் பார்க்கும் போது ஜென்ம லக்னத்திற்கு 6ம் வீட்டில் உள்ள கிரகம் 6ம் அதிபதி சேர்க்கை பெறும் கிரகமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும், 6ல் அமையப் பெற்றாலும் அவரே அவருக்கு எதிரியாகவும், அவரின் செயல்பாடுகளே அவரின் முன்னேற்றத்திற்கு இடையூறாகவும் அமைந்து விடுகிறது. 6ம் வீட்டின் அதிபதியை விட ஜென்ம லக்னாதிபதி பலம் பெறுவது மிகவும் உத்தமம். 

லக்கினத்திற்கு 2ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களே எதிரியாக மாறும் நிலை, கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை எதிர்ப்பாக மாறும் சூழ்நிலை, கொடுத்து வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலையால் எதிர்ப்பு உண்டாகும் அமைப்பு ஏற்படும்.
     
அது போல் ஜென்ம லக்கினத்திற்கு 3,6க்கு அதிபதிகள் இணைந்து 3 ஆம் அதிபதி பலம் இழந்து இருந்தால் சகோதர, சகோதரி மூலம் எதிர்ப்பு உண்டாகிறது. 3,6க்கு அதிபதியுடன் பலம் இழந்த செவ்வாய் சேர்க்கை உண்டானால் உறுதியாக சகோதரனுடன் பகைமை உண்டாகும். சகோதரர் இல்லையென்றால் பங்காளியுடனாவது எதிர்ப்பு உண்டாகும்.
     
ஜென்ம லக்னத்திற்கு 4ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றால் நெருங்கிய நண்பர்களே எதிரியாகும் சூழ்நிலை 4,6 அதிபதியுடன் சந்திரன் இணைந்தால் தாயே எதிரியாகும் அமைப்பு, தாய் வழி உறவினர்கள் எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும்.
     
அது போல ஜென்ம லக்னத்திற்கு 5ம் அதிபதி பலம் இழந்து 6ம் வீட்டில் அமையப் பெற்றாலும், 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும் புத்திரர்கள் எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும்.
     
பொதுவாக 7ம் வீட்டை களத்திர ஸ்தானம் என்றும், கூட்டுத் தொழில் ஸ்தானம் என்றும் கூறுவார்கள். 6ம் அதிபதியுடன் 7ம் அதிபதி இணைந்து பாவிகள் பார்வை பெற்றால் கைப் பிடித்த மனைவியே எதிரியாகும் சூழ்நிலை உண்டாகும். குறிப்பாக 7ம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்து உடன் சுக்கிரன் இருந்தால் வாழ்நாள் முழுவதும் மனைவியே எதிரியாக இருக்கும் சூழ்நிலை உண்டாகும். 6,7க்கு அதிபதி சேர்க்கை பெற்று, 7ம் அதிபதி பலம் இருந்தால் கூட்டாளிகள் எதிரியாக மாறும் சூழ்நிலை உண்டாகிறது. 

தந்தை ஸ்தானமான 9ம் வீட்டின் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதியுடன் இணைந்தால் தந்தையும், தந்தை வழி உறவினர்களும் எதிரியாக மாறும் சூழ்நிலை 6,9க்கு அதிபதிகள் சேர்க்கையுடன் சூரியன் இணைந்தால் உறுதியாக தந்தையால் மிகப் பெரிய எதிர்ப்பை எதிர் கொள்ள நேரிடும்.
     
தொழில் ஸ்தானமான 10ம் அதிபதி பலம் இழந்து 6ல் அமைந்தாலும், 6ம் அதிபதியுடன் இணைந்து இருந்தாலும் செய்யும் தொழிலில் எதிர்ப்பு, உத்தியோகத்தில் இருந்தால் சக ஊழியர்கள் எதிர்ப்பு என பல்வேறு சோதனைகளை எதிர் கொள்ள நேரிடும்.

11ஆம் அதிபதி பலம் இழந்து 6ம் அதிபதி சேர்க்கை பெற்றால் மூத்த உடன் பிறப்புடனும், நெருங்கிய உறவினர்களுடனும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். பொதுவாக 6ம்  அதிபதியுடன் சேர்க்கை பெறும். கிரகத்தின் இயல்புக்கு ஏற்ப எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும் 6ம் வீட்டை குரு போன்ற சுப கிரகங்கள் பார்வை செய்தால் எதிர்ப்பைச் சமாளிக்கும் திறன் ஏற்படும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு மறையும்.


நரேந்திர ராஜயோகம்

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து 1 , 5 , 9 ,10 குரு ,சுக்கிரன்,தனித்து நின்ற புதன் , இவர்கள் இருந்தால் நரேந்திர ராஜயோகமாகும். இந்த யோகம் அமைந்தவருக்கு வாழ்வில்நல்ல பல நன்மைகள் கிடைக்கும் .


புத்திரஸ்தானம் 

ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5 வது இடத்தை புத்திரஸ்தானம் என்று கூறுவர் . பொதுவாக இந்த இடத்தில் எந்த கிரகம் இருந்தாலும் அவரவர் ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பொறுத்து , அதன் திசை அல்லது புத்தி வரும் கால நேரம் பொறுத்து தோஷத்தை ஏற்படுத்தும் .இந்த 5 ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் தந்தைக்கு தோஷத்தையும் , சந்திரன் இருந்தால் தாய்க்கு தோஷத்தையும் , சனி இருந்தால் தனது குழந்தைகளுக்கும் , புதனிருந்தால் தாய் வர்கத்தினருக்கும் , குருவிருந்தால் தந்தை வர்கத்தினருக்கும் , ராகு இருந்தால் பிள்ளைகளுக்கும் , செவ்வாய் இருந்தால் தாய்மாமனுக்கும் தோஷம் உண்டாகும் .
அரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய வேண்டுமென்றால் பின்வரும் அமைப்புகள் இருப்பது நல்லது.

  • சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் கண்டிப்பாக பலம் பெற்று இருக்கவேண்டும்.
  • பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் அல்லது தர்ம கர்மாதிபதி யோகம் அல்லது பஞ்ச மகா புருஷ யோகம் அல்லது நரேந்திர ராஜ யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்களை பெற்று விளங்க வேண்டும்.
  • செவ்வாய் உச்சம் பெற்றோ அல்லது 3,6,11 போன்ற இடங்களிலோ இருக்க வேண்டும்.
  • 1,5,10 போன்ற இடங்கள் பலம் பெற்று இருந்தாலும் அரசியல் யோகங்கள் உண்டு.
  • மூன்றாம் இடமாகிய தைரிய மற்றும் பராக்கிரம இடம் வலுத்து காணப்பட வேண்டும்.
  • 6 மிடத்தில் சனி ,ராகு ,செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்து காணப்பட்டால் எதிரிகள் வெல்ல முடியாத நிலை உண்டாகும்.
சனி உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு 



சனி கிரகம் துலாம் ராசியில் உச்சம் அடைகிறது. ஒரு ஜாதகத்தி சனி உச்சம் அடைந்து இருந்தால் அவர்கள் கடின உழைப்பால் வாழ்கையில் உயர்வு அடைவார்கள். சுய தொழில் செய்தல் ஆரம்ப காலத்தில் கடுமையாக உழைத்து பிற்காலத்தில் நிறைய பணியாளர்கள் கொண்டு தொழில் செய்கிற உன்னத நிலையை எட்டி பிடிப்பவர்கள். சமுக சேவையில் நட்டம் கொண்டு பொது நல வழக்குகளை போட்டு நீதியை நிலை நாட்டுவார்கள். நன்கு படித்து வழக்காடுபவர்களாகவும் நீதிபதிகளாகவும் பெயர் பெறுவார்கள். அரசியலில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடிக்கும் வகையில் செயல் ஆற்றுவார்கள் .



குரு உச்சம் அடைந்த ஜாதகங்களின் சிறப்பு 

குரு கிரகம் கடக ராசியில் உச்சம் அடைகிறது. குரு லக்னாதிபதி ஆகவோ அல்லது 2,5,9,11 அதிபதி ஆகவோ இருந்து உச்சம் அடைந்தால் அவர்கள் நீதி நேர்மை விரும்புகிற புன்னியவன்களாக இருப்பார்கள்கள்.இவர்கள் கையில் எப்போதும் பணம் புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். சொற்படி கேட்டு நடக்கும் புத்திரர்கள் அமைவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர்களாக திகழ்வார்கள். நல்ல நண்பர்களை பெற்று இருப்பார்கள். பிறருக்கு நல்ல உபதேசம் செய்வார்கள். ஆன்மீக நட்டம் அதிகமாக இருக்கும். நல்ல கல்வி கற்று எந்த விதமான கெட்ட பழக்கம் இல்லாத நல்ல மனிதர்களாக திகழ்வார்கள்.

லக்னமும் முக அழகும் 


ஜாதக அமைப்புகளில் 12 வகையான லக்னங்கள் உள்ளன. ஒருவரது லக்னாதிபதி மற்றும் அவரது லக்கினத்தோடு சம்பந்தம் பெறுகிற கிரங்களை பொறுத்தே ஒருவரது முக அழகு அமைகிறது.

லக்கினத்துடன் சுக்கிரன் சம்பந்தம் பட்டு இருந்தால் அவர் நல்ல வெள்ளை நிறமாகஇருப்பர். கவர்ச்சி பொருந்திய முக அமைப்பை பெற்று இருப்பர்.

லக்கினத்துடன் சனி சம்பந்தம் பட்டு இருந்தால் கருப்பு நிறம் உடையவராக இருப்பார். சனி சுக்கிரன் ஆகிய இரண்டுமே சம்பந்தம் பெற்று இருந்தால் கருப்பாக இருந்தாலும் களை ஆக இருப்பார்கள்.

லக்கினத்துடன் புதன் சம்பந்த பட்டு இருந்தால் அறிவு களை உடைய முகமாக இருக்கும்.

லக்கினத்துடன் சூரியன் சம்பந்தம் பட்டு இருந்தால் தேஜஸ் மற்றும் ஆளுமை நிறைந்த கம்பீரமான முக தோற்றத்துடன் விளங்குவர்கள்.

லக்கினத்துடன் சந்திரன் சம்பந்தம் பட்டு இருந்தால் குளிர்ச்சியான முகம் அமைய பெற்று இருப்பார்கள். முக வசீகரம்  உடையவர்கள்.

லக்கினத்துடன் குரு சம்பந்தம் பெற்று இருந்தால் பணிவான முகம் உடைய ஆண்களாகவும் மாசு மறுவற்ற குடும்ப பாங்கான அழகு உடைய பெண்களக திகழ்வார்கள்.

லக்கினத்துடன் செவ்வாய் சம்பந்தம் பட்டு இருந்தால் நல்ல சிவப்பான நிறம் உடையவர்களாகவும் கண்டிப்பு நிறைந்த பார்வை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

லக்கினத்துடன் ராகு சம்பந்தம் பட்டு இருந்தால் ஒழுங்கற்ற பல்வரிசை அல்லது பெரிய மூக்கு என்று ஏதேனும் குறையான முக அமைப்பை பெற்று இருப்பார்கள்.

லக்கினத்துடன் கேது சம்பந்தம் பெற்று இருந்தால் ஒரு துறவி போன்ற எளிமையான முக அமைப்பை பெற்று இருப்பார்கள்.

Saturday, March 29, 2014

பெண்ணின் குடும்பச்சூழல், பொருளாதார நிலை, பேச்சாற்றல்


குடும்பமானது ஒற்றுமையானதாக அமைய 2ம் வீட்டில் சுபக் கிரகங்கள் அமைவதும், சுபக்கிரகங்கள் பார்வை செய்வதும் நல்லது. 2ம் அதிபதி பாவியாக இருந்தாலும், 2ல் பாவக்கிரகங்கள் அமைந்தாலும் குடும்ப ஒற்றுமை பாதிக்கும். கிரகங்களில் கொடிய பாவிகளாக கருதக்கூடிய சனி, ராகு 2ல் இருந்தால் கண்டிப்பாக அதன் தசா புக்தி காலங்களில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமை குறையக்கூடிய சூழல் உண்டாகும். சில நேரங்களில் கணவன், மனைவி பிரியக்கூடிய சூழ்நிலையே உண்டாகிறது.

ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீட்டை கொண்டு பொருளாதார நிலையைப் பற்றியும் அறியலாம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2ம் அதிபதியும் தனக்காரகன் குருவும் ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றோ, லாபஸ்தானத்தில் அமையப் பெற்றோ, கேந்திர திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றோ இருந்தால், அந்தப் பெண்ணிற்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமும், அதனால் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். 

அதுவே 2ம் அதிபதியும் குரு பகவானும் பலஹீனமாக இருந்தால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்காது. இப்படி ஜாதகப் பலன்களைக் கொண்ட பெண்கள் பண விஷயங்களில் கவனமாகச் செயல்படுவது நல்லது.



பெண்ணிற்கு அமையக்கூடிய கணவரைப் பற்றி 

அறிய


ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணிற்கு அமையக்கூடிய கணவரைப் பற்றி அறிய, அவளின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும், 7ம் அதிபதியும், 7ம் வீட்டில் அமையும் கிரங்களும் பலமாக அமைந்திருத்தல் அவசியம். 

நவக்கிரகங்களில் நவநாயகனாக விளங்குபவர் சூரியனாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் 7ம் வீட்டில் அமையப் பெற்றால், வரக்கூடியவர் முன்கோபக்காரராகவும், நெஞ்சழுத்தம் உள்ளவராகவும், இரக்கக்குணம் இல்லாதவராகவும் இருப்பார். இவரை அனுசரித்துச் செல்வது என்பது சற்று கடினமான காரியமே. 

7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன் இருந்தால் அமைகின்ற கணவர் அழகானவராகவும், தேய் சந்திரன் இருந்தால் வசதி வாய்ப்பில் சற்று குறைந்தவராகவும், குழப்பவாதியாகவும் இருப்பார். 

7ம் வீடு செவ்வாயின் வீடாக இருந்தாலும், 7ம் வீட்டில் செவ்வாய் அமைந்திருந்தாலும் முன் கோபம் கொண்டவராகவும், அதிகார குணம் உடையவராகவும் இருப்பார்.

7ம் வீட்டில் புதன் அமைந்திருந்தாலும், 7ம் வீடு புதனின் வீடாக இருந்தாலும், கணவர் நல்ல அறிவாளியாகவும் வியாபார நோக்கம் உடையவராகவும் இருப்பார்.

பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு குருவின் வீடாக இருந்தாலும் 7ம் வீட்டில் குரு அமைந்திருந்தாலும் கணவர் நல்ல வசதி வாய்ப்புடையவராகவும், பெயர் புகழ் பெற்றவராகவும், எல்லோரையும் அனுசரித்துச் செல்பவராகவும் இருப்பார். 

7ல் சுக்கிரன் இருந்தாலும் 7ம் வீடு சுக்கிரனின் வீடாக இருந்தாலும் நல்ல செல்வம் செல்வாக்குடன், நல்ல உடலமைப்பு, சர்வலட்சணம் பொருத்திய உடலமைப்பு, சுகபோக வாழ்க்கை வாழும் யோகம், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவராகவும் இருப்பார். 

7ல் சனி இருந்தாலும் 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், கறுப்பு நிறமுடையவராகவும், இளைத்த தேகம் கொண்டவராகவும், உரத்த குரலில் பேசுபவராகவும் இருப்பார். 

7ல் சர்ப கிரகங்களான ராகு, கேது அமைந்திருந்தால் கணவர் நல்ல நடத்தை உள்ளவராக இருக்கமாட்டார். குறிப்பாக 7ல் சூரியன், ராகு இருந்தால், பல பெண்களின் தொடர்பும் அதன் மூலம் எல்லாவற்றையும் இழக்கக்கூடிய நிலையும் உண்டாகும். 

Friday, March 28, 2014


சந்திராஷ்டம நாட்களை அறியும் முறை


ஜன்மராசிக்கு எட்டாவது ராசி நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்கள் (தினசரி குறிப்பிட்டுள்ள நட்சத்திர தினங்கள்) சந்திராஷ்டம நாட்கள் என அறியலாம்.
ஜன்மராசிசந்திராஷ்டம ராசி (நட்சத்திரங்கள்)
மேஷம்விசாகம், அனுஷம், கேட்டை
ரிஷபம்மூலம், பூராடம், உத்திராடம்
மிதுனம்உத்திராடம், திருவோணம், அவிட்டம்
கடகம்அவிட்டம், சதயம், பூரட்டாதி
சிம்மம்பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி
கன்னிஅசுவினி, பரணி, கார்த்திகை
துலாம்கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம்
விருச்சிகம்மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்
தனுசுபுனர்பூசம், பூசம், ஆயில்யம்
மகரம்மகம், பூரம், உத்திரம்
கும்பம்உத்திரம், அஸ்தம், சித்திரை
மீனம்சித்திரை, சுவாதி, விசாகம்


ஜாதகத்தில் கிரகங்களின் சிறப்பான பலன்கள்


சூரியன்: லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகனின் வீடு தெய்வத்தால் காக்கப்படும். அத்தகையோனுக்கு நல்ல வாகன யோகமும் சத் விஷயங்களில் ஞானமும் அறிவு கூர்மையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதரவும் புதல்வர்களுக்கு யோகமும் ஏற்படும். அஞ்சா நெஞ்சனாக பகைவர்களை ஒழித்து வீரனாக விளங்குவான். அதே சமயத்தில் 2, 3, 4, 5, 7 ஆகிய இடங்களில் சூரியன் நின்றால் அந்த ஜாதகன் சொற்ப அளவே பலன் பெறுவான். மேலும் வியாதி, கண்ணோய் முதலியன உண்டாகும். ஈனத் தொழில் செய்பவர்களின் விரோதமும் ஏற்படும்.

சந்திரன்: நன்மை தரும் சந்திரன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலும் 5, 9 எனும் திரிகோண ஸ்தானங்களிலும் தன ஸ்தானமான 2ம் இடத்திலும் லாப ஸ்தானமான 11ம் இடத்திலும் நிற்பாரேயாகில் நிறைந்த வருமானமும் நல்ல வீடும் விளை நிலமும் பசு மாடுகளும் சேர்ந்து வளமான வாழ்க்கை அமையும். இந்த ஜாதகனுக்கு மிகவும் சுகமும் சொந்த நாட்டிலும் பிற நாட்டிலும் அரசாங்க ஆதாயம் அதிகம் உண்டாகும். அதே சமயத்தில் பாவக் கிரகங்களின் பார்வை சந்திரனுக்கு இல்லாமல் இருப்பது முக்கியம்.

வெற்றி கொள்ளும் சந்திரன் 3, 5, 7, 11 ஆகிய இடங்களில் தனித்து நிற்க அத்தகைய ஜாதகன் பெரும் செல்வம் படைத்தவன். மந்திரங்கள் அறிந்து முறைப்படி பிரயோகித்து வெற்றி காண்பான். வாக்குவாதம் செய்வதில் வல்லவன். மருத்துவம் படித்து அத்துறையில் சிறந்து விளங்குவான். நல்ல வருமானம் பெற்று அவன் குடும்பம் விருத்தி அடையும். பகைவர்கள் அழிவார்கள். ஏனைய மற்ற இடங்களில் சந்திரனால் பலன் இல்லை. எனினும் மற்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வைக்கேற்றவாறு பலன்கள் அமையும்.

குரு: வியாழன் எனப்படும் குரு பகவான் 4, 7, 10, 1, 5, 9 மற்றும் 2, 11 ஆகிய இடங்களில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபலமான யோகங்கள் உண்டாகும். லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும். பொன், பொருள் அதிகம் சேரும். மேலும் 2ம் இடத்தின் அதிபதி குருவைப் பார்க்க இவன் கீழ் பலர் வேலை செய்ய பல குடும்பங்களை ஆதரிப்பான். குரு 8ம் இடத்தில் நின்றால் மனைவியிடம் பகை கொண்டவனாகவும் விரோதிகளால் கண்டம் அடைபவனாகவும் இருப்பான். பொருள் விரயம் ஆகும். பல வகைகளில் அவமானம் வந்து சேரும். 6ம் இடத்தில் குரு இருந்தால் அரசாங்க வகைகளில் பகை உண்டாகும். வியாதியால் துன்பம் ஏற்படும். 12ல் குரு நின்றால் பண விரயங்கள் உண்டாகும். இருப்பினும் அந்த வீடு குருவின் அட்சி வீடாக இருந்தால் எந்த துன்பமும் அண்டாது என்பதாம்.

சுக்கிரன்: அசுரர்களில் குருவான சுக்கிரன் ஜாதகனின் கேந்திர கோண ஸ்தானங்களில் நிற்க மிகவும் நல்ல பலன்களைத் தருவார். பாவக் கிரகங்கள் சுக்கிரனைப் பார்த்த போதிலும் கவலை அடையவேண்டாம். அவன் பங்களா போன்ற சொத்துக்களும் பொன், முத்து ஆபரணங்களும் பெற்று சுகம் அடைவான். சுக்கிரன் 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் பலமுடன் இருந்தால் அந்த ஜாதகனுக்கு ஆயுள் குறைவு ஏற்படும். மேலும் வியாதி, வாத நோய் இவை உண்டாகும். வீடு, பொன், பொருள் நஷ்டம் ஏற்படும். அதே சமயத்தில் சுக்கிரன் 12ல் இருந்து அது ஆட்சி வீடானால் இறைவன் அருளால் நல்ல யோகமும் சயன சுகமும் உண்டாகும், இது திண்ணம்.

சனி: சூரியனின் குமாரனான மந்தன் எனப்படும் சனி பகவான் 3, 6, 9, 11 ஆகிய இடங்களில் நிற்க ஆயுள் தீர்க்கம் உண்டாகும். நிறைய பொருள் சேரும். சனி 9ல் இருக்க பிதுர் தோஷம் உண்டு. விரோதிகளை வெற்றி காண்பான். அரசு மூலம் லாபம் அடைந்து பேரும் புகழும் விளங்க வாழ்வான். அதிக லாபம் உண்டாகும். சனி 10ல் இருந்தாலும் நற்பலன்களையே தருவான். வாகன யோகம் உண்டாகும். செய்யும் தொழிலில் முன்னேறி புகழ் அடைவான். சனி பகவான் 11ல் இருக்க தேவகுருவான குரு பகவான் 7ம் இடத்திலும் பாம்பான ராகு 4ம் இடத்திலும் செவ்வாய், சூரியன் இவர்கள் 3ம் இடத்திலும் நிற்க சனி ஜாதகனுக்கு சில தொல்லைகள் கொடுத்தாலும் ஆயுள் தீர்க்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

செவ்வாய்: செவ்வாய் கிரகமானது 1, 2, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகனுக்கு நல்ல பூமி வாய்த்தலும் பெரும் பொருள் சேர்க்கையும் நல்ல விளை நிலமும் பொன் ஆபரணமும் கிட்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகி பல குடும்பங்களை காக்கும் திறமை பெற்று பகைவர்களை வெற்றி கொள்ளும் வீரனாவான் என அறிக. சேய் என்று அழைக்கப்படும் செவ்வாய் 3, 6, 7, 8, 9, 12 ஆகிய இடங்களில் நின்றால் இருக்கும் நிலமும் பொருளும் விரயமாகும். குடும்பத்தில் பிரிவு உண்டாகும். திருமணம் முதலிய சுப காரியங்கள் தள்ளிப் போகும். திருமணம் முடிவதில் கால தாமதம் ஆகும். 

Thursday, March 27, 2014

குருவால் உண்டாகும் யோகம்


     குரு பார்க்க கோடி புண்ணியம், குரு பகவான் நவ கிரகங்களில் சுப கிரகமாக விளங்குகிறார். பொதுவாக நாம் குருவால் ஏற்றுக் கொள்வது முதலில் மாதா பிதாவை பிறகு நமக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களை மற்றது நமக்கு ஒரு தொழிலையோ, நல்ல பண்பையோ கற்றுக் கொடுக்கும் மனிதர்களை  அதுபோல நமக்கு நல்லது நினைப்பவர்களையும், குருவாக ஏற்றுக் கொள்கிறோம். அது போல தான் நவ கிரகங்களில் முதன்மை பங்கு வகிப்பவராகவும் சுப கிரகமாகவும் குரு பகவானை குறிப்பிடுகிறோம். யோகங்களை கொடுப்பதிலும், அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதிலும் குரு முதன்மையான பங்கு வகிக்கிறார். எந்தவொரு காரியத்தை செய்வதென்றாலும் இறை வணக்கம், குரு வணக்கம் செய்து விட்டு தான் அந்த காரியத்தையே தொடங்குவோம் அது போல
                         
குரு பிரம்மா குரு விஷ்ணு                         
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பர பிரம்ம தஸ்யை
ஸ்ரீ குருவே நமஹ

என குருவின் நாமத்தை சொல்லி அவரால் உண்டாகக் கூடிய யோகங்களைப் பற்றி காண்போம்.


கஜகேசரி யோகம்

     ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் குரு காணப்பட்டால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. கஜம் என்றால் யானை கேசரி என்றால் சிங்கம். பல யானைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய சிங்கம் போன்ற வலிமை இந்த யோகத்தால் உண்டாகும். நீண்ட ஆயுள் புகழ், செல்வம், செல்வாக்கு, உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் எடுக்கும் காரியங்களில் வெற்றி, போன்ற  உன்னதமான நற்பலன்கள் அமையும். அரசியலில் உயர்ந்த பதவிகளை வகிக்க கூடிய யோகம் உண்டாகும்.


ஹம்ச யோகம்
   
  குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரமாகிய 4,7,10ல் ஆட்சி, உச்சம் பெற்று காணப்பட்டால் ஹம்ச யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் நல்ல உடலமைப்பு மற்றவர்களால் மதிக்கப்படும் உன்னத நிலை ஒழுங்கான வாழ்வு போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகிறது.


குரு மங்கள யோகம்
     
குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் காணப்படுவதால் குரு மங்கள யோகம் உண்டாகிறது-. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். குறிப்பாக நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.


குரு சந்திர யோகம்
   
   சந்திரனுக்கு 1,5,9ல் குரு அமையப் பெற்றால் குரு சந்திர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் உயர்ந்த அந்தஸ்து பெருமை புகழ் போன்ற நற்பலன்கள் உண்டாகும். இந்த யோகத்தால் கல்விக்கு சம்மந்தமில்லாத தொழிலில் யோகம் கொடுக்கும்.


சகடை யோகம்
   
   சந்திரனுக்கு 6,8,12ல் குரு மறைவு பெற்றால் சகடை யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்க்கை வண்டி சக்கரம் போல ஏற்றத் தாழ்வுகள் உடையதாக இருக்கும். ஆனால் குரு அமையப் பெற்றிருக்கும் வீடு சுபர் வீடாக இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.


கோட்டீஸ்வர யோகம்

கேதுவை குரு பார்வை செய்தாலும், கேதுவும் குருவும் இணைந்து காணப்பட்டாலும் கோட்டீஸ்வர யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் திடீர் தனச்சேர்க்கை, எதிர்பாராத அதிர்ஷ்டம், தெய்வீக ஆன்மீக பணிகளில் ஈடுபாடு போன்ற நற்பலன்கள் உண்டாகும்.


சண்டாள யோகம்

ராகுவை குரு பார்த்தால் சண்டாள யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.


சந்திராதிபதி யோகம்

சந்திரனிலிருந்து  6,7,8ல் குரு,சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் சந்திராதிபதி யோகம் உண்டாகிறது. இதனால் மனமகிழ்ச்சி சத்துரு தொல்லையின்றி இருந்தல், உயர்ந்த பதவி, தீர்க்காயுள், நல்ல மனோதிடம், பெயர், புகழ் செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.


லக்னாதிபதி யோகம்

ஜென்ம லக்னத்திலிருந்து குரு பகவான் 6,7,8ல் சுக்கிரன் புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் லக்னாதிபதி யோகம் உண்டாகிறது. இந்த யோக அமைப்பால் உயர்ந்த பதவி, சந்தோஷமான வாழ்வு, பெரிய மனிதர்களின் தொடர்பு, நீண்ட ஆயுள் போன்ற உன்னதமான நற்பலன்கள் உண்டாகும்.


வசுமதி யோகம்

ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் சுக்கிர புதன் சேர்க்கை பெற்றிருந்தால் வசுமதி யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் ஜாதகர் தன் சொந்த முயற்சியால் முன்னேறுவார். செல்வம், செல்வாக்கு யாவும் சிறப்பாக அமையும்.
                                                                                             

பஞ்சம ஸ்தானமும் புத்திர பாக்யமும்



       
ஜென்ம லக்னத்திற்கு பஞ்சம ஸ்தானம் என வர்ணிக்கப்டும் 5 ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும் 5 ஆம் வீட்டை புத்திரன், புத்திரி, பூர்வீகம், உயர் கல்வி போன்றவைகளை மிகத் தெளிவாக அறிய உதவும் பாவமாகும். போட்டி பொறாமைகள் நிறைந்த இவ்வுலகில் நமது பூர்வீகம் பலமாக இருந்தால் தான் இந்த எந்திர உலகில் எளிதில் ஜீவிக்க முடியும்.
     
அதாவது மானிடனாய் பிறப்பதில் பூர்வ புண்ணிய பலத்துடன் பிறப்பது மிகவும் நல்லது. நம் மூதாதையர் முன்னோர்கள் நமக்கென சொத்து, சுகங்கள், சேர்த்து வைப்பது மட்டுமின்றி சில புண்ணியங்களை சேர்த்து வைத்திருந்தால் தான் எந்த வித கெடுதியும் இன்றி சுக போக வாழ்க்கையினை இவ்வுலகில் வாழ முடியும்.
     
சொத்துக்கள் ஒரு புறம் இருந்தாலும் நம் முன்னோர்கள் எதாவது கெடுதலை செய்து விட்டால் அது நம்மையும் நம் சந்தியினரையும் அதிகமாக பாதிக்கும். ஜாதகம் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் ஒருவரது பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களது வாழ்வு சங்கடங்கள் நிறைந்ததாகி விடும்.
     
ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், போன்றவை ஏன் ஏற்படுகின்றது என்று பார்த்தால் நம் முன்னோர்கள் யாராவது நாகத்தை அடித்துக் கொன்று விட்டாலும் இரு நாகங்கள் இணைந்து சந்தோஷமாக இருக்கின்ற பொழுது அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தி விட்டாலும் இது போன்ற நாக தோஷத்தால் நாகம் என வர்ணிக்கப்படும் ராகு பகவானால் தோஷங்கள் உண்டாகி புத்திர பாக்கியம் பெறத் தடை திருமணத் தடை போன்ற அனுகூலமற்ற பலன் உண்டாகிறது. இதற்கு பரிகாரமாக ராகு, கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் விலகி நல்லது உண்டாகிறது. அது போல ஒருவரது தந்தை, பாட்டன் போன்றோர் மற்ற பெண்களின் வாழ்க்கையில் சில கெடுதிகளை செய்து விட்டால் அதுவே களத்திர தோஷமாக மாறி திருமணத் தடை திருமணம் அமைந்தாலும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.

      இது போன்ற கெடுதிகள் எல்லாம் விளக்கும் பாவமாக விளங்குவது 5 ஆம் பாவமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5 ஆம் அதிபதி நீசம் பெற்று பகை பெற்றிருந்தாலும் 5 ஆம் அதிபதி சனி ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்படுகிறது. அதாவது பூர்வீக வழியில் ஜாதகருக்கு அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகிறது. அது மட்டுமின்றி பூர்வீக வழியில் அதாவது உறவினர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகிறது-. 5 ஆம் வீடு பூர்வீக ஸ்தானம் மட்டுமின்றி புத்திர ஸ்தானமும் என்பதால் தகுந்த காலத்தில் நல்ல குழந்தைகளை ஈன்றெடுக்க முடியாத அவல நிலை உண்டாகிறது.
     
பொதுவாக இவ்வளவு சிறப்பு வாய்ந்து 5 ஆம் வீடு பலம் பெற்றிருந்தால் நல்ல புத்திரர்களை ஈன்றெடுக்கும் அமைப்பு பூர்வீகத்தால் ஏற்றம், உயர்வு உண்டாகும். குறிப்பாக 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 5ஆம் வீட்டில் குரு, சுக்கிரன் சந்திரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமையப் பெற்றாலும் 5 ஆம் வீட்டை சுபர் பார்வை செய்து 5ல் பாவிகள் இல்லாமல் இருந்தாலும் அந்த ஜாதகரின் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலைமுறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும். அது மட்டுமின்றி 5 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ஜாதகரின் வாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அது மட்டுமின்றி அழகிய குழந்தைகளை ஈன்றெடுக்கும் அமைப்பு, புத்திரர்களால் மகிழ்ச்சி, உண்டாகும்.

அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் கேந்திர திரிகோண ஸ்தானங்கள்


ஜனன ஜாதகத்தில் உள்ள  ஸ்தானங்களில் சில ஸ்தானங்கள் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஸ்தானமாக விளங்குகிறது. ஒருவரது ராசிக்கட்டத்தில் 1,4,7,10 ம் வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகவும் 1,5,9ம் வீடுகள் திரிகோண ஸ்தானங்களாகவும் விளங்குகிறது. கேந்திர ஸ்தானங்களான  1,4,7,10 ல் 1 ஐ விட 4ம், 4 வை விட 7ம் 7ஐ விட 10ம் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதுபோல திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ல் 1ஐ விட 5ம், 5 ஐ விட  9ம் பலம் வாய்ந்த ஸ்தானங்களாக உள்ளது.
மேற்கூறிய ஸ்தானங்களில் கேந்திர ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் பலம் பெறுவது சிறப்பு. சுப கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெறும்போது அந்த வீடானது, அந்த கிரகத்தின் சொந்த வீடாக இல்லாமல் இருப்பது சிறப்பு. ஏனென்றால் அங்கே கேந்திராதிபதி தோஷம் உண்டாகி நற்பலன்களை அடைவதற்கு இடையூறு உண்டாகிறது. ஸ்தானங்களிலேயே திரிகோண ஸ்தானங்கள் பலம் மிக்கதாகும். திரிகோண ஸ்தானங்களில் கிரகங்கள் அமையப் பெறுவதே சிறப்பான அமைப்பாகும்.
ஒருவரது வாழ்வில் யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடைவதற்கு கேந்திராதிபதியும், திரிகோணாதிபதியும் இணைவது சிறப்பு. கேந்திர திரிகோண ஸ்தானாதிபதிகள் இணைந்து கேந்திர ஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோ அமைவது மிகவும் சிறப்பு.
கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10 க்கு அதிபதிகளும், திரிகோண ஸ்தானங்களான 1,5,9 க்கு அதிபதிகளும் ஒருவருக்கொருவர் இடம் மாறி பரிவர்த்தனை பெற்று கொள்வதும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் சிறப்பான அமைப்பாகும். மேற்கூறியவாறு கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கை உண்டாகி. அக்கிரகங்களின் திசை அல்லது புக்தி நடைபெற்றால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடைந்து செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் போன்றவற்றுடன் சிறப்பாக வாழக்கூடிய யோகம் உண்டாகும்.

மேற்கூறிய கிரகச் சேர்க்கைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது 9,10 க்கு அதிபதிகளின் சேர்க்கையாகும். ஒருவர் ஜாதகத்தில் 9,10 க்கு அதிபதிகள் அத்துடன் 4 அல்லது 5 க்கு அதிபதி இணைவது மிகவும் சிறப்பாகும். அதுபோல 4,5 க்கு அதிபதிகள் இணைந்து பலம் பெறுகின்றபோது சகலவிதமான அதிர்ஷ்டங்களையும்அடையும் யோகம் உண்டாகும்.
கேந்திர திரிகோணதிபதிகள் இணைகின்ற போது அந்த கிரகங்களாக  நட்பு கிரகங்களாக அமைந்து விட்டால் அந்த கிரக சேர்க்கையால் உண்டாகக்கூடிய யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் வர்ணிக்கவே முடியாது.
Blogger Gadgets