Thursday, June 26, 2014

திருமண தோஷ பரிகாரம்



செவ்வாய் கிரகம் சிவந்த நிறம் கொண்டது.பொதுவாக செவ்வாய் சகோதரகாரகன் என்று சொல்லப்பட்டாலும் மண் பாண்டம் செய்பவர், அக்கினி  சம்பந்தமான வேலைகள்,  ராணுவம், ரத்தம், ரணம்  எனப்படும் காயம்,   சாதனைகள், சிவந்த ரத்தினம், செம்பு முதலானவற்றுக்கும் பொறுப்பாகின்றார்.
 
மேலும் பவளம், துவரை, நெருப்பு பயம், துவேசம், கடன், சோரம், சுய சிந்தனை, வீரியம், உற்சாகம், ஆடு, சேனைகளின் தலைமை, அதிகாரம், இனம்தாழ்ந்த நிலைப்பாடு, ஆயுள் குறைவை ஏற்படுத்துதல், விபத்துக்கு துணை போன்ற பல  பொறுப்புகளை பெற்றிருந்தாலும் ரத்த அணுத் தொடர்பில் வம்ச வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்குவது தனிச்சிறப்பு.
 
ரத்தத் தொடர்பில் முக்கியமானதே திருமண பந்தம் எனும் குடும்ப வாழ்க்கை. குடும்ப வாழ்க்கையின் ஆரம்பமாக அமையும் திருமணப் பந்தத்திற்கும் செவ்வாய்க்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே தான் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் அனைவரையும் பயமுறுத்துவதாக அமைகின்றது.
 
எல்லோராலும் கேட்கப்படுவதும், பேசப்படுவதும் ஏன் ஜோதிடம் என்றாலே என்ன எனத் தெரியாதவர்களும் கேட்கும் கேள்வி பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதாப சுத்த ஜாதகமாப மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பார்கள்.
 
ஆக செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் முக்கிய சொல்லாக இருக்கிறது. வாழ்க்கையின் மூலச் சொல்லாக உள்ளது. எனவே செவ்வாய் தோஷம் என்ன என்பதை பார்ப்போம். நிவர்த்தி செய்வதையும் கவனிப்போம்.
 
திருமண தோஷம்:
 
அங்காரக தோஷம், ரத்த தோஷம், உறவு தோஷம் என்றெல்லாம் சொல்லும் சொல்லுக்கு செவ்வாய் தோஷம் என ரிஷிமார்கள் பெயர் சூட்டி உள்ளார்கள்.
 
ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம்.
 
அந்த வகையில் லக்கினம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு, இரண்டாவது இடம், நான்காவது இடம், ஏழாவது இடம், எட்டாவது இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் எனப்படும்.
 
மேற்கண்ட 2, 4, 7, 8, 12 என ஐந்து இடங்களில் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது பாமரர்களுக்கும் தெரிய வந்ததால் இன்று ஏழைகளும் சுகமாக வாழ செவ்வாயின் அருள் அவசியம் என்பது புரியும். மேலும் 2, 4, 7, 8, 12-ல் பாபக்கிரகங்கள் இருந்தாலும் இதே நிலைதான். இருந்தாலும்  செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில்  இருந்தால் தோஷம்  இல்லை.
 
மேலும் சூரியன், குரு, சனி ஆகியோருடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலே தோஷம் இல்லை. இதே நேரத்தில் செவ்வாய் தோஷ அமைப்பு ஆண் பெண் இரு பாலருக்கும் இருந்தால் தோஷம் இல்லை. மேலும் பல காரணங்கள் தோஷம் இல்லை என்பதை புரிந்து அப்படியும் தோஷம் இருந்தால் அதற்கு எளிய பரிகாரம் உள்ளது.
 
கடகம், சிம்ம லக்கினமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் 2-ம்மிடம் மிதுனம் அல்லது கன்னியாகில் செவ்வாய் இருக்கும் வீடு 4ம் இடம் மேஷம், விருச்சிகம் என்றாலும் தோஷம் இல்லை. செவ்வாய் 7ம்மிடம் கடகம், மகரமாயின் தோஷம் ஏற்படாது. செவ்வாய் 8ம்மிடம் தனுசு, மீனமாகில் தோஷம் இல்லை.
 
செவ்வாய் 12மிடம் ரிஷபம், துலாமாக இருந்தால் தோஷம் கிடையாது. சிம்மம் அல்லது கும்பம் இருந்தால் தோஷம் இருக்காது. குருவுடன் இருந்தாலோ சந்திரனுடன் இருந்தாலோ தோஷம் இல்லை. புதனு டன் சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டால் தோஷம் இல்லை. சூரியனுடன் சேர்ந்து இருந்தாலோ பார்த்தாலே தோஷம் ஏற்படாது.
 
செவ்வாய் இருக்கும் ராசி அதிபதி 1, 4, 5, 7, 9, 10 இவைகளில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை. 8, 12ல் உள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம் மகரமா யின் தோஷம் ஏற்படாது. தனது வீடு உச்ச வீடு மகரம், மேஷம், விருச்சிகம் தோஷம் இல்லை. சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியிருந்தால் பார்த்தால் தோஷம் இருக்காது.
 
செவ்வாய் சனியுடன் சந்திரன், குரு இவர்கள் வீட்டில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச்சேர்ந்த விஜய்சுவாமிஜி.
 
பரிகார இடங்கள்:
 
பொதுவான எல்லாப் பரிகாரங்களையும் இடம், பொருள், காலம் இந்த மூன்றையும் தெரிந்து கொண்டு தான் செய்ய வேண்டும். இடம் என்பது பரிகாரம் செய்யக் கூடிய இடத்தைக் குறிக்கும். பொருள் என்பது பரிகாரத்திற்கு உதவும் பொருள்களைக் குறிக்கும்.
 
காலம் என்பது பரிகாரத்திற்கு ஏற்ற காலத்தை குறிக்கும். சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயர் கட்டுக்கள், நீக்கும், அதாவது துக்கஹர பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும்.
 
குளக்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கோசாலை, சிவாலயங்கள், விஷ்ணு சந்நிதி, பிரும்ம சமூக மத்தி, சமுத்திர க்ஷத்திரம், அருவிக்கரை, குருமுகம், குருபாது காஸ்தலம், குரு ஆலயம் இந்த இடங்களில் எல்லாம் சுபமான பரிகாரங்கள் செய்து நற்பலன்களை நிரம்ப அடையலாம். ஒரு சிலர் பரிகாரங்களை உருத்திர பூமியிலும் செய்வதுண்டு.
 
பலன் தரும் பரிகாரங்கள்:
 
துவரை தானம்:
 
உடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
 
வாழைப்பூத் தானம்:
 
முழு வாழைப்பூ அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.
 
வழிபாட்டு முறை:
 
செவ்வாய் தோஷம் ஒரு சிலர் நினைப்பது போல திருமணத் தடங்கலை மட்டும் செய்து போவது அல்ல. பல்வேறு வகையான இடைïறுகளும் இதனால் விளைவதுண்டு.  
 
கோபமான வார்த்தைகளினால் தனக்கு வர வேண்டிய நன்மைகளைத் தானே கெடுத்துக் கொள்வது, கல்யாண வீடுகளில் போன இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்கள் பேசப் போனால் தடங்கல் இவராலேயே ஏற்படு வது, இப்படிப் பல கோணங்களில் செவ்வாய் தோஷம் தன்னு டைய குணத்தை வெளிப்படுத்தும்.
 
இந்த  தோஷத்தைத் தன்னிடத்தில் இருந்து விலக்கி கொண்டு விட்டால் இத்தகு தொல்லைகள் வராது. செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மௌனம் இருக்க வேண்டும்.
 
இந்த மௌனம் இருக்க முடியாத படி எத்தனையோ தடங்கல்கள் வரும். தடங்கல்களைத் தோணியாக்கிக் கொண்டு மேலும் அதிலேயே பயணம் செய்யக் கூடாது. தடங்கல்களை எதிர்த்து நின்று மௌனத்தைக் கடைப்பிடிப்பவன் செவ்வாய் தோஷத்தில் இருந்தே விரைவில் விடுபடுவான்.
 
செவ்வாய் தோஷக் காரர்கள் முருகப் பெருமானையும், வளம் தரும் வயிரவக் கடவுளையும் விடாது வழிபட வேண்டும். காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது.  முருகன் கோலங்கள் பலவாக இருந்தாலும் தண்டபாணியாக விளங்கும் கோலம் செவ்வாய்க்குச் சிறப்பு.
 
வயிரவ வடிவங்கள் வெகுவாக இருந்தாலும் க்ஷத்ரபாலர் என்ற அவதூத வடிவம் சிறப்பானது. முருகனையும் க்ஷத்ர பாலனையும் அன்றாடம் தோத்திரங்களாலும் அர்ச்ச னைகளாலும் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார் விஜய்சுவாமிஜி.  
 
பரிகார காலம்:
 
செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தவிர உள்ள சிறப்பு விதிகளை சுக்குல பக்ஷ பரிகாரத்தில் கூறுவோம்.
 
பரிகாரம் செய்ய  ஆகாத நேரம்:
 
ஜென்ம நட்சத்திரத்துக்கு நான்கு எட்டு பன்னிரண்டு இந்த நட்சத்திரங்களில் பரிகாரங்கள் செய்வது நல்லதல்ல. இதைப் போல பரிகாரம் செய்து கொள்பவருடைய மனைவியின் நட்சத்திரத்திலிருந்து நான்கு, எட்டு, பன்னிரண்டு இந்த நாட்களிலும் செய்யக் கூடாது.  
 
இதைப் போல இந்த தம்பதியருக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் நான்கு, எட்டு, பன்னிரண்டு நட்சத்திரங்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.           

No comments:

Blogger Gadgets