Monday, June 2, 2014

நவக்கிரகங்கள்


அவர் யோகக்காரர். பெரிதாக அலட்டிக்கொள்ளாமலே செல்வம் குவிகிறது.. அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது.. இவருக்கு ராஜயோகம் அடிக்கிறது.. என்று பலரும் சொல்லக் கேட்கிறோம். அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள் தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி மற்றும் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகிய ஒன்பதுமே நவக்கிரகங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு. இந்த கிரகங்கள் தரும் பொதுவான பலன்கள் என்ன, அவரவர் ஜாதகப்படி தரும் பலன்கள் என்ன, ஒவ்வொரு கிரகத்துக்கும் என்ன கிழமை, தேதிகள், எண், நிறம் ஏற்றது என்பதை இனி பார்க்கலாம்.


சூரியன்
நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன். தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம். ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம். இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை. தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.
சூரியனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: ஞாயிறு
தேதிகள்: 1, 10, 19, 28
நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
ராசி: மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி
நிறம்: சிவப்பு
ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
தானியம்: கோதுமை
ஆடை (வஸ்திரம்): சிவப்பு.
ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும். நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம். சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம். லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள். சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது.
பிறந்த லக்னமும் சூரியனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி & பெரிய பதவி
ரிஷப லக்னம்/ராசி & மாபெரும் யோகம்
கடக லக்னம்/ராசி & பேச்சாற்றலால் யோகம்
சிம்ம லக்னம்/ராசி & அதிகார ஆளுமை
விருச்சிக லக்னம்/ராசி & தலைமைப் பதவி
தனுசு லக்னம்/ராசி & நல் பாக்ய யோகம்
மற்ற லக்னம்/ராசிகள் & சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம்.
வழிபாடு, பரிகாரம்
சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.
‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’ அல்லது ‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’ என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். சென்னை அருகே கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும்.



சந்திரன் :
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர். ‘சர்வம் சந்திர கலாபிதம்’ என்று சந்திரனை ஜோதிட நூல்களில் குறிப்பிடுகின்றன. லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி ‘நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி?’ என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்ம ராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும். சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை. சூரியனுக்கு 7&ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பவுர்ணமி.
சந்திரனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: திங்கள்
தேதிகள்: 2, 11, 20, 29
நட்சத்திரம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம்
ராசி: ரிஷபத்தில் உச்சம், கடகத்தில் ஆட்சி.
நிறம்: பால் வெண்மை
ரத்தினம்: முத்து
தானியம்: நெல்
ஆடை: தூய வெள்ளி
அமாவாசை யோகம், பவுர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களை தருபவர் சந்திரன். நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும்.
சந்திரன் மாதுர்காரகன். அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறியமுடியும். சந்திரன் மனோகாரகனும்கூட. அதாவது மனதை ஆள்பவன். அமைதி, திருப்தி, கருணை, நிம்மதி, இரக்கம், காதல், கனிவு, சிந்தனைத் திறன், கற்பனை வளம் ஆகியவற்றை நிர்ணயிப்பது சந்திரனே. சந்திரன் ஆதிக்கம் உள்ளவர்கள் கதை, கவிதை, இசை, டான்ஸ், அனிமேஷன், கிராபிக்ஸ், வெளிநாட்டு வியாபாரம், தண்ணீர் சம்பந்தமான தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, கடல் சார்ந்த தொழில், கப்பல் துறைகள், கடற்படை, மனோதத்துவம், மனநலம், மனவசியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். சந்திரனுக்கு உண்டான தேதிகள், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இத்துறைகளில் ஜொலிப்பார்கள். சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசியிலும் ஆட்சிபெறும் கடக ராசியிலும் பிறப்பது மிகவும் சிறப்பு. லக்னத்தில் சந்திரன் இருப்பதும் லக்னத்தை சந்திரன் பார்ப்பதும் நல்ல யோகம்.
பிறந்த லக்னமும் சந்திரனால் கிடைக்கும் யோகமும்
எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார்?
மேஷ லக்னம்/ராசி & நிலபுலன், கல்விச் செல்வம், வெளிநாடு செல்லும் யோகம்
ரிஷப லக்னம்/ராசி & எதிலும் முதன்மை ஸ்தானம்
மிதுன லக்னம்/ராசி & சொல்லாற்றல், கதை, கவிதை, இசை துறைகளில் ஏற்றம்
கடக லக்னம்/ராசி & கற்பனை சக்தி, புகழ், கீர்த்தி, பேச்சாற்றல்
துலா லக்னம்/ராசி & தொழில், வியாபாரத்தில் பெரிய யோகங்கள்
விருச்சிக லக்னம்/ராசி & சகல பாக்யங்களும் பெறும் யோகம்
மகர லக்னம்/ராசி & வெளிநாடு வாசம், தண்ணீர் தொடர்பான துறைகளில் ஏற்றம்
மீன லக்னம்/ராசி & பூர்வ புண்ணிய அமைப்புகளின்படி யோகம். குழந்தைகளால் செல்வாக்கு.
மற்ற லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் சந்திரன் நீச்சம், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
பவுர்ணமி விரதம் சிறப்பான பலன் தரும். சத்யநாராயண பூஜை செய்வது நன்மை பயக்கும். அம்மன் கோயில்களில் மாலை நேர வழிபாடு உத்தமம். பக்தர்களுக்கு, ஏழைகளுக்கு நெய்சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம், பழங்கள் கலந்த சாதம் ஆகியவை வழங்கலாம்.
‘ஓம் ஷிர்புத்ராய வித்மஹே
அம்ரித் தத்வாய தீமஹி
தந்நோ சந்த்ர பிரசோதயாத்’
என்ற சந்திர காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் உம் சிவய நம சந்திர தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
திருவோண நட்சத்திரத்தன்று பெருமாள் கோயிலில் தாயாருக்கும், பெருமாளுக்கும் மஞ்சள், குங்குமம் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் வழங்கலாம். பவுர்ணமி அன்று சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் வழிபாடுகள் செய்து சந்திர தரிசனம் செய்யலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகில் உள்ள வரகுணமங்கை, கும்பகோணம் அருகே உள்ள திங்களூர் ஆகியவை சந்திர பரிகார ஸ்தலங்கள். சந்திரனுக்கு உண்டான முக்கிய திருத்தலம் திருப்பதி. இங்கு சந்திரனாகவே ஏழுமலையான் அருள்பாலிக்கிறார்.


செவ்வாய் :
நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம். வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமை திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம். போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றுக்கான அதிபதி செவ்வாய். நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான சில விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். போட்டி, பந்தயங்கள் உடல்திறன், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ் பெறவும் ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங், அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருள்கடாட்சம் அவசியம் தேவை.
செவ்வாயின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: செவ்வாய்
தேதிகள்: 9, 18, 27.
நட்சத்திரம்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
ராசி: மேஷம், விருச்சிகத்தில் ஆட்சி, மகரத்தில் உச்சம்
நிறம்: சிவப்பு
ரத்தினம்: பவளம்
தானியம்: துவரை
ஆடை: சிவப்பு
செவ்வாய்க்கு உண்டான எண்கள், கிழமை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவரது ஆதிக்கம் பெற்று விளங்குவார்கள். லக்னம் அல்லது ராசியில் செவ்வாய் இருப்பது யோகம் தரும். பிறந்த லக்னமும் செவ்வாய் தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & தலைமை பதவி, அதிகாரம், ஆட்சிபீடம்
ரிஷப லக்னம்/ராசி & மனைவி வழியில், கூட்டுத் தொழில் மூலம் யோகம்
கடக லக்னம்/ராசி & தொழில், பூர்வ புண்ணிய அமைப்பு, குழந்தைகளால் செல்வாக்கு
சிம்ம லக்னம்/ராசி & நிலபுலன்கள், தந்தை வழியில், பூர்வீக சொத்து மூலம், கல்வி செல்வம் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் யோகம்
துலா லக்னம்/ராசி & சொல்லாற்றல், மனைவி வகையில் யோகம்
விருச்சிக லக்னம்/ராசி & உயர்பதவி, ஆட்சி, அதிகாரத்தால் யோகம்
தனுசு லக்னம்/ராசி & பூர்வ புண்ணிய பலத்தின்படி யோகம். திடீர் அதிர்ஷ்டங்கள், பிள்ளைகளால் யோகம்
மகர லக்னம்/ராசி & தாய், தாய்வழி உறவுகளால் யோகம், நிலபுலன்கள், கல்வி செல்வத்தால் யோகம்
மீன லக்னம்/ராசி & பூர்வீக சொத்துகள், தந்தை வழியில், சொல்லாற்றல் மூலம் அதிர்ஷ்டம்
மற்ற லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் செவ்வாய் நீச்சம், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும். வழிபாடு, பரிகாரம்
எல்லா முருகன் கோயில்களும் செவ்வாய்க்கு உரிய தலங்கள்தான். பழநியில் செவ்வாயாகவே தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் முக்கிய பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளுள் திருக்கோளூர் செவ்வாய் ஸ்தலம். சென்னை அடுத்த பூந்தமல்லியில் வைத்தீஸ்வரன் சமேத தையல்நாயகி கோயில் உள்ளது. இது செவ்வாய் பரிகார ஸ்தலமாகும்.
‘ஓம் அங்காரகாய வித்மஹே
பூமிபாலாய தீமஹி
தந்நோ குஜப் பிரசோதயாத்’
என்ற செவ்வாய் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் சம் சிவய அங்காரக தேவாய நம’ என 108 முறை சொல்லலாம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் மற்றும் முருகன் துதிப்பாடல்கள் படிக்கலாம். அங்காரகன் எனப்படும் செவ்வாயை வணங்கி வழிபட்டால் கடன் தொல்லை, வறுமை, தோல் சம்பந்தமான நோய்கள் போன்றவை நீங்கி சகல யோகங்களும் வளங்களும் பெருகும்.




புதன் :
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் ‘பொன்’ என்பது செல்வத்துக்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும் என்பதையே சூசகமாக குறிப்பிட்டுள்ளனர். கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன். சொல்லாற்றல், மதிநுட்பம், சமயோஜித பேச்சு, வழக்குரைத்தல், கணக்கு, ஆடிட்டிங், பத்திரிகை, ஜோதிடம், வான சாஸ்திரம் ஆகிய துறைகளுக்கும் மூளை, நரம்பு மண்டலம் போன்ற மிக முக்கிய உறுப்புகளையும் கட்டுப்படுத்துபவர் புத பகவான்தான். அவர் அருள் இருந்தால் இத்துறைகளில் சிறந்து விளங்கலாம்.
புதனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: புதன்
தேதிகள்: 5, 14, 23.
நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி
ராசி: மிதுனத்தில் ஆட்சி & கன்னியில் உச்சம்
நிறம்: பச்சை
ரத்தினம்: பச்சை மரகதம்
தானியம்: பச்சைப்பயறு
ஆடை: பச்சை
புதனுக்கு உண்டான எண்கள் கொண்ட தேதிகள், நட்சத்திரம், ராசி ஆகியவற்றில் பிறந்தவர்கள் கல்வி, கலை, எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். மேலும் லக்னம், 2, 4, 5, 7, 9 போன்ற ஸ்தானங்களில் புதன் சுப பலம் பெற்றிருந்தால் புதன் அனுக்ரகம் நிச்சயம் உண்டு.
பிறந்த லக்னமும் புதன் தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & புதன் முழு பலத்துடன் இருந்தால்தான் நல்ல யோகங்கள் கிடைக்கும். சகோதரர்களால் சாதகங்கள் உண்டு.
ரிஷப லக்னம்/ராசி & சொல்லாற்றல், எழுத்துத்துறை, கலை, இலக்கிய துறைகளில் வெற்றி, குழந்தைகளால் யோகம்.
மிதுன லக்னம்/ராசி & கல்வியில் உயர்வு. எல்லா கலைகளிலும் தேர்ச்சி அடையும் யோகம். நிலபுலன்கள், பூர்வீக சொத்துகளால் யோகம். கம்ப்யூட்டர் துறையில் சாதனை படைக்கும் வாய்ப்பு.
சிம்ம லக்னம்/ராசி & கலை, இலக்கியம், சொல்லாற்றல் போன்றவற்றில் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & கல்வி, கலை, வித்தைகள், கம்ப்யூட்டர், கணக்கு, பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் மூலமாக அதிர்ஷ்டம்.
துலா லக்னம்/ராசி & கல்வி, ஆராய்ச்சி, பெரிய நிறுவனங்களை நிர்வகித்தல், பெரிய பதவிகள்.
தனுசு லக்னம்/ராசி & வெளிநாடு செல்லும் யோகம். ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் முதன்மை பெறும் வாய்ப்பு.
மகர லக்னம்/ராசி & சகல பாக்யங்களும் உண்டாகும். ஆராய்ச்சி துறைகளில் சாதனை படைப்பீர்கள்.
கும்ப லக்னம்/ராசி & எல்லா துறைகளிலும் ஏற்றம்.
மீன லக்னம்/ராசி & கல்வி, கேள்வி ஞானம் உள்பட சகல விஷயங்களிலும் சிறந்து விளங்குவீர்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் புதன் நீச்சம் பெறாமலும், 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12&ம் அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
மதுரையில் மீனாட்சி அம்மன் புதனாகவே அருள்பாலிக்கிறார்.
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் இருக்கும் திருவெண்காடு புதன் தலமாகும். பிரம்ம வித்யாம்பாள் சமேத ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில் தனி சன்னதியில் புத பகவான் காட்சி தருகிறார்.
நவதிருப்பதிகளுள் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.
‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்தோ புத பிரசோதயாத்’
என்ற புத காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் மம் ஹ்ரி உம் சிவ புத தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். பச்சைப் பயறு வேகவைத்து பசுமாட்டுக்கு வழங்கலாம். புத பகவானின் திருவருள் கிடைத்தால் கல்வியில் மாணவர்களுக்கு நாட்டம் ஏற்பட்டு அதிக மதிப்பெண்களை குவிப்பார்கள்.


குரு பகவான் :
குழந்தைச் செல்வம், காசு பணம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திரம் இந்த இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். கிரகங்களிலேயே சுப கிரகம் குரு. இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும். ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட வாக்கு இவரை குறிப்பதுதான். சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான்.
குருவின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: வியாழன்
தேதிகள்: 3, 12, 21, 30
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி: தனுசு, மீனம். கடகத்தில் உச்சம்
நிறம்: மஞ்சள்
ரத்தினம்: புஷ்பராகம்
தானியம்: கொண்டைக்கடலை
ஆடை: தூய மஞ்சள்
குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும்.
பிறந்த லக்னமும் குரு தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & பாக்ய ஸ்தான பலன்கள், கல்வியில் உயர் நிலை, நிதி, நீதித்துறையில் பணிபுரியும் யோகம்.
மிதுன லக்னம்/ராசி & வெளிநாடு செல்லும் வாய்ப்பு, மனைவி வகையில் யோகம், தொழில் மூலம் உயர்வு.
கடக லக்னம்/ராசி & வெளிநாட்டு தொழில் யோகம். பள்ளி, கல்லூரிகள் அமைக்கும் யோகம்.
சிம்ம லக்னம்/ராசி & திடீர் அதிர்ஷ்டங்கள். பிள்ளைகளால் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & கல்வி, கலை ஆகியவற்றில் யோகம். வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும்.
விருச்சிக லக்னம்/ராசி & வங்கி, நீதித்துறையில் உயர் பதவிகள். சொந்த நிறுவனம், பைனான்ஸ் கம்பெனி தொடங்கும் யோகம்.
தனுசு லக்னம்/ராசி & கல்வியில் மேன்மை, நிலபுலன்களால் யோகம்.
கும்ப லக்னம்/ராசி & சொல்லாற்றல், நிதி, நீதி போன்ற துறைகளில் யோகம்.
மீன லக்னம்/ராசி & கவுரவ பதவிகள். தொழில், வியாபாரத்தால் செல்வச் செழிப்பு, அந்தஸ்து, புகழ் உண்டாகும் யோகம்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும். வழிபாடு, பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். அங்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம். திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். எல்லா சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடலாம்.
‘ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
க்ரூணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்’
அல்லது ‘ஓம் குரு தேவாய வித்மஹே
பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்’
என்ற குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்பிம் சிவய வசி குரு தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.




சுக்கிரன் :
எந்த கிரகம் கொடுத்தாலும் சுக்கிரன்தான் கொடுக்கிறார் என்று வழக்கு மொழி உண்டு. ‘அவனுக்கென்னப்பா.. சுக்கிரதிசை’ என்பார்கள். அந்த அளவுக்கு சுக, போகங்களை வாரி வழங்கக்கூடிய கிரகம் சுக்கிரன். பணம், புகழ், ஆள் பலம், சுகபோகங்கள், கலை, ஆடல், பாடல், சங்கீதம், சின்னத்திரை, பெரியதிரை என மேடையேறும் வாய்ப்பு, செல்வாக்கு, ஆடம்பர பங்களா, சொகுசு கார் என்று எண்ணிலடங்கா ஏற்றங்களை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிரனை காதல் கிரகம் என்றழைப்பார்கள். திருமண பந்தத்தில் சுக்கிரனின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக இருந்தவர்கள்கூட திருமணத்துக்கு பிறகு சுக்கிரனின் அமைப்பால் மிகப் பெரிய செல்வச் சீமான்களாக மாறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு யோகத்தை தரக்கூடிய கிரகம். கிரகங்களிலேயே அதிகபட்சமாக 20 ஆண்டுகளை தன் ஆளும் திசையாக பெற்றிருக்கும் கிரகமும் சுக்கிரனே.
சுக்கிரனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: வெள்ளி
தேதிகள்: 6, 15, 24
நட்சத்திரம்: பரணி, பூரம், பூராடம்
ராசி: ரிஷபம், துலாம்
நிறம்: தூய வெண்மை
ரத்தினம்: வைரம்
தானியம்: மொச்சை
ஆடை: பளபளக்கும் வெண்மை
சுக்கிரனுக்கு உண்டான கிழமை, தேதிகள், நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பல யோகங்களை தரும். ஜாதக கட்டத்தில் யோகமான இடத்தில் அவர் இருப்பதும் சிறப்பாகும். பிறந்த லக்னமும் சுக்கிரன் தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த வகையான யோகங்கள், பலன்களை சுக்கிரன் தருவார்?
மேஷ லக்னம்/ராசி & சொல்லாற்றல், கதை, கவிதை எழுத்துத்துறைகளால் யோகம்.
ரிஷப லக்னம்/ராசி & ஆடல், பாடல், சங்கீதம் போன்றவற்றால் புகழ்.
மிதுன லக்னம்/ராசி & திடீர் அதிர்ஷ்டங்கள். பிள்ளைகளால் யோகம், அரசியல், அதிகார பதவி யோகம்.
கடக லக்னம்/ராசி & வீடு, நிலபுலன்கள், வண்டி, வாகனம், கல்விச் செல்வத்தால் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & எல்லா வகையான செல்வங்களாலும் யோகம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம்.
துலா லக்னம்/ராசி & இசை, பேச்சு, சின்னத்திரை, பெரிய திரை போன்றவை மூலம் ராஜயோக பலன்கள்.
மகர லக்னம்/ராசி & பிள்ளைகளால் யோகம், தொழில் தொடங்கும் யோகம், பட்டம், பதவிகள் என சுகபோக வாழ்க்கை.
கும்ப லக்னம்/ராசி & கல்விச் செல்வத்தால், வண்டி நிலபுலன்களால் யோகம்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும், சுக்கிரன் நீச்சம் பெறாமலும் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருப்பது அவசியம்.
வழிபாடு, பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் பரிகார ஸ்தலமாகும். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் சுக்கிரனாகவே அருள்புரிகிறார். நவ திருப்பதிகளில் தென் திருப்பேரை சுக்கிர ஸ்தலாகும்.
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்’
அல்லது ‘ஓம் ராஜாதபாய வித்மஹே
ப்ருகு சுதாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்’ என்ற சுக்கிர காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லலாம். ‘ஓம் சும் ரீஉம் சுக்ர தேவாய நம’ என்று 108 முறை சொல்லலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருக்கலாம். அம்பாள், ஆண்டாள் ஸ்தலங்களில் பக்தர்கள், ஏழைகளுக்கு மொச்சை சுண்டல் வழங்கலாம்.





சனீஸ்வர பகவான் :
“உங்களுக்கு நூறு ஆயுசு” & ஒருவரை பற்றி பேசும்போதோ, நினைக்கும்போதோ அவரே வந்துவிட்டால் இப்படி சொல்வோம். நல்ல ஆரோக்கியத்துடன் செல்வச் செழிப்புடன் நீண்ட நாள் வாழவேண்டும் என்பது எல்லாருக்கும் ஆசை. இந்த மூன்றையும் அருள்பவர் சனீஸ்வர பகவான். சிவபெருமானைத் தவிர இரண்டு பேருக்குத்தான் ‘ஈஸ்வர’ பட்டம் உண்டு. ஒருவர் விக்னேஸ்வரர். இன்னொருவர் சனீஸ்வரர். கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி மட்டுமே. விக்னேஸ்வரர் என்ற விநாயகர் போலவே சனீஸ்வரரும் தடை, தடங்கல்களை அகற்றி வளமான வாழ்வும் நீண்ட ஆயுளும் வழங்குபவர். மனிதனின் ஆயுள் ஸ்தானத்தை தீர்மானிப்பவராக சனி பகவான் திகழ்கிறார்.
உழைப்புக்கு ஆதாரமாக உள்ள கிரகம் சனி. கடும் உழைப்பாளிகளுக்கு சனி பகவானின் அருள்கடாட்சம் என்றும் உண்டு. சாதாரண தொழிலாளியாக இருப்பவர்களுக்கு மேலும் உழைக்கும் ஆற்றலையும் சக்தியையும் கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்களாக்கும் வல்லமை சனி பகவானுக்கு உண்டு. நம் ஜாதகத்தில் சனி பகவான் நன்கு பலமாக இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அதிகாரம், பட்டம், பதவி எல்லாம் தானாக தேடிவரும். ஜாதக அமைப்பை தவிர அவரவர் ராசிக்கு கோசார பலன்களை தருவதிலும் சனீஸ்வரன் வலிமை மிக்கவர். ஏழரை சனி, 4&ல் சனி, 8&ல் சனி என்று ஒவ்வொருவருக்கும் 30 வருடங்களுக்குள் இந்த 3 விதமான கோசார பலன்களை தருகிறார். ஜாதகத்தில் சனி பகவான் பலமாக, யோகமாக இருந்தால் எல்லா துறைகளிலும் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.
சனியின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: சனி
தேதிகள்: 8, 17, 26
நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
ராசி: மகரம், கும்பம்
நிறம்: கருப்பு
ரத்தினம்: நீலம்
தானியம்: எள்
ஆடை: கருப்பு
சனிக்கு உரிய தேதிகள், கிழமை, நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள், யோகம், பட்டம், பதவி, தொழிலதிபர் போன்ற அம்சங்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி பகவான் ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருப்பதும் அவசியம்.
பிறந்த லக்னமும் சனி தரும் யோகமும்
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த வகையான யோகங்கள், பலன்களை சனி பகவான் தருவார்?
மேஷ லக்னம்/ராசி & தொழில் துறையால் யோகம். பெரிய பதவியில் அமரும் யோகம்.
ரிஷப லக்னம்/ராசி & தர்ம கர்மாதிபதியாக சனி வருவதால் ராஜாங்க யோகம் கிடைக்கும். உயர்பதவி, பட்டம், தொழில், சொத்து, சுகம் என்று சகல பாக்யங்களும் கிடைக்கும்.
மிதுன லக்னம்/ராசி & பூர்வீக சொத்து, கவுரவ பதவிகள், அரசியல் பிரவேசம் என சகல பாக்யங்கள், சகல யோகங்கள்.
கன்னி லக்னம்/ராசி & அஷ்டலட்சுமி யோகம், கோடீஸ்வர யோகம். பிள்ளைகள், மாமன் வகை உறவுகளால் செல்வம், செல்வாக்கு மற்றும் யோகங்கள்.
துலா லக்னம்/ராசி & நிலபுலன்கள், சொத்து சேர்க்கை, தாய் மூலம் யோகம், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள், உயர்பதவி.
விருச்சிக லக்னம்/ராசி & கல்வி மேன்மை, அதிகாரங்கள் நிறைந்த பதவி, உயர்பதவிகள், நில புலன் சேர்க்கை, பூர்வீக சொத்துக்கள்.
தனுசு லக்னம்/ராசி & சொல்லாற்றல், குடும்ப பூர்வீக சொத்துக்களால் அதிர்ஷ்டம்.
மகர லக்னம்/ராசி & கவுரவ பதவிகள் தேடிவரும். தொழில் அதிபராகும் யோகம்.
கும்ப லக்னம்/ராசி & பல வகையிலும் சம்பத்துக்கள், சொத்துக்கள், செல்வம் வந்து சேரும். பட்டம், பதவி, செல்வாக்கு.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் சனி நீச்சம் பெறாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும், 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமலும் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
சனிக்கிழமை விரதம் இருந்து எள் விளக்கேற்றி சனீஸ்வரரை வழிபடலாம். தினமும் காலையில் சாப்பிடும் முன்பு காகத்துக்கு உணவிடலாம்.
‘ஓம் சனைஸ்சராய வித்மஹே
சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மந்தப் பிரசோதயாத்’
என்ற சனி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் சம்சம் ரீஉம் சனைச்வர தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
திருநள்ளாறு சனீஸ்வர ஸ்தலத்தில் அன்னதானம் செய்யலாம். நவதிருப்பதிகளுள் பெருங்குளம் சனீஸ்வர ஸ்தலமாகும். கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றவர்களுக்கு உதவிகள் செய்யலாம்.






ராகு, கேது :
ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள். ராகு, கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள். ராகு, கேது பற்றி பல்வேறு புராணக் கதைகள் இருக்கின்றன. அவர்கள் செய்த தவ வேள்விகளுக்கு மகிழ்ந்த பரமேஸ்வரனும், விஷ்ணுவும் நவக்கிரக பரிபாலனத்தில் இடம்பெறும் பாக்யத்தை அவர்களுக்கு தந்தனர்.
ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது இடம்பெறும். இருவரும் திசைகள் மற்றும் பிற கிரக தசையின் புத்திகளில் யோக, அவ யோகங்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள். மற்ற 7 கிரகங்கள் போல ராகு, கேதுக்கு சொந்த வீடு, உச்ச வீடு, நீச்ச வீடு போன்றவை கிடையாது. ஆனாலும், இவர்களுக்கு உச்ச வீடு இருப்பதாக சில ஜோதிட நூல்களில் ஊர்ஜிதமாகாத தகவல்கள் உள்ளன. ராகு, கேதுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு. இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள். மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2 கிரகங்களுக்கும் உண்டு. பொதுவாக லக்னத்துக்கு 3, 5, 6, 9, 11 போன்ற ஸ்தானங்களில் உள்ள ராகு, கேது திடீர் தனயோகம், எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டங்கள், யோகங்கள் போன்றவற்றை தருவார்கள்.
கல்வி, அறிவு தருவதில் ராகு கேது மிக முக்கியமானவர்கள். லக்னத்துக்கு 9&ம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகு அல்லது கேது இருந்தால் ஏட்டுக் கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும் புத்தி சாதுர்யமும் வெளிப்படும். மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள் அவசியம். மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகளில் இடம் கிடைக்க, டாக்டர் துறையில் புகழ் பெற, சிறப்பாக சிகிச்சைகள் மேற்கொள்ள, ஸ்கேன் சென்டர், மெடிக்கல்ஸ் வைக்க, இத்தொழில்கள் சிறப்பாக நடக்க மருத்துவ கிரகமான கேதுவின் அருள் வேண்டும். அவரது அருள்கடாட்சம் இல்லாமல் இந்த துறையில் முன்னேற முடியாது. திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு செய்வது மிக அவசியம்.
10&ம் இடத்து கிரகத்துடன் ராகு சேர்ந்தால் சினிமா துறையில் புகழ் பெற முடியும். கேமராமேன் போன்ற டெக்னிக்கல் துறைகளில் முன்னேறலாம். செவ்வாயுடன் ராகு சேர்ந்து இருந்தால் பல கலைகளில் வித்தகராகலாம். சனியும் ராகுவும் சேர்ந்து இருந்தால் கலைத்துறை, நிழற்படம், எடிட்டிங், அனிமேஷன் போன்ற துறைகள் அமையும். இசை துறையில் ஆழ்ந்த அறிவும் பெயரும் புகழும் கிடைக்க இசைஞானி என்று சொல்லக்கூடிய கேதுவின் அருள் வேண்டும். லக்னத்துக்கு 12&ல் கேது இருந்தால் மோட்ச அம்சம் என்பார்கள். அப்படிப்பட்ட ஜாதகருக்கு மறுபிறவி கிடையாது என்று கூறப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளில் ராகு இருந்தால் உயர்தர ராஜ யோக பலன்கள் உண்டாகும். ஒருவர் கோடீஸ்வர பட்டம் பெற்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது சேர்க்கை மிக முக்கிய அம்சம். இவர்களுக்கு மற்ற கிரக அம்சங்களும் சாதகமாக இருந்தால் பெயர், புகழ், அதிகாரம் அந்தஸ்து என எல்லா நலன்களும் யோகங்களும் அதிர்ஷ்டங்களும் எல்லா பக்கம் இருந்தும் குவியும்.
வழிபாடு, பரிகாரம்
ராகு ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (வடக்கு கோவில்) பரிகார ஸ்தலமாகும். சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. விஷ்ணு துர்க்கை வழிபாடு பல தடைகளை நீக்கும். சிவன் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் பெருமாள் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகு காலத்திலும் வணங்குவது நல்லது. புற்று இருக்கும் அனைத்து அம்மன், காளி கோயில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம்.
‘ஓம் ஸூக்தந்தாய வித்மஹே
உக்ர ரூபாய தீமஹி
தந்நோ ராகு பிரசோதயாத்’
என்ற ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம் காத்யானாய வித்மஹே
கன்யாகுமாரீச திமஹி
தந்நோ துர்க்கே பிரசோதயாத்’
என்ற துர்க்கை காயத்ரி மந்திரத்தை ராகு திசை நடப்பவர்கள் சொல்வது சிறப்பு. கேது கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே கீழப் பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (தெற்கு கோவில்) பரிகார ஸ்தலமாகும். சிவஸ்தலம் காளஹஸ்தியில் கேதுவுக்கு ஹோம பூஜைகள் நடக்கின்றன. சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடலாம். கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்புமிக்கதாகும். காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.
‘ஓம் சித்ரவர்ணாய வித்மஹே
சர்ப்ப ரூபாய தீமஹி
தந்நோ கேது பிரசோதயாத்’
என்ற கேது காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். ‘ஓம் ஏக தந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி பிரசோதயாத்’
என்ற விநாயகர் காயத்ரி மந்திரத்தை கேது திசை நடப்பவர்கள் சொல்வது சிறப்பு. நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்பவர்களுக்கும் தான் மட்டுமல்லாமல் இந்த உலகமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற உள்ளம் கொண்டவர்களுக்கும் நற்பயன்கள், பல்வேறு யோகங்கள், அதிர்ஷ்டங்களை வாரிவழங்க நவக்கிரகங்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நற்காரியங்களை செய்து அவர்களது அனுக்ரகம் பெறுவோமாக.

No comments:

Blogger Gadgets