Thursday, June 5, 2014

சூரியன் - சந்திரன் - செவ்வாய்


பாரப்பா மூன்றாறு பத்துஒன்று


பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன்நிற்கில்

சீரப்பா சீலனுட மனையில் தானும்

சிவசிவா தெய்வங்கள் காத்திருக்கும்

வாரப்பா வாகனமும் ஞானம்புத்தி

வளமான புத்திரர்கள் அரசர்நேசம்

கூறப்பா புரிவனடா சத்துருங்கன்

கொற்றவனே மூர்க்கனென்று கூறுவீரே.


இலக்கினத்திற்கு 3,6,10,11` ஆகிய இடங்களில் பதுமன் என்றும் இனன் 


என்றும் பரிதி என்றும் கூறப்படும் சூரியன் தேறி நின்றால் அச்சாதகனுடைய 

மனையில் சிவ பரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து 

நிற்கும், அச்செல்வனுக்கு நல்ல வாகன யோகமும், நல்ஞானமும், 

விசேடமானா புத்தியும், வளமை தரும் புதல்வர்களும் அரசர்களுடைய 

ஆதரவும் அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக 

அமைந்து மூர்க்கனாக விளங்குவான் என்றும் கூறுவாயாக. 



கூறேநீ ஈராறும் ரெண்டுரெண்டு


கொற்றவனே பாக்கியமும் யேழோடஞ்சில்

ஆரேனீ ஆதித்த னிருந்தானானால்

அப்பனே அங்கத்தில் காந்தலுண்டு

சீரேனீ சொற்பனமும் சிரங்குகண்ணோய்

சிவசிவா சிந்தித்த தெல்லாமாகும்

கூறேனீ போகருட கடாக்ஷத்தாலே

கொலையீனார் பகையது வருகுஞ்சொல்லே


சூரியபகவான் 2,3,4,7,5 ஆகிய இடங்களில் இருப்பாரேயானால் 


[இலக்கினத்திலிருந்தது] அச்சாதகனுக்கு உடலில் காந்தல் உண்டென்றும் 

சொற்ப அளவிற்கே சீர் பெறுவான் என்றும், சிவனருளால் சிரங்கு, 

கண்ணோய் முதலியன ஏற்படும் என்றும் நின்று இதந்தரும் என் 

குருநாதரான போகரது கருணா கடாக்ஷத்தாலே இம் மகனுக்கு, வஞ்சித்துக் 

கொலை செய்யும் ஈனர்களின் பகையும் வரும் என்று கிரகநிலையை நன்கு 

ஆய்ந்தறிந்து பலன் கூறுவாயாக. 


கேளப்பா கலையினுட பெருமை சொல்வேன்


கனமுள்ள தனலாபம் கேந்திரகோணம்

ஆளப்பா அகம்பொருளும் நிலமுங்காடி

அப்பனே கிட்டுமடா கறவையுள்ளோன்

சூளப்பா சுகமுண்டு ஜென்மனுக்கு

சுயதேச பரதேச அரசர்நேசம்

கூளப்பா கொடியோர்கள் சேர்ந்துநோக்க

கொற்றவனே கலைகண்டு கூற்ந்துசெப்பே


அமிர்த கலையை அள்ளி வழங்கும் சந்திர பகவானின் பெருமையையினை 


இனிக் கூறுகிறேன் கேட்பாயாக! மிகுதியான நன்மை தரும் இரண்டாம் 

இடத்திலும் இலக்கினத்திற்குப் பதினொன்றாம் இடமான 

இலாபஸ்தானத்திலும், மற்றும் 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களிலும் 

1,5,9 என்னும் திரிகோண ஸ்தானத்திலும் சந்திர பகவான் நிற்பாரேயாகில் 

நல்ல மனையும், நிறைந்த தன வருவாயும் நிலமும், விளை வயலும் கன்று 

காலிகளும் நிரம்ப வந்தடையும். இச்சாதகனுக்கு மெத்த சுகம் உண்டென்றும் 

சுயமான தேசத்திலும் பிற தேசத்திலும் வாசஞ்செய்யும் போதும் அரசினரால் 

ஆதாயம் மிகவும் உண்டாகும்.எனினும் தீயகோள்களை தங்கள் 

தீட்சண்யமான பார்வையில் நோக்குதலின் உண்மையறிந்து சந்திர 

பகவானின் கலை தீட்சண்யம் அறிந்து பலன் கூறுக. 


சூடப்பா சந்திரனார் மூன்றேழ்ஐந்து


சுத்த இந்து பன்னொன்றில் தனித்திருக்க

மாடப்பா மந்திரங்கள் செய்வன் காளை

மகத்தான வாதமொடு வயித்தியம் செய்வான்

கூடப்பா குடும்பமது விருத்தியாகும்

குவலயத்தின் எதிரிக்கு மார்பிலாணி

வீடப்பா போகருட கடக்ஷத்தாலே

விதியறிந்து புவியோர்க்கு விளம்புவாயே.


எல்லாராலும் போற்றப்படும் சந்திரபகவான் 3,7,5,11 ஆகிய இடங்களில் 


தனித்திருக்க, அச்சாதகன் செல்வமுள்ளோன் என்றும் மந்திரங்கள் அறிந்து 

முறைப்படி பிரயோகித்து வெற்றி காண்பவன் என்றும் வாதம் செய்வதில் 

வல்லவன் என்றும் வயித்திய சாத்திரத்தில் சிறந்தோன் என்றும் அவனது 

குடும்பமானது என்றும் விருத்தியடையும் அவனது எதிரிகள் அழிவர் 

என்றும் எனது சற்குருவான போகரது கருணையாலே புலிப்பாணி 

அருளியதை புவியோர்க்கு உணர்த்துவாயாக. 


கேளப்பா செவ்வாயும் ஒன்று பத்து


கனமுள்ள தனலாபம் ஆறில்நிற்க

ஆளப்பா அகம்பொருளும் நிலமும் செம்பொன்

அப்பனே கிட்டுமடா தொழிலுமுள்ளோன்

சூளப்பாரு குடித்தலைவன் சத்துருபங்கன்

கொற்றவனே வகையாகப் பகர்ந்து சொல்லே


புலிப்பாணி ஆகிய நான் சொல்லும் இக்குறிப்பினையும் நீ நன்கு உணர்ந்து 


கொள்வாயாக! செவ்வாய் கிரகமானது 1,10,2,11,6 ஆகிய இடங்களில் 

அமர்ந்திருப்பின், அவனுக்கு மனை வாய்த்தாலும், 

செம்பொருட்சேர்க்கையும், சிறந்த நிலமும்,செம்பொன்னும் கிட்டுமென்றும், 

செய்தொழில் விருத்தியுடையவன் என்றும் பல குடும்பங்களைக் காக்கும் 

தலைவன் என்றும், எதிரிகளை வெற்றி கொள்ளும் வீரனென்றும் மற்றைய 

கிரக நிலவரங்களை ஆராந்து கூறுவாயாக. 


சொல்லப்பா ஆறெட்டு பன்னிரண்டும்


சுகசப்த கேந்திரமும் பாக்கியம் ரெண்டில்

அல்லப்பா அத்தலத்தில் ஆரல்நிற்க

அப்பனே அகம் பொருளும் நிலமும் நஷ்டம்

குள்ளப்பா குடும்பமது சிதறிப்போகும்

கொற்றவனே குருவுக்கு தோஷமுண்டாம்

வல்லப்பா போகருட கடாக்ஷத்தாலே

வளமாகப் புலிப்பாணி வசனித்தேனே.


இன்னுமொன்றும் சொல்லுகிறேன் கேட்பாயாக. இச் செவ்வாய், சேய், 


பவுமன் என்றும் உரைக்கப்படுபவன். இவன் 6,8,12,3,7,10,9-இல் நிற்க 

நிலமும் பொருளும் மனையும் சேதமாகும்; குடும்பமானது சிதறிப்போகும் 

இதனைச் செவ்வாய் [குரு] தோடம் என்றும் கூறுவார்கள் வல்லவராகிய 

என் சற்குரு போக மாமுனிவரின் கருணையாலே வன்மையுடன் 

புலிப்பாணி முனிவராகிய நான் கூறினேன்.
 

No comments:

Blogger Gadgets