காராகத்துவங்கள் – பத்தாம் பாவம்-ஜோதிட விளக்கம்
பத்ததின் பலன்வி யாரம்
சீவனம் பகரும் கீர்த்தி
வித்தைஆக் கிளையே வாண்மை
மிகுந்தஆ கமஞா னங்கள்
நித்திரை கர்மம் மானம்
பூஷணம் நிதியோ டெல்லாம்
கோத்தவன் கதிர்மால் நீலன்
குருவையும் பேணிப் பாரே!
பத்தாம் இடத்தைக் கொண்டு – வர்த்தகம், பிழைப்பு, புகழ், கலை அறிவு, தூக்கம், தொழில், கெளரவம், விருது, பொருட்செல்வம் ஆகியவற்றைப் பற்றி அறியலாம். சூரியன், புதன், குரு, சனி ஆகியோரின் நிலையையும் ஆராய்ந்து பார்த்து பலன்களை சரியாக தீர்மானிக்க முடியும்.
பத்தாம் இடம் ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம், தசம கேந்திரம் என்றெல்லாம் கூறப்படும்.
முந்திய சொன்ன சேதி
மொழிந்திடப் பத்தைப் பார்க்க
வந்திடும் கர்மக் கோளன்
வரும்பல வீன மாகச்
சிந்தைசஞ் சலவா னாகும்
செய்தொழில் ஆசா ரங்கள்
சொந்தமாய் அவனி டத்தில்
தோற்றிடும் வகையைஸ் சொல்லே!
பத்துக்குடையவன் வலு இழந்து நின்றிருந்தால் அந்த ஜாதகன் நிலையற்ற மனமுடையவாயிருப்பான்.
செய்தொழிலும் ஆசார அனுஷ்டானங்களும் அவனிடத்தில் நிலை பெற்றிருக்க மாட்டாது.
குருபுகர் கதிர்மால் இன்னொளி
குணம்பல வீன மாக
ஒருபன்னி ரண்டில் ஆறில்
எட்டினில் ஊறி நின்றால்
வருவது பொல்லாக் கன்மம்
வழங்குவன் பத்தில் ராகு
எரிகதிர் கூடக் காசி
யாத்திரை இவனே போவன்!
குருவும் சுக்கிரனும் சூரியனும் புதனும் வலு இழந்து 6, 8, 12 ஆம் ஸ்தானங்களில் மறைந்து நின்றிருந்தால், அந்த ஜாதகன் பாவத் தொழில் செய்து பிழைப்பான்.
பத்தாம் இடத்தில் இராகுவோ, சூரியனோ ஈரியிருந்தால் அந்த ஜாதகன் காசி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை போவான்.
மீனமே தானம் பத்தாய்
விளங்கிடும் மதியாய் மோட்சம்
தானவன் சுங்க னோடும்
கூடியே உச்சம் சார்ந்து
ஆனகேந் திரத்தில் ஏற
அவன்கங்கா ஸ்தானம் ஆடப்
போனவன் என்று பிள்ளை
பூமியில் வருநாள் பேசே.
மீன ராசி பத்தாமிடமாய் அமைந்திருக்க அந்த மீன ராசியில் சந்திரன் நின்றிருந்தால், அந்த ஜாதகன் முக்திப் பேற்றை அடைவான்.
பத்துக்குடையவன் சுக்கிரனுடன் சேர்ந்து உச்சம் பெற்றுக் கேந்திர ஸ்தானங்களில் நின்றிருந்தால், அந்த ஜாதகன் கங்கையில் நீராடும் பாக்கியம் பெறுபவன் என்று அவன் பிறந்த அன்றைக்கே அழுத்தமாக எடுத்துரைக்கலாம்.
வியமதில் மாலை அந்த
வியபதி கர்ம மாகில்
நயமுளோர் புதனைப் பார்க்க
நல்லபுண் ணியங்கள் செய்வான்!
தயவோடு பத்தில் பூர்ண
சந்திரன் இருந்து வாழ்ந்தால்
அயனிட்ட அதிகா ரத்தால்
அவனும்கா சிக்கே செல்வான்!
பன்னிரெண்டாமிடத்தில் புதன் அமர்ந்திருக்க அந்த புதனைச் சுபர்கள் பார்வையிட பன்னிரெண்டுக்குடையவன் பத்தாமிடத்தில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகன் புண்ணியச் செயல்கள் பல செய்வான்.
வளர்பிறைச் சந்திரன் பத்தாமிடத்தில் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகன் பிரமதேவன் விதித்த விதிப்படி காசிக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்வான்.
பாவர்கள் பலவா னாகப்
பத்தினில் சாக சங்கள்
சீவர்கள் பலவி னங்கள்
திருந்தநற் கருமம் செய்யான்!
கோவயில் பத்தின் கோளன்
குருபுதன் இவரைக் கொண்டு
ஆவதே யாக கன்மம்
அளிக்கச்சிந் திக்க லாமே!
பாவக் கிரகங்கள் பலம்பெற்று பத்தாமிடத்தில் நின்றிருந்தால் அந்த ஜாதகன் வீரதீரச் செயல்கள் புரிபவனாவான்.
பத்தாம் இடத்தில் உள்ள கிரகங்கள் பலவீஎனமுற்று நின்றிருந்தால், அந்த ஜாதகன் செய்வான திருந்தச் செய்யாதவாக இருப்பான்!
பத்துக்குடையவன், குரு , புதன் ஆகியோரின் நிலைமையை வைத்து அந்த ஜாதகன், யாகம் முதலிய தெய்வீக கர்மங்களைச் செய்வானா, செய்ய மாட்டானா என்று நிர்ணயிக்க வேண்டும்.
No comments:
Post a Comment