ஏக தாரத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்பு
ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 7ம் பாவம் களத்திரஸ்தானமாகும். 2ம் வீடு குடும்பஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரன் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் 7ம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருந்து, 7ம் அதிபதி கேந்திர, திரிகோணஸ்தானங்களில் தனித்து அமையப் பெற்று, சுபர் பார்வை மற்றும் சுபர் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும், அப்படியே 7ம் வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றாலும் ஒரே ஒரு கிரகமாக இருப்பதும் அதிலும் குறிப்பாக சுபகிரகமாக இருப்பதும் நல்லது.
ஒருவரது வாழ்க்கையில் களத்திரகாரகனாக சுக்கிரன் மிக முக்கிய பங்குவகிப்பதால் அவர் கிரகச்சேர்க்கையின்றி அமைவதும், சுபர் பார்வையுடன், சுபர் நட்சத்திரத்தில் அமைந்திருப்பதும் நல்லது. குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டில் அதிக கிரகச் சேர்க்கையில்லாமல் இருப்பதும் மிகவும் நல்லது. குருவின் பார்வையானது 7ம் வீட்டிற்கோ, 7ம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ இருப்பதும் மிகவும் சிறப்பு. மேற்கூறியவாறு ஒருவரது ஜாதகத்தில் கிரக அமைப்புகள் அமையுமேயானால் ஏக தாரம் மட்டுமே உண்டாகி வாழ்க்கையில் எந்த விரத சலனங்களும் இன்றி வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இருக்கும்.
பொதுவாக 7ம் அதிபதியும் சுக்கிரனும் கிரகச் சேர்க்கை இல்லாமல் இருப்பது ஏக தாரத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், அக்கிரகங்களுக்கு இருபுறமும் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும் பாவி கிரகங்களின் பார்வை பட்டாலும் வாழ்வில் சில பாதிப்புகள் உண்டாகிறது. இப்படி அமையப் பெற்ற பாவகிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்ற போது ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகளை உண்டாவதில்லை.
சுக்கிரன் களத்திரகாரகன் என்றாலும், செவ்வாயும் திருமண வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். செவ்வாயும் சூரியனும் கூடி ஒருவரின் ஜாதகத்தில் எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் இரு தாரம் உண்டாக கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால் செவ்வாய் சூரியன் சேர்க்கை இல்லாமல் இருப்பது நல்லது.
ஜென்ம லக்னம் எப்படி ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு முக்கியமோ, சந்திரா லக்னமும் அவ்வளவு முக்கியமாகும். சந்திரனுக்கு 7ல் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் சந்திரனுக்கு 7ம் அதிபதி கிரகச் சேர்க்கையின்றி இருப்பதும் நல்லது.
இப்படிப்பட்ட கிரகச் சேர்க்கைகள் ஆண், பெண் ஜாதகங்களில் அமைந்திருக்குமேயானால் வாழ்க்கையில் எந்த பிரச்சினைகளும் இன்றி பெண்கள் சீதையைப் போலவும், ஆண்கள் ராமனைப் போலவும் வாழ முடியும்.
No comments:
Post a Comment