Thursday, June 26, 2014

செவ்வாய் தோஷ நிவர்த்திகள்



விவாகம் செய்வதற்கு ஸ்திரி- புருஷரின் ஜாதகங்களை மிக நுண்ணியமாக ஆராய்ந்து பரிசீலித்து தசப் பொருத்தங்களும், முக்கியமாக செவ்வாய் தோஷத்தையும் நல்லமுறையில் அறிந்துகொண்ட பிறகே மணமக்களுக்கு விவாஹம் செய்ய வேண்டும். 

பொருத்தங்களையும், செவ்வாய் தோஷத்தையும் கவனியாது விவாஹம் செய்யப் படுமானால், மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமையின்மை, சந்ததி யின்மை, சுகமின்மை, மணமக்கள் பிரிந்திருத்தல், இல்வாழ்க்கையின் தன்மையை நுகராதிருத்தல், ஒருவரை விட்டு ஒருவர் இயற்கை எய்தல் போன்ற நல மற்ற செயல்கள் நடை பெற்று விடுகின்றன. 

ஒருசில மண மக்களுக்கு தோஷமிருந்து சந்ததி ஏற்படுமாயின் கருவழிதல், கர்ப்ப ரோகம், அற்பாயுளுள்ள புத்திர புத்திரிகள் பிறத்தல், காலங்கடந்து புத்திரப் பேறு அடைதல், ஸ்வீகாரம் போன்ற செயல்கள் தொடரும், 

களத்திரஹானியும், களத்திர தோஷமும், ஒருவரையொருவர் கோபதாபத்தால் பிரிந்திருத்தலும், உப களத்திரமும், உபயகளத்திரமும், களத் திரத்தால் இன்ப சுகங்களை பெறாமலும், களத்திர நஷ்டத்தை அனுபவிப்பதையும் காணமுடிகிறது. 

செவ்வாய் தோஷம்:

ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 2-4-8-12 ஆகிய ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால செவ்வாய் தோஷமாகும்.

புருஷருக்கு இலக்கனத்திற்கு 2-7-ல் செவ்வாய் இருக்கும்போது ஸ்திரிக்கு 4-12-ல் செவ்வாய் இருந்தால் ; செவ்வாய் தோஷமாகும். 

ஸ்திரி-புருஷர்களுக்கு லக்னத்திற்கு 8-ல் செவ்வாய் நின்றால், செவ்வாய் தோஷமாகும்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி:

இந்த செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு இடத்திலிருந்தாலும் செவ்வாய் தோஷம் நிவர்த்தி. அதாவது தோஷமில்லை எனலாம்.. 

லக்னம், சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு இரண்டாமிடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த இரண்டாமிடம் மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷமில்லை. 

லக்னம்-சந்திர லக்னம் சுக்கிர லக்னம் இவைகளுக்கு நாலாமிடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த நாலாமிடம் மேஷமும், விருச்சிகமுமாகில் தோஷமில்லை. 

அதே போன்று லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 12-ம் இடம் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த 12-ம் இடம் ரிஷபமும் துலாமுமானால் தோஷ மில்லை. 

லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளும் 4-ம் இடத்தில் இருக்கக் கூடிய செவ்வாய் அந்த 4-ம் இடம் மேஷமும், விருச்சிகமுமாகில் தோஷமில்லை. 

லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 7-மிடத் தில் இருக்கக் கூடிய செவ்வாய், அந்த 7-ம் இடம் மகரமும், கடகமுமாகில் தோஷமில்லை. 

குறிப்பு:
அதிகமான செவ்வாய் தோஷம் ஏழாம் வீடு ஆகும். அந்த ஏழாம் இடத்திற்கு யாதொரு பரிகாரமும் கிடையாது. ஆனால் மேற்கண்டபடி கடகம், மகரம் இவைகள் பூரண ஜலராசியாகையால் எவ்வளவு நெருப்பை சமுத்திரத்தில் போட்டாலும் சட்டை செய்யாது அல்லவா? அதேபோல் மேற்படி ஏழாம் வீட்டு செவ்வாய் மகரம், கடகத்திலிருந்தால் தோஷம் என்பது சிறிதும் இல்லை. 

லக்னம் சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு எட்டாமிடம் தனுசும், மீனமும் ஆனால் தோஷமில்லை. 

சிம்மத்திலும், கும்பத்திலும் செவ்வாய் இருந்து எந்த லக்னத்தில் ஜனன மானாலும், சந்திரனும், சுக்கிரனும் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது. 

அங்காரகனும், குருவும் ஒரு ராசியில் பத்து பாகைக்குள் சம்பந்தப்பட்டால், செவ்வாய் தோஷம் கிடையாது. சந்திரனும், செவ்வாயும் ஒரு ராசியில் பத்து பாகைக்குள் சம்பந்தப்பட்டால், செவ்வாய் தோஷம் கிடையாது.

காரணங்கள்:
மேற்படி ஸ்தானங்களில் மாத்திரம் செவ்வாய் இருந்தால் பரிகாரம் ஏற்படுவதற்கு காரணம் என்னவெனில், 

இரண்டாம் வீடு மிதுனம், கன்னி, புதன் வீடு அந்த புதன் வித்தைக்கு அதிபதி ஆகையால் அவ்விடத்தில் செவ்வாய் நின்றால் தோஷம் கிடையாது. 

12 ஆம் வீடு, ரிஷபம், துலாம், சுக்கிரன் வீடு, அந்த 12 ஆம் வீடு படுக்கை சுகமானதால், அந்த ஆதிபத்தியம் சுக்கிரனுக்கே வந்தபடியால், மேற்படி ராசியில் 12 ஆம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது. 

நான்காம் வீடு, மேஷம், விருச் சிகம், செவ்வாய் வீடு, அந்த நான்காமிடம் கேந்திரமானதாலும், கேந்திர ஸ்தானம் பாபக்கிரகங்களுக்கு சுபபலன் என்று சாஸ்திரங்கள் கூறுகிறபடியாலும், மேற்படி வீடு செவ்வாய் வீடு ஆனதால், நாலாம் வீடு செவ்வாய் தோஷம் கிடையாது. 

ஏழாம் வீட்டில், மகரம், கடகம், செவ்வாய் இருப்பதால், கடகம், நீசமும், மகரம் உச்சமும் ஆவதால் மேற்படி ராசிகள் பூரண ஜலராசிகள் ஆவதால் மேற்படி ஏழாம் வீட்டு செவ்வாய் தோஷம் கிடையாது. 

எட்டாம் வீட்டில், தனுசு, மீனம், செவ்வாய் இருப்பதாலும், அது தேவ குரு வீடானதாலும், குரு நற்பலனையே தரக் கூடிய கிரகமானதால், எட்டாம் வீட்டு செவ்வாயால் தோஷம் கிடையாது. 

சூரியன், எல்லாக் கிரகங்களைக் காட்டிலும் பலமான கிரகம் ஆனதால், அங்கு செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது. 

கும்பம் பானை வடிவமானதால், அங்கு செவ்வாய் இருந்தால் பானைக்குள் வைத்த விளக்கு எப்படி இருக்குமோ, அம்மாதிரி செவ்வாய் தோஷம் கிடையாது. 

புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும், 
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும், 
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும், மேற்படி செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் தோஷம் என்பது கிடையாது.

மேற்படி ஸ்தானங்களில் இருக்கக் கூடிய செவ்வாயை சனி பார்த்தால், செவ்வாய் தோஷம் இல்லை என்று கர்க்க மகரஷி அபிப்பிராயப் படுகிறார்.

No comments:

Blogger Gadgets