செவ்வாய் திசை
நவ கிரகங்களில் சிறப்பு வாய்ந்த கிரகமான செவ்வாய் தனது தசா புக்தி காலத்தில் பல்வேறு விநோதமான பலன்களை உண்டாக்குகிறார். செவ்வாய் திசையானது சுமார் 7 வருடங்கள் நடக்கும். செவ்வாய் பகவான் உடல் வலிமைக்கும், ரத்த ஓட்டத்திற்கும், பூமிக்கும் நிர்வாக பதவி, அதிகார பதவிக்கும், உடன் பிறப்புக்கும் காரணகாவார். இயற்கையிலேயே பாவ கிரகமான செவ்வாய் உப ஜெய ஸ்தானமான 3, 6, 10, 11ல் அமையப் பெற்றிருந்தால் ஏற்றமிகுந்த பலன்களை அதன் தசா புக்தி காலத்தில் அடையலாம். செவ்வாய் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சியும், மகரத்தில் உச்சமும் பெறுகிறார்.
பொதுவாக 10ல் திக் பலம் பெறும் செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் 10ம் வீட்டில் அமைந்து திசை நடைபெற்றால் மிக உயர்ந்த பதவியினை அடைய வைக்கும். செவ்வாய் சாதகமாக அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால் பூமியோகம், மனை யோகம், உயர் பதவிகளை அடையும் யோகம், அரசு அரசாங்கம் மூலம் உயர்வுகள், உடன் பிறந்தவர்களால் அனுகூலங்கள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய அமைப்பு உண்டாகும். செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் பெண்களுக்கு சாதகமாக அமைந்திருப்பது நல்லது. அப்படி சாதகமாக இல்லாமல் நீசம் பெற்றோ, பாவிகள் சேர்க்கை பெற்றோ அமைந்து விட்டால் செவ்வாயின் தசா புக்தி காலத்தில் வயிறு கோளாறு ரத்த சம்மந்தப்பட்ட பாதிப்புகள், மாத விடாய் கோளாறு, கர்ப்பப் பையில் பிரச்சனை, வயிற்றில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.
பொதுவாக செவ்வாய் பலமிழந்து அமையப் பெற்று திசை நடைபெற்றால் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு, வீண் வம்பு வழக்குகள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக் கூடிய நிலை உண்டாகும். சனி, செவ்வய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தால் செவ்வாய் ராகு சேர்க்கைப் பெற்று பலம் இழந்திருந்தாலும் விபத்துக்களை எதிர்கொள்ளக் கூடிய அமைப்பு உண்டாகும்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் லக்னாதிபதி என்பதினால் அதன் தசா புக்தி காலத்தில் அனுகூலம் மிகுந்த பலன்களை உண்டாக்கும்.
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7, 12க்கு அதிபதி என்பதினால் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6, 11க்கு அதிபதியான செவ்வாய்
தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை உண்டாக்கினாலும் உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும்.
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 5, 10க்கு அதிபதியாகி கேந்திர திரிகோணாதிபதி ஆவதால் மிகச் சிறந்த யோக பலனையும் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் பெறுவார்கள்.
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 4, 9க்கு அதிபதியாக இருந்தாலும் அவர் பாதகாதிபதி என்பதால் அதன் தசா புக்தி காலத்தில் உறவினர்களிடம் பிரச்சனை உண்டாகும்.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 3, 8க்கு அதிபதி என்பதால் செவ்வாய் திசை அவ்வளவு சிறப்பான பலன்களை பெற முடியாது.
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 2, 7க்கு அதிபதி என்பதால் ஒரளவுக்கு அனுகூலத்தைக் கொடுத்தாலும், 2, 7ம் பாவங்கள் மாரக ஸ்தானம் என்பதால் சில உடம்பு பாதிப்புகளை உண்டாக்கும்.
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1, 6க்கு அதிபதி செவ்வாய் பல்வேறு வகையில் உயர்வுகளை உண்டாக்கினாலும் சிறுசிறு வம்பு வழக்குகளையும் உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தும்.
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 5, 12க்கு அதிபதி என்பதாலும் லக்னாதிபதி குருவுக்கு நட்பு கிரகம் என்பதாலும் ஏற்றமிகு பலனை உண்டாக்குவார்.
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 4, 11க்கு அதிபதியாகி லக்னாதிபதி சனிக்கு பகை கிரகம் என்பதாலும் பாதகாதிபதி என்பதாலும் திரிகோண ஸ்தானத்தை தவிர மற்ற இடங்களில் அமைந்தால் கடுமையான சோதனைகளை உண்டாக்குவார்.
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் 3, 10 அதிபதி என்பதால் ஏற்றம் மிகுந்த பலன்களை உண்டாக்குவார்.
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் என்பதாலும் 2, 9க்கு அதிபதி என்பதாலும் நல்ல அற்புதமான பலன்கள் உண்டாகும்.
செவ்வாய் திசை நடைபெற்றால் பவழக்கல் மோதிரம் அணிவதும் எம்பெருமான் முருகனை வழிபாடு செய்வதும் நற்பலனை உண்டாக்கும்.
No comments:
Post a Comment