Thursday, June 5, 2014

வல்லமையும் மதிப்பும் கொண்ட அமைப்பு!

கேந்திர திரிகோ  ணத்தில்    கேடின்றி  இலக்கி நேசன் சார்ந்திட சுபக்கோள் தானும்    தண்மையாய்ச் சேர நோக்க ஆய்ந்திடும் காலும் நன்றாய்   அமைந்திட பலவா னாக வாய்த்திடும் கீர்த்தி மானாய்   வயதுநூ றிருப்பன் மானே! 

1, 4, 7, 10 என்னும் கேந்திர ஸ்தானங்களிலோ 5, 9 என்னும் திரிகோண ஸ்தானங்களிலோ இல்லக்கினாதிபதி பலம் பெற்று அமர்ந்திருக்க, அவரை சுபக் கிரகங்கள் பார்த்திருக்க / சேர்ந்திருக்க, அவர் நின்றிருக்கின்ற நட்சத்திரக் காலும் நட்பு கிரகத்தின் காலாய் அமைந்திருந்தால் அந்த ஜாதகன் ஆற்றல் உள்ளவனாகவும், புகழ் பெற்றவனாகவும் நூறு வயது வரையில் வாழ்ந்திருப்பான். இலக்கினாதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் நிற்க வேண்டும். பகையோ நீச்சமோ பெறாமல் ஆட்சி, உச்சம், நட்பு என்ற நிலையில் பலம் பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு சுபகிரகம் (இலக்கினாதிபதிக்கு பகைவராக இருக்கக் கூடாது) பார்த்திருக்க வேண்டும் / சேர்ந்திருக்க வேண்டும். அதுவும் நல்ல நட்சத்திர சாரத்தில் நிற்க வேண்டும். இப்படி எல்லா வகையிலும் மேலான நிலையில் ஒரு இலக்கினாதிபதி அமர்ந்துவிட்டால், அவர் அதிவலு பெற்றவராவார். இலக்கினாதிபதி வலுபெற்றிருந்தால், ஜாதகமும் வலுபெற்று விடுகிறது. 

ஜாதகன் தனித்து இயங்கும் ஆற்றலும், சுயமாக முடிவெடுக்கும் திறனும், செயலாற்றும் திறமையும் வல்லமையும் ஆரோக்கியமும் கொண்டவனாகின்றான். ஜாதகம் பரிசீலனை செய்யும் போது, இலக்கினாதிபதி நின்றிருக்கின்ற நட்சத்திரக்கால் அவசியம் கவனிக்க வேண்டும். சார பலத்தையும் தவறாது பார்த்து பலனை நிர்ணயம் செய்ய வேண்டும். இலக்கினாதிபதி இலக்கின பாவர்களின் நட்சத்திர சாரத்தில் நிற்காமல், தன் சுய சாரத்தில் / திரிகோணாதிபதிகளின் சாரத்திலும் நிற்பது அதி உன்னத அமைப்பாகும். அல்லது, கேந்திராதிபதிகளின் சாரத்திலாவது, 2, 10 ஆம் ஸ்தானாதிபதிகளின் சாரத்திலாவது நின்றிருத்தல் நலம். தன் பகைவரின் காலிலும், இலக்கின பாவர்களின் காலிலும் இலக்கினாதிபதி நின்றிருப்பது ஜாதகர் சிறப்பைச் சற்று குறைக்கக் கூடிய அமைப்புதான். 

No comments:

Blogger Gadgets