Saturday, May 3, 2014


பெண்களும் உத்தியோக யோகமும்



பெண்கள் எல்லோரும் படித்து முன்னேறி வருவதால் பல துறைகளில் அதிகாரமிக்க பதவிகளையும் வகித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட அதிகாரமிக்க பதவிகளை அடையக்கூடிய யோகம் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடம் பலம் பெற்று இருப்பது சிறப்பு. 10 வீட்டில் சூரியன், செவ்வாய் அமையப் பெற்று சுப பார்வை பெற்றாலும் கண்டிப்பாக அதிகாரமிக்க உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும். 

அது போல 10ம் அதிபதி பலம் பெற்று சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று 10ம் வீட்டையோ, 10ம் அதிபதியையோ குரு பார்வை செய்தால் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். நவக்கிரகங்களில் செவ்வாய் நிர்வாக காரகனாவார். அவர் 10 ல் அமைந்து சுபபார்வையுடன் இருந்தால் பலர் பாராட்டக்கூடிய அளவுக்கு சிறந்த நிர்வாகியாக விளங்குவார். 10 ம் வீட்டில் அமையும் கிரகங்களை வைத்தே அவர்கள் எந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும் என்பதை அறியலாம். பெண்களின் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் பலம் பெற்று குருபார்வை பெற்றால் அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

நவகிரகங்களில் சந்திரன் ஜல காரகனாவார். பயணங்களுக்கும் அவர்தான் காரகனாவார். சந்திரன் 10 வீட்டில் பலம் பெற்று சூரியன் தொடர்புடன் குரு பார்வை பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளிலே குறிப்பாக உணவு தானியங்கள், தண்ணீர் சம்பந்தப் பட்ட துறைகள், சுற்றுலா மற்றும் பயணங்கள் தொடர்புடைய துறைகளில் பணிபுரியக்கூடிய யோகம் உண்டாகும். சந்திரன், சுக்கிரனின் தொடர்புடன் இருந்தால் கலை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியவும் ஆடை, ஆபரணத்துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

நவகிரகங்களில் புதனானவர் கல்வி, கணக்கு, கம்பியூட்டர் போன்றவற்றிற்கு காரகன் ஆவார். புதன் 10ல் பலமாக இருந்தால்  கம்பியூட்டர், ஆடிட்டிங் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய யோகம் உண்டாகும். புதன் சூரியனின் சேர்க்கை பெற்று குரு பார்வை பெற்றிருந்தால் அரசாங்கத் துறையில் தணிக்கை சம்பந்தப்பட்ட துறைகளிலோ, வங்கிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்போ உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்று 10ல் பலமாக இருந்து, 2ம் பாவமும் சிறப்பாக இருந்தால் பேச்சால், வாக்கால் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியராக பணியாற்றும் அமைப்பு ஏற்படும். அது மட்டுமின்றி மற்றவர்களை வழிநடத்தக்கூடிய யோகம் வழக்கறிஞர் ஆகக்கூடிய யோகம் உண்டாகும். புதன் குருவுடன் சனி பலமாக இருந்தால் நீதிமன்றங்களில் பணிபுரியக்கூடிய யோகம் ஏற்படும். 10 ல் புதனுடன், சனியும் பலமாக இருந்தால் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவான் 10 வீட்டில் பலமாக இருந்தால் பண நடமாட்டமுள்ள இடங்களில் பொது நலப் பணிகள் நடைபெறும் இடங்கள், பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும்  வாய்ப்பு உண்டாகும். குருவுடன் புதன், செவ்வாய் பலமாக இருந்தால் எழுத்து பத்திரிக்கை துறைகளில் பணிபுரியக்கூடிய யோகம் உண்டாகும். 10ல் சந்திரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் இணைந்திருந்தால் மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு, மருந்து கெமிக்கலில் தொடர்புடைய துறைகளில் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 

10ம் வீட்டில் சனி பகவான் பலமாக இருந்து சுக்கிரனின் சேர்க்கை பெற்றால் போக்குவரத்து, வண்டி, வாகனங்கள் தொடர்புடைய துறைகள் போன்றவற்றிலும், சனி மட்டும் பலமாக இருந்தால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் கூடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

பொதுவாக, பெண்களின் ஜாதகத்தில் 10ம் வீட்டில் சூரியன் சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் பலமாக அமையப் பெற்று, அக்கிரகங்களின் திசை நடைபெற்றால் கௌரவமிக்க பணிகளால் முன்னேற்றமும், வருவாய் ஈட்டக்கூடிய யோகமும் உண்டாகும். புதன் சுக்கிரன், சனி, ராகு போன்ற கிரகங்கள் 10ம் வீட்டில் பலமாக அமையப்பெற்று ஜாதகத்தின் யோக பாவங்கள் பலம் பெற்று அக்கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றால் சொந்தமாக தொழில் செய்து அதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். 7,10 க்கு அதிபதிகளின் தொடர்பு இருந்தால் கூட்டுத் தொழில் மூலம் ஏற்றம் உண்டாகும்.

No comments:

Blogger Gadgets