Saturday, May 3, 2014


வெற்றிச் சிகரத்தில் ஏற்றிவைக்கும் நீசபங்க 

ராஜயோகம்!

ஒருவர் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய யோக கிரகங்கள் வலிமையடைந்தும், தீமை செய்யக்கூடிய பகை கிரகங்கள் வலுவிழந்தும் இருந்தால், அவர் இந்த உலகில் அனைத்து செல்வங்களையும் பெற்று அதிர்ஷ்டசாலியாக வாழ்வார்கள் என்பது ஜோதிட விதி.

ஒரு கிரகம் வலிமையுடன் இருக்கிறதா அல்லது வலுவிழந்து இருக்கிறதா என்பதை, அந்த கிரகம் இருக்கும் வீட்டின் நிலையை வைத்து கீழ்க்கண்டவாறு பிரிக்கிறது வேதஜோதிடம்.

1. உச்சம்.
2. மூலத்திரிகோணம்.
3. ஆட்சி.
4. நட்பு.
5. சமம்.
6. பகை.
7. நீசம்.

மேற்கண்ட அமைப்பை வைத்து ஒரு கிரகத்திற்கு நாம் மதிப்பெண் தருவதாக இருந்தால், நீசநிலைக்கு பூஜ்ஜியமும், பகைக்கு பத்து மதிப்பெண்களும், சமநிலைக்கு இருபதும், நட்புக்கு நாற்பதும், ஆட்சிக்கு அறுபதும், மூலத்திரிகோணத்துக்கு எண்பதும், உச்சத்துக்கு நூறும் என தோராயமாகக் கொள்ளலாம்.
இதன்படி ஒரு கிரகம் தனது வலிமையனைத்தையும் இழக்கின்ற நிலை நீசம் எனப்படுகிறது.நீசநிலையில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகம் தனது காரகத்துவப் பலன்களையும், ஆதிபத்தியப் பலன்களையும் தரவியலாது என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது.அதாவது ஒரு கிரகம் நீசம்பெற்றால் அந்த கிரகம் சம்பந்தமான எந்த ஒரு விஷயமும் முழுமையாகக் கிடைக்காது. அந்த கிரகத்தால் ஜாதகருக்கு எவ்வித பயனும் இருக்காது என்பது இதன் உட்பொருள்.விதி என்ற ஒன்றிருந்தால் விலக்கென்பதும் இருந்தே தீரும் என்பதன்படி, ஒரு கிரகம் நீசபங்கம் பெறும்பொழுது இழந்த தன் வலுவைப் பெறுகிறது என்பதும் வேதஜோதிட விதிதான்.
அதன்படி இந்த நீசபங்க அமைப்பில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில், ஒரு கிரகம் முறையான நீசபங்கத்தைப் பெறும்பொழுது அது உச்சத்தைவிட மேலான ஒரு வலிமையை அடையும் என்பதே.

இது மதிப்பெண் நிலையில் 100-க்கு 100 என்பதையும் தாண்டி 120 என்கிற ஒரு வினோத நிலையைப் பெறும்.

நமது ஞானிகள் சில முக்கியமான சூட்சுமங்களை நமக்கு மறைபொருளாகத்தான் உபதேசிப்பார்கள்.

அதேநேரத்தில் இன்னொரு விளைவாக, நீசபங்கம் பெறும் கிரகம் ஆரம்பத்தில் நீசத்தை தந்துதான் பிறகு வளர்ச்சியைத் தரும். அதாவது அந்த கிரகம் முதலில் ஒன்றுமில்லாத நிலையை ஏற்படுத்தி, பிறகுதான் உச்சத்திற்குக் கொண்டுசெல்லும்.

உதாரணமாக லக்னாதிபதி கிரகம் நீசமடைந்து முறையான நீசபங்கம் பெற்றிருந்தால், வாழ்க்கையில் முதலில் கஷ்டப்பட்டு, ஒன்றுமில்லாத நிலையிலிருந்து, பிறகு பிரம்மிக்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைவார்கள்.

அதுபோலவே நீசகிரகம் எந்த ஆதிபத்தியத்திற் குரியதோ அதுவும் முதலில் ஒன்றுமில்லாமல் இருந்து தான் பிறகு வளர்ச்சிபெறும்.

முறையான நீசபங்கம் என்பது உச்சத்தைவிட மேலான நிலை என்பதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லமுடியும்.

எடுத்துக்காட்டாக, சூரியன் நீசம்பெற்றால் அரசு வேலை இல்லை. அரசலாபம் கிடையாது. தலைமைப் பதவியைப் பற்றி கனவுகூட காண முடியாது!

சரி...

"அரசன்' என்றால் நம்மில் பெரும்பாலோருக்கு யார் சட்டென்று நினைவுக்கு வருவார்?

மன்னனாகும் வாய்ப்பு கொஞ்சமும் இன்றி, இளையவனாகப் பிறந்து, மூத்த அண்ணன் கொலையுண்டதாலும், முறை அரசனான சித்தப்பன் இறந்ததாலும், வாழ்வின் பிற்பகுதியில் தற்செயலாக அரசனானவன்- இந்தியாவிலிருந்த அரசர்களிலேயே வெளிநாடுகளை வென்ற ஒரே தமிழ்ப் பேரரசன்- ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் நினைவில் உள்ளவன்- அரசர்களுக்கெல்லாம் அரசன் என்ற "ராஜராஜன்' எனும் பெயர் பெற்ற நம் ராஜராஜசோழன்! அவன் ஐப்பசி மாதம், சூரியன் நீசம்பெற்ற நிலையில் பிறந்தவன்.

சுக்கிரன் நீசம்பெற்றால் கலைத்துறையைப் பற்றி கனவுகூட காண முடியாது. நடிப்பு வராது. பொதுமக்கள் மத்தியில் புகழுடன் தோன்ற முடியாது. குறிப்பாக சினிமாவில் ஜெயிக்கமுடியாது.

இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர்- இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சுக்கிரன் நீசமான அமைப்பில் பிறந்தவர்.

புதன் நீசம்பெற்றால் அறிவாளியாக முடியாது. நிபுணத் துவம் இருக்காது. சிந்தனைத்திறன் சிறிதளவே இருக்கும்.

கணிதத்திறன் வராது. எதையும் புதிதாகக் கண்டு பிடிக்கமுடியாது.

உலக வரலாற்றில் இதுவரை பிறந்த விஞ்ஞானிகளில் முதலாமவர் என்று போற்றப்படும் மாபெரும் விஞ்ஞானி- பிரபஞ்சம் பற்றிய உண்மைகளைக் கூறும் சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்த மேதை ஐன்ஸ்டீன், புதன் நீசம்பெற்ற நிலையில் பிறந்தவர்.

குரு பகவான் நீசம் பெற்றால் ஆன்மிகத்தில் உயர்வில்லை. தெய்வ அருள் கிடைக்காது. ஆனால் பலரும் வணங்கத்தக்க நிலைக்கே உயர்ந்த பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா, குரு மகரத்தில் நீசம்பெற்ற நிலையில் பிறந்தவர்.

இதைப்போல இன்னும் நிறைய உதாரணங்கள் உள்ளன.

அதேநேரத்தில் இதுபோன்றவர்கள் முதலில் வாழ்வில் நீச நிலையில் (ஒன்றுமில்லாத நிலையில்) இருந்து, பிறகு தம் துறையில் உச்சத்திற்குச் சென்றவர்கள்.

சிலசமயம் இந்த நீசபங்கத்தை அளவிடுவதில் குழப்பம் ஏற்படும். ஒருவருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறது என்று சொல்லுவோம். கேட்பவரும் ராஜயோகத்தை எண்ணி கனவு காணும் நிலையில், அந்த தசை அவரிடம் உள்ளதையும் பறித்துக்கொண்டிருக்கும்.

அப்படியானால் முறையான நீசபங்கம் என்பதென்ன? அதை எப்படிக் கணக்கிடுவது?

அதற்கு ஏராளமான விதிகள் உள்ளன. முக்கியமானவற்றைக் காண்போம்.

நீசனுக்கு வீடு கொடுத்தவன் ஆட்சி, உச்சம் பெறுவது.

நீசகிரகம் பரிவர்த்தனை பெறுவது.

நீசன் வர்க்கோத்தமம் பெறுவது.

நீசகிரகத்துடன் ஒரு உச்சன் இணைவது.

நீசன் லக்னம் அல்லது சந்திர கேந்திரத்தில் இருப்பது.

நீசனுக்கு வீடு கொடுத்தவன் சந்திர கேந்திரத்தில் இருப்பது.

நீசனின் ராசியாதிபதி பரிவர்த்தனை ஆவது.

நீசனை இன்னொரு நீசகிரகம் பார்ப்பது.

நீசன் வக்ரம் அடைவது.

நீசன் அம்சத்தில் உச்சம்பெறுவது.

இதுபோன்ற விதிகளில் பெரும்பாலானவற்றின்படி ஒரு நீசகிரகம் நீசபங்கத்தைப் பெற்று- அதாவது ஒரு நீசகிரகம் சந்திரகேந்திரத்தில் இருந்து, அவனுடன் உச்ச கிரகமும் இணைந்து, நீசன் வர்க்கோத்தமும் பெற்று, நீசனாதன் சந்திர கேந்திரத்தில் இருந்து, வீடு கொடுத்தவன் பரிவர்த்தனையும் பெற்று- இதுபோல அதிகமான முறைகளில் நீசபங்கம் பெற்றால், அதுவே  முறையான நீசபங்கமாகும்.

இதுபோன்ற நிலைகளில் மட்டுமே அந்த கிரகம் நீசபங்க ராஜயோகத்தைச் செய்யும். அப்போதுதான் அந்த நீசன் ஜாதகரைத் தன் காரகத்துவங்களில் (செயல்பாடுகளில்) வாழ்க்கையின் உச்சத்திற்குக் கொண்டுசெல்வான்.

No comments:

Blogger Gadgets