Saturday, August 2, 2014



ஜாதகப்படி  உண்டாகும் ஜல நோய்கள் 


கண்ணுக்கு தெரிந்த உடல் உறுப்புகள் மட்டுமின்றி உடலுக்குள் இருக்கும் கண்ணுக்கு தெரியாத உறுப்புகளும் நன்றாக செயல்பட்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட முடியும். சிலருக்கு அடிக்கடி ஜலத் தொடர்பான உடல் உபாதைகள் ஏற்பட்ட படியே இருக்கும். ஜலதோஷம் இது சற்றே அதிகமானால் ஆஸ்மா, மூச்சுத் திணறல், டி.பி போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஜலக்காரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் பலம் இழக்காமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். ஜலராசிகள் எனப்படும் கடகம், விருச்சிகம், மகரம், மீன, ராசிகளும் பலமிழக்காமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்க்கு கடக ராசி காரகன் ஆகும். சந்திரன் கடகத்தில் அமைந்து சூரியன் பகை பெற்று பாவிகள் பார்வை பெற்றிருந்தால் நுரையீரலில் அடைப்பு உண்டாகின்றது. சூரியன் சந்திரன் இணைந்து ஜல ராசியில் இருந்தாலும் ஜலத் தொடர்புள்ள நோய் உண்டாகும். சூரியன் சந்திரன் பலம் இழந்து ஜல ராசிகளில் கோட்சார ரீதியாக சூரியன் சந்திரன் அதனை கடந்து போகும் போது மூச்சுத்திணறல் ஜலதோஷம் உண்டாகிறது.

கடகம் விருச்சிகம் மகரம் மீனம் போன்ற ஜலராசிகள் லக்னமாகி இருந்து சூரியன் சந்திரன் ஜென்ம லக்னத்தில் அமைந்தாலும், பார்வை செய்தாலும், ஜென்ம லக்னம் சூரியன் சந்திரன் ஜலராசிகளில் அமையப் பெற்றாலும், 4ம் வீடு ஜலராசியாக இருந்து செவ்வாய் சனியால் பாதிக்கப்பட்டாலும் மூச்சுக் குழாயில் அடைப்பு மூச்சுத்திணறல் உண்டாகின்றது.ஜென்ம லக்னத்திற்கு 6,8ல் சந்திரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கையுடன் இருந்தால் நீரினால் கண்டம் உண்டாகும்.
சந்திரனுக்கு பரிகாரம் செய்வது நல்லது




ஆஸ்மா;

மூச்சு விடவே சிரமப்படும் நோயாகும் இது வந்தாலே இருமல் சளித் தொல்லை மூச்சு இரைத்தல் போன்றவை உண்டாகும்.

ஜென்ம லக்னம் கடகமாக இருந்து செவ்வாய் சனி லக்னத்தில் அமைந்தாலும், செவ்வாய் இருந்து சனி பார்வை செய்தாலும், ஜென்ம லக்னம் ஜல ராசியாக இருந்து லக்னாதிபதி 6,8,12ல் இருந்தாலும், ஜென்ம லக்னம் ஜல ராசியாக இருந்து கடகத்தில் செவ்வாய் சனி இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 4,6க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று 4 அல்லது 6ம் வீடு ஜல ராசியாக இருந்தாலும், ஜென்ம லக்னாதிபதி சனி சேர்க்கை பெற்று 12ல் அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னத்திற்கு  4ம் வீடு ஜல ராசியாக இருந்து சனியால் 4ம் வீடு பாதிக்கப்பட்டு இருந்தாலும், 4ல் சனி பலம் இழந்து இருந்தாலும், ஆஸ்மா உண்டாகும்.

நுரையீரல் வேலை செய்யாத நிலை

உள்ளுறுப்புகளில் இது மிகவும் முக்கியமானதாகும் நுரையீரல். சரிவர வேலை செய்தால் தான் உடலில் தேவையற்ற நீர் வெளியேற்றப்படும் இருதயம் சரிவர இயங்கும்.

சந்திரன் ஜல ராசியில் அமையப் பெற்று சூரியன் சம்மந்தமாகி சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்து சந்திர திசை, சூரிய திசை, சந்திர புக்தி, சூரிய புக்தி, நடைபெறும் போதும்,
சூரியன், சந்திரன் இணைந்து ஜல ராசியில் அமையப் பெற்று 4ம் அதிபதி பலம் இழந்து காணப்பட்டாலும்,
சந்திரன் நின்ற வீட்டின் அதிபதியும் சூரியன் நின்ற வீட்டின் அதிபதியும் சேர்க்கை பெற்று ஜல ராசியில் அமையப் பெற்று சந்திரன் பலமிழந்திருந்தாலும்,
சந்திரன், சுக்கிரன், 6ம் அதிபதியும் சேர்க்கை பெற்று ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீட்டில் அமையப்பெற்று இருந்தாலும்
நுரையீரல் சரியாக வேலை செய்யாத நிலையும் மூச்சுத்திணறலால் அதிக துன்பமும் உண்டாகிறது. ஜல ராசியில் பிறந்து மேற்கூறிய கிரக அமைப்பு பெற்றவர்கள் குளிர்ச்சியானவற்றை கூடுமான வரை தவிர்த்து மழை பனிக்காலங்களில் கதகதப்பான சூழ்நிலைகளில் தங்களை பாதுகாத்துக் கொள்வதுடன் சந்திர பகவானுக்கு உரிய பரிகாரங்களை மேற்கொள்வது மிகவும் உத்தமம்.
சந்திரனுக்கு பரிகாரம் செய்வதும், திருப்பதி செல்வதும் முத்து வைத்த மோதிரம் அணிவதும் நல்லது.


காச நோய்

இது ஒரு தொற்று நோய். இருமல்,தும்மல்,எச்சில் போன்றவற்றால் இது பரவும். தொடர்ந்து நீண்ட நாட்கள் இருக்கும் வியாதிகளில் (டி.பி என்பது) எலும்பு உருக்கி நோயும் ஒன்றாகும். இந்த நோய் ஆளையே உருக்கி எலும்பும் தோலுமாய் ஆக்கிவிடும் என்பதால் இதற்கு எலும்புருக்கி நோய் என்ற பெயரும் உண்டு. சுகாதாரமற்ற சூழ்நிலையால் இவ்வியாதி தோன்றுகிறது என்றாலும் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் இதனை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஜோதிட ரீதியாக இந்த நோய் ஏற்பட சில கிரக அமைப்பு காரணமாகின்றது.
ஜென்ம லக்னத்திற்கு 6,8ல் குரு அமையப் பெற்று பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வையால் பாதிக்கப்பட்டாலும்,
சந்திரன் பலம் இழந்து இரு புறமும் பாவிகள் அமையப் பெற்றாலும்,
சூரியன், சந்திரன், பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வையால் பாதிக்கப்பட்டாலும்,
சந்திரன், புதன் இணைந்து பாவிகள் பார்வை செய்தாலும்,
ஜலக்காரகனான சந்திரன் பலம் இழந்து கடகம் விருச்சிகம் மகரம் மீனத்தில் அமையப் பெற்றாலும்,
செவ்வாய், புதன் இணைந்து 6ல் அமைந்து, சந்திரன், சுக்கிரன் பார்வை அல்லது சேர்க்கை பெற்றாலும்,
குரு, சனி, ராகு இணைந்து 7 அல்லது 8ல் அமைந்து, அமைந்த வீடு ஜல ராசியாக இருந்தாலும், சுவாச கோளாறு காச நோய் உண்டாகும்.

சந்திரனுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

வாத நோய்

வாழ்கையையே முடக்கி போடும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். வாத நோய் இது மனிதர்களுக்கு வரக் கூடாத நோய்களில் மிக முக்கியமானதா-கும். இந்நோய் தாக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களின் உதவி மிகவும் அவசியமானதாகிறது. சுயமாக எதையும் செய்து கொள்ள முடியாதபடி நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்.உண்ண,உடுக்க மட்டுமின்றி மற்ற எல்லா தேவைகளுக்கும் பிறரின் உதவி தேவைபடுவதால் மிகுந்த மன உடச்சலுக்கு ஆளாகின்றனர்.

உடலில் கெட்ட நீர் சேர்க்கையினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகி வாழ்க்கையையே முடக்கி போட்டு விடுகிறது. வாத நோய்களல் பல வகை உண்டு. இந்த நோயினால் கை கால்கள் செயலிழப்பதோடு, சிலர் பேச்சு திறனையும் இழக்கின்றார்கள். அதிக குடிப்பபழக்கத்திற்கு அடிமை ஆனவர்களையும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களையும் இந்நோய் அதிகமாக தாக்குகிறது. இளம் பிள்ளை வாதம் (போலியோ) என்பதும் இதில் ஒரு வகை தான் கை கால்கள் சூம்பி செயல்படாமல் போகின்றது. சிலருக்கு காலையில் ஈரக்காற்றில் பயணம் செய்யும் போது காதில் உட்புகும் காற்றினால் முகத்தின் ஒரு பாகம் செயலிழந்து கண்னை கூட மூட முடியாமல் பக்க வாத நோய் தாக்கி விடுகிறது.

இதற்கெல்லாம் ஜோதிட காரணங்கள் என்ன என பார்த்தால் சூரியன் வாயுவுடன் கலந்த பித்தத்தையும் சந்திரன் வாயுவையும், கபத்தையும், செவ்வாய் பித்தத்தையும், புதன் வாதம், பித்தம், கபங்களையும், குரு கபம், வாதத்தையும், சனி வாத பித்தங்களையும் வெளிப்படுத்துகின்றனர்.
சூரியன் 6ல் இருந்தால் பித்தம் கபம் ஆகியவையும் சனி 6ல் இருந்தால் வாதத்தையும் உண்டாக்குகின்றன.
சூரியன், சந்திரன் 6ம் பாவம் இவற்றிற்கு சனி, செவ்வாயின் தொடர்புகள் வாத நோய் ஏற்பட காரணமாகிறது.
சூரியன் கடகத்திலிருந்து சனியின் தொடர்பையோ, அல்லது  சனி கடகத்தில் இருந்து செவ்வாயின் பார்வையோ பெறுவது வாத நோயினை ஏற்படுத்தும் அமைப்பாகும். 8ம் அதிபதி லக்னத்திலும் 2ம் அதிபதி 8லும் லக்னாதிபதியுடன் சனி சேர்க்கையாகி சந்திரன் பாவிகளுடன் சேர்க்கையானால் வாத நோய் உண்டாகும். புதன் பகவான் நீசமாகி அஸ்தங்கம் பெற்று பலம் இழந்தால் நரம்பு தளர்ச்சி, வாத நோய் உண்டாகும். தசா புக்தி நடைபெறும் காலங்களில் பலம் இழந்த கிரகம் அதிகமான வாதத்தை ஏற்படுத்தி ஒரு பக்க கைகால்களில் பக்க வாதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் ஒரு பக்கத்தின் செயல்பாடுகள் பாதிப்படைகின்றது.
சூரியனுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

No comments:

Blogger Gadgets