Saturday, August 2, 2014

வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் ஜீரண கோளாறும்-ஜோதிட குறிப்பு 


ஜென்ம லக்னத்திற்கு 5ம் வீடும், சிம்ம ராசியும்  மேல் வயிறு பாகத்தினைக் குறிக்கும் பாவமாகும். 6ம் வீடும் கன்னி ராசியும் கீழ் வயிறு பாகத்தினைக் குறிக்கும் பாவங்களாகும். ஜென்ம லக்னத்திற்கு 8ம் வீடும் விருச்சிக ராசியும் சிறு குடலுக்கும் காரண பாவமாகும். (மற்ற கழிவுகளை வெளியேற்றும்)

சூரியன் ஜீரண சக்திக்கு காரகனாவார், ஜென்ம லக்னத்திற்கு 5,6 ஆம் பாவத்தின் அதிபதிகள்,சூரியன் பாவிகள் சேர்க்கை பெற்று இருந்தாலும், 5,6 ஆம் பாவத்தை பாவிகள் சூழ்ந்திருந்தாலும் ஜீரண சக்தி பாதித்து வயிறு கோளாறுகள் உண்டாகும். நவகிரகங்களில் சனி,ராகு பலமான பாவகிரகங்கள் ஆகும். சனி,ராகு ஜென்ம லக்னத்திற்கு 5இல் அல்லது 6இல் அமைந்தால் வயிற்றில் கோளாறு உண்ணும் உணவு செரிக்காத நிலை ஏற்படும். சனி,ராகு 6,8ம் பாவத்திலோ, கன்னி, விருச்சிகத்திலோ அமையப் பெற்றால் குடலில் பிரச்சனை, குடல் பாகத்தில் பாதிப்பு உண்டாவது மட்டுமின்றி மலச்சிக்கலும் ஏற்படுகிறது.

5ல் சூரியன் அமையப் பெற்றால் சூடாக உணவு உண்ணும் பழக்கம் நல்ல ஜீரண சக்தியும் உண்டாகும். சூரியன் பாவகிரக சேர்க்கை, செவ்வாயுடன் சம்மந்தப்பட்டால் ஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்புள்ளது. செவ்வாய் சம்மந்தமோ பார்வையே ஏற்பட்டால் குடலில் புண் உண்டாகும்.

5ம் வீட்டில் சந்திரன் அமையப் பெற்றால் வித விதமான உணவு மேல் விருப்பம் பெற்று இருப்பார்கள். அதனால் வளர்பிறை சந்திரனாக இருந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். பாவிகள் சேர்க்கை பார்வை இல்லாமல் இருந்தால் மேலும் சிறப்பு. தேய் பிறை சந்திரனாகி 5ல் அமையப் பெற்றால் மனக்கவலையுடன், வயிறு கோளாறு குடல் புண், உடல் உபாதைகள் ஏற்படும். சந்திரனுக்கு கேதுவுடன் சம்மந்தம் ஏற்பட்டால் குடல் புண் ஏற்பட்டு பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்.

5ம் வீட்டில் செவ்வாய் அமையப் பெற்றால் சூடான உணவு வகையில் ஆர்வம் கொண்டு அதன் மூலம் குடல் புண், கேஸ்டிரிக், அல்சர், போன்ற உடல் உபாதைகள் உண்டாகும். செவ்வாய் ஆட்சியோ உச்சமோ பெற்றால் நல்ல ஆரோக்கியம் பெற்றாலும்  திசா புக்தியில் வயிறு கோளாறு உண்டாகும். செவ்வாய் நீசம் பெற்றோ பாவியாகி 5ல் அமைந்து 6,8,12ம் அதிபதியின் தொடர்பு பெற்றிருந்தால் செவ்வாய் திசை புக்தி காலத்தில் வயிற்று வலியால் அதிக அவதி உண்டாகும்.

5ல் புதன் அமைந்து சூரியன் சேர்க்கை பெற்றால் புதன்  திசை புதன் புக்தி காலத்தில் பசி இல்லாத நிலை அஜீரண கோளாறு ஏற்படும்.

5ல் குரு அமையப் பெற்றால் நல்ல பசி எடுக்கும் நிலை ஜீரண தன்மை இருக்கும். குருபகவான் செவ்வாய் ராகு கேது சேர்க்கையோ, பார்வையோ பெற்றால் அஜீரண கோளாறு, வயிற்றில் புண் உண்டாகும்.

5ல் சுக்கிரன் அமையப் பெற்றால் இனிப்பான, சுவையான, உயர்வகை உணவு உட்கொள்ள ஆசையும், சுக்கிரன் சூரியன் சேர்க்கை பெற்றிருந்தால் எண்ணெயில் தயாரித்து பொருள் மீது ஆசை ஏற்படும். சுக்கிரன் செவ்வாய் வீட்டிலோ செவ்வாய் பார்வையோ பெற்றால் சூடான உணவை சாப்பிடுவார்கள். சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றால் வயிறு பாதிக்கும்.

சனி 5ல் அமையப் பெற்றால் அதிக அளவு எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால் சரியாக ஜீரணமாகாமல்  அஜீரண கோளாறு அபண்டிசைட்ஸ் பெப்டிக் அல்சர், இன்டெஸ்டினல் அல்சர் உண்டாகும்.

ராகு 5ல் அமைந்தால் சரியான சமயத்தில் சாப்பிட முடியாத நிலை குடல் புண் ராகு புக்தி காலத்தில் வயிறு கோளாறு உண்டாகும். சூரியனுக்கு பரிகாரம் செய்வது நல்லது

கேது 5ல் அமைந்தால் சூடாக புசிப்பார்கள். கேது புக்தி காலத்தில் கேஸ்டிக், குடல் புண், அல்சர் உண்டாகும்.

5ல் பாவிகள் அமைந்து குரு பார்வை பெற்றால் வயிறு உபாதைகள் ஏற்பட்டாலும் விரைவில் குணமாகும். ராசியையும்  ஜென்ம லக்னத்தையும் குரு பார்வை செய்தால் கெடுதிகள் விலகும். அளவுடன் உண்டு வளமுடன் வாழ்வது மூலம் வயிறு கோளாறுகளிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

No comments:

Blogger Gadgets