புராணங்களில் சனிபகவானின் சிறப்பு!
சனிபகவானும், விநாயகரும்:ஒருசமயம், சனி பகவான் விநாயகரைப் பிடிக்க வந்தார். இதனை அறிந்த விநாயகர், தன் முதுகில் நாளை வா என்ற வாசகத்தை எழுதி வைத்துக்கொண்டு முதுகைப் பார் என்கிறார். அவர் முதுகில் நாளை வா என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு, அதன்படி மறுநாள் வந்தார் சனி பகவான். மறுநாளும் அந்த வாசகத்தைப் படித்துவிட்டு திரும்பிச் சென்றார். இதுவே தொடர்கதையாக, அன்று முதல் இன்று வரை விநாயகரை சனியால் பிடிக்கவே முடியவில்லை என்று புராணம் கூறுகிறது.
சனி பகவானும், இராவணனும்: இலங்காபுரியை அரசாண்டு வந்த அரக்கர் குலமன்னன் இராவணன், ஈசனிடம் வரம் பெற்ற மமதையால் தேவர்களையும், முனிவர்களையும் பற்பல தொல்லைகளுக்கு ஆளாக்கினான். மாதவம் புரிந்து வந்த மாத் தவசியர்களை மதுக்குடங்களைச் சுமக்கச் செய்து அவர்களது சாபத்திற்கு ஆளானான். தொழுதற்குரிய அவர்களைத் துன்புறுத்தினான். நாளெல்லாம் ஆராதிக்க வேண்டிய நவக்கிரகத் தேவர்களை, மதியாமல் மமதையோடு திரிந்தான். இராவணன், நவக்கிரஹ நாயகர்களைத் தனது அரியணை ஏறும் படிக்கட்டுகளின் கீழே குப்புறபடுத்திருக்கச் செய்து, அதன் மீதுள்ள சிம்மாசனத்தில் கொலுவிருந்தான். சர்வேஸ்வரனிடம் இராவணன் வரம் பெற்ற ஒரே காரணத்தால் நவக்கிரக தேவர்கள் இராவணனின் கொடுமைகளுக்குக் கட்டுண்டு இருந்தனர். இராவணனது அகங்காரத்தையும், அராஜக போக்கையும் அடியோட அழிக்க, நாரத முனிவர் ஓர் அற்புதமான செயலைச் செய்தார். நாரதர் இராவணனை எப்படியும் அழிக்க வேண்டும் - அவனிடமுள்ள சக்தியை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு நாள் இராவணனது அவைக்கு விஜயம் செய்தார். இராவணன், நாரதரை வரவேற்று உபசரித்தான். உயர்ந்த ஆசனத்தில் எழுந்தருளச் செய்தான். இராவணன், நாரதரிடம் தனது பிரதாபங்களைச் சொல்லத் தொடங்கினான். நாரதரே! தேவலோகம், சொர்க்க லோகம், பாதாள லோகம், அதலம், விதலம், பூமி என்று பதினான்கு லோகங்களையும் சுற்றி வரும் பிரம்ம புத்திரரே! என்னைப் போன்ற அதி பராக்கிரம சாலியைக் கண்டதுண்டா? அரக்கனின் ஆணவ மொழி கேட்டு நாரதர், இலங்கேஸ்வரா! புரம் எரித்தவரிடமே சாகா வரம் பெற்றவன் அல்லவா நீ ! உன்னுடைய பெருமை, தேஜஸ், கம்பீரம், தைரியமும் எவருக்கு வரும்! உன்னுடைய பிரதாபங்களைப் பேசாத லோகமே இல்லை! ஆனால் எனக்கு ஒரு ஐயப்பாடு என்று ஒரு பீடிகையைப் போட்டார். ஐயப்பாடா? இந்த இராவணனிடமா? கேளும் விளக்கம் தருகிறேன். நவக்கிரக தேவர்களில் வல்லமை பொருந்தியவர் சனீஸ்வரன். அவன் உன்னைப் போல் ஈசனிடம் சனீஸ்வரன் என்ற பட்டத்தை வாங்கியவன். அவன் உனது பிரதாபங்களைக் காண வேண்டாமா? அதனால் அவனை உன்னைப் பார்த்து நிமிர்ந்து இருக்கச் சொல்! நாரதரின் சூழ்ச்சியை உணராத இராவணன், நன்று சொன்னீர் நாரதரே! அவ்வாறே செய்கிறேன் என்று ஆணவத்தால் கொக்கரித்த இராவணன், சனி பகவானைத் தன்னைப் பார்த்து நிமிர்ந்து இருக்கச் சொன்னான். இது தான் சமயம் என்று சனி பகவான் நிமிர்ந்து இராவணனைப் பார்த்தார். அவ்வாறு பார்த்த மாத்திரத்திலேயே இராவணனிடமிருந்த சக்தி, ஆற்றல், வரம்பெற்ற பலம் அனைத்தும் அவனை விட்டு மாயமாய் மறைந்தது! இராவணன் ஒரு விநாடி நடுங்கிப் போனான்.
சனி பகவானுடைய பார்வை கர்வம் பிடித்த இராவணனை நிலைகுலையச் செய்தது. சனியின் பார்வையின் வன்மை, வல்லமை மிக்க இராவணனை, இராம பாணத்திற்கு பலியாக்கியது! இதே போல், சனி பகவான் மற்றொரு சந்தர்ப்பத்தில், ராவணனின் சூட்சியை அடியோடு அழித்தார். இராவணனின் மனைவியான மண்டோதரி இந்திரஜித்தைக் கருவுற்று இருந்த சமயம் அது! இராவணன் தனக்குப் புத்திரன் பிறக்க வேண்டுமென்றும் அவ்வாறு பிறக்கின்ற புத்திரன் நீண்ட ஆயுளுடனும், ஈரேழு பதினான்கு லோகங்களையும் ஆளுகின்ற வீரம் பெற்றவனாகவும் இருக்க வேண்டுமென்றும் கருதினான். அதற்காக இராவணன் ஒரு சூழ்ச்சி செய்தான். ஜோதிட நிபுணர்களை வரவழைத்தான். தனது எண்ணம் போல் புத்திரன் பிறப்பதற்கு கிரகங்கள் எந்தெந்த வீடுகளில் எப்படி எப்படி இணைந்திருக்க வேண்டும் என்பதனைத் தெரிந்து கொண்டான். மண்டோதரிக்குப் பிரசவகாலம் நெருங்கிய பொழுது இராவணன் பன்னிரண்டு கிரகங்களையும் ஜோதிட நிபுணர்கள் கணித்துக் குறித்துக் கொடுத்தபடி அந்தந்த வீடுகளில் இருக்கச் செய்தான். இராவணனுடைய பேராசையையும், சூழ்ச்சியையும் தெரிந்து கொண்ட சனீஸ்வர பகவான் அவன் எண்ணத்தை அழித்துவிடக் கருதினார். சனிபகவான் அதற்காக ஓர் உபாயம் செய்தார். இந்திரஜித் பிறக்கப் போகும் காலகட்டம் நெருங்கியதும் சனிபகவான் தமது கால்களை பக்கத்து கிரகத்துக்குள் நீட்டினார். இதனால் சனிவக்ரம் அடைந்து விட்டார். (இது ஜோதிட நியதி). இந்திரஜித்தின் ஜனன காலத்தில் சனி வக்கரமடைந்த காரணத்தினால் இந்திரஜித் அற்ப ஆயுளில் உயிர் நீத்தான்! இராவணனுடைய சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது ! சனிபகவான், தம்மை அலட்சியப் படுத்துவோரை அழிக்காமல் விடமாட்டார். அதே சமயம் தம்மை ஆராதிப்போர்க்கு ஐசுவரியத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பார்.
சனிபகவானும், வாயுகுமாரனும்: ராமாவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரம் நடக்கும் துவாபரயுகம்! சஞ்சீவி மலையை கொண்டு வந்து அமரர்குலம் காத்த சிரஞ்சீவி ஆஞ்சநேயர் ஸ்ரீராமபிரானின் திருநாமத்தை ஜபித்தவாறு வாழ்ந்து வந்தார். வாயுகுமாரனான ஆஞ்சநேயர், சிவபெருமானின் அம்சம் ஆவார். சூரிய குமாரனான சனியோ, சிவபெருமானிடம் சனீஸ்வரன் என்று ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர். ஆஞ்சநேயர் மார்கழி திங்கள் மதிமறைந்த நந்நாள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்திரப்படி தனுர்ராசியில் சூரியனும், சந்திரனும் இருக்கின்ற சுபவேளையில் ஆஞ்சநேயர் அவதாரம் பண்ணினார். ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவராதலால் சனிபகவான் 7 1/2 ஆண்டு காலம் அவரைப் பிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சனிபகவான்! ஆஞ்சநேயர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ராமநாமத்தை ஜபிப்பதும், ஸ்ரீராமரை மலர் கொண்டு ஆராதிப்பதுமாக இருந்து வந்தார். ஆஞ்சநேயர் பூ பறிக்க மலர் வனம் புறப்படும்போது அவரைப் பிடிக்கலாம் என்று சனிபகவான் காத்துக் கொண்டிருந்தார். சனிபகவானின் எண்ணத்தை முன்னதாகவே தெரிந்து வைத்திருந்த அனுமன் சனிபகவானின் பிடியிலிருந்து தப்புவதற்கு உகந்த மார்க்கத்தைத் தெரிந்து வைத்திருந்தார். ஆஞ்சநேயர் திருமாளிகையின் மணிக்கதவைச் சற்று திறந்து தமது வாலை மட்டும் கொஞ்சம் வெளியே நீட்டினார். அவ்வளவு தான்! ஆஞ்சநேயரைப் பிடிக்க வெளியே நின்று கொண்டிருந்த சனிபகவான் இது தான் சமயம் என்று ஆஞ்சநேயர் வாலைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டார். சனி பகவானின் செயலைப் புரிந்து கொண்ட ஆஞ்சநேயர் முகம் மலர, சுவாமி! என்னை விட்டு விடுங்கள்! என்றார். அதற்கு சனிபகவான், ஆஞ்சநேயா! அது எப்படி முடியும்? 7 1/2 ஆண்டு காலம் உன்னை நான் பிடித்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்பது நியதியல்லவா? என்று கேட்டார். என் ராம ஜபத்துக்கும், பூஜைக்கும் உங்களால் ஊறு வரலாமா? ஈசுவர பட்டம் பெற்ற தேவரீர், ஈசுவர சொரூபமான இந்த எளியவனை விட்டு விலகுதல் தான் உசிதமானது; உத்தமமானது! என்றார் ஆஞ்சநேயர்! இல்லை ஆஞ்சநேயா! இது என்னால் முடியாது. நான் அந்த ஈசுவரனையே பிடித்துள்ளேன். பூவுலகில் வாசம் என்று வந்துவிட்டால் கிரகங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். இது ஜோதிடத்தின் தீர்ப்பு! எதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை. எனக்கு என் ஸ்ரீராமச்சந்திர பிரபு தான் முக்கியம்! இதில் எவ்வித மாற்றமும் இல்லை! தங்கள் பிடியிலிருந்து எப்படி தப்புவது என்பது எனக்குத் தெரியும்! ஆஞ்சநேயர் ஆணித்தரமாகக் கூறினார். இவ்வாறு சனிபகவானிடம் தமது முடிவைத் திடமாகச் சொன்ன ஆஞ்சநேயர். ஆனந்தம் தாங்காமல் வாலை சுழற்றி, சுழற்றி துள்ளிக்குதித்து ராமநாம சங்கீர்த்தனத்தை பாடிக்கொண்டு, ஆடத்தொடங்கினார்.
ஆஞ்சநேயரின் வாலைப் பிடித்துக் கொண்டிருந்த சனி பகவான் வாலைப் பிடிக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். வாலின் நுனியில் அமர்ந்திருந்த சனிபகவான் மிகுந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவர் ஆஞ்சநேயரிடம், வாயு குமாரா! நீ எப்போது உனது பஜனையை நிறுத்தப் போகிறாய்? என்று கேட்டார். ஸ்ரீராம நாம சங்கீர்த்தனத்தை நிறுத்துவதா? நன்றாக கேட்டீர்களே ஒரு கேள்வி! சிரித்துக் கொண்டே சொன்னார் ஆஞ்சநேயர்! துள்ளிக் குதிக்கிறாயே! அதை எப்போது நிறுத்துவாய்? என்று கேட்டேன்? நீர் எம்மை எத்தனை ஆண்டுகள் பிடிப்பதாக உத்தேசம்? ஏழரை ஆண்டுகள். அப்படியானால் நானும் ஏழரை ஆண்டுகாலம் குதித்துக் கொண்டே இருப்பேன்! ஆஞ்சநேயரின் முடிவு சனிபகவானுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சனி பகவான் தமக்குள் ஓர் முடிவிற்கு வந்தார். இவரை விட்டு விடுவோம் ! ஏழரை ஆண்டுகள் நான் பிடிப்பேன் என்ற அச்சத்தில் ஆஞ்சநேயர் இருக்கிறார்? இந்த பய உணர்வே நான் ஏழரை ஆண்டுகாலம் அவரைப் பிடித்ததற்குச் சமம்! என்று எண்ணியவராய் ஆஞ்சநேயர் வாலை விட்டு கீழே இறங்கினார் சனிபகவான்! ஆஞ்சநேயர் வாலை உள்ளே இழுத்துக் கொண்டு உள்ளிருந்த படியே, ச்ருதகர்மா! உனக்கு எனது வந்தனங்கள். என் ராமர் உன் ஈசுவரனைப் பூஜித்தவர். நானோ அந்த ஈசனின் சொரூபம்! நீயோ அந்த ஈசனால் சனிபகவான் என்ற பட்டத்தைப் பெற்றவன். அதுமட்டுமல்ல; உன் தந்தையான சூரிய பகவான் என் குருதேவர்! இப்படி நாம் இருவருமே அந்த ஈசுவரனின் அன்பிற்கு பாத்திரமானவர்கள் என்பதனை நீ உணர்வாய்! என்றார். ஆஞ்சநேயர் வெளியே வந்து, சனிபகவானை வணங்கினார். சனிபகவானும் ஆஞ்சநேயரை வணங்கி, ஆஞ்சநேயா! உன்னால் உன் பக்தர்களுக்கு ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு அற்புத திருவிளையாடலை அந்த ஈசனே நடத்தினார் போலும்! என்றார். ச்ருதகர்மா! எம்மைத் துதிப்போர்களை நீ எந்த வகையிலும் துன்புறுத்தலாகாது. அவர்களுக்கு நல்ல மேன்மைகளையும் சந்தோஷத்தையும் அளிக்க வேண்டும்! அப்படியே ஆகட்டும் ஆஞ்சநேயா! என்றார் சனிபகவான்! எல்லா சிவன் கோவில்களிலும் சனிபகவான் சன்னதி எதிரில் ஆஞ்சநேயர் சன்னதியைக் காணலாம். ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். தம்மால் அவர்கட்கு எவ்வித கஷ்டமும் நேராமல் அருள் புரிவார்.
சனிபகவானும், நளனும்: நிடத நாட்டு மன்னன் நளன், மாவிந்த நகரத்தைத் தலைநகராகக் கொண்டு, பட்ட மகிஷி தமயந்தியுடன் அரசோச்சி வந்தான். ஒருமுறை கால் சுத்தம் செய்யாமல் இறைவழிபாட்டிற்கு அமர்ந்த நளனை கலிரூபத்தில் சனிபகவான் பற்றிக் கொண்டார். அதன் விளைவு நளனின் நல்வாழ்வு நலிவுற்றது. புட்கரன் என்பவனுடன் நளன் சூதாடித் தோற்றான். நளன் நாடு இழந்தான், நலம் இழந்தான். கட்டிய மனைவியுடன் உடுத்திருந்த உடையுடன் காடு புகுந்தான். காட்டிலே, நளனும், தமயந்தியும் இன்னல்கள் பல அனுபவித்தனர். ஒருநாள் இரவு நளன், மனைவியைக் கலை பாதியோடு வனத்திலே தவிக்க விட்டுவிட்டு ஓடினான். கால் போன போக்கிலே, கானகத்தில் சென்று கொண்டிருந்த நளன், காட்டுத் தீயில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த கார்க்கோடகன் என்னும் சர்ப்பத்தைக் காப்பாற்றினான். அவ்வாறு நெருப்பிலிருந்து தப்பிய கார்க்கோடன் நளனைத் தீண்டியது. அவ்வாறு தீண்டிய மாத்திரத்திலேயே, நஞ்சின் கடுமையால் நளன் உடல் நீலம் பாய்ந்தது. அவன் உடல் குறுகினான். கார்க்கோடனின் செயலைக் கண்டு, நளன், நான் உபகாரம் செய்ததற்கு, அபகாரம் செய்து விட்டாயே என்று வருந்தினான். அதற்குக் கார்க்கோடகன், நளனிடம், மன்னா! உன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளமாட்டார்கள். உனக்கு எவ்வித துன்பமும் ஏற்படாது என்று கூறி அரவுரி ஆடையைக் கொடுத்தான். உனது உண்மையான உருவைத் திரும்ப பெறுவதற்கு இந்த அரவுரியைப் போர்த்திக் கொண்டால் போதுமானது என்றான். நளனும் கார்க்கோடகனுக்கு நன்றி கூறிப் புறப்பட்டான். காட்டிலே தனித்து விடப்பட்ட தமயந்தி பல துன்பங்களுக்கிடையே தந்தையை அடைகிறாள். அதே போல் நளனும் துன்பங்கள் பல அனுபவித்து, இறுதியில் தமயந்தியை அடைகிறான். அரவுரி போர்த்தி, அரூப தோற்றத்தைக் களைந்து புதுப்பொலிவு பெற்றான் நளன்! நளன் முன் போல் மனைவியுடன் மகிழ்ந்து பிள்ளைகளைப் பெற்று வாழ்வைத் தொடங்குகிறான். அரச போகமும், அரண்மனை வாழ்வும் நளனுக்குக் கிட்டியும், அவனது இதயத்தில் மட்டும், ஏதோ ஒரு விதசலனம் இருந்து கொண்டேதான் இருந்தது! எந்நேரமும் பித்துப் பிடித்தவன் போல் காணப்பட்டான். ஒரு நாள் நாரத மகரிஷி, நளனது அரண்மனைக்கு வந்தார். நளன் நாரத முனிவரை முகமன்கூறி வரவேற்றான். உயர்ந்த ஆசனத்தில் எழுந்தருளச் செய்து பாத பூஜை செய்தான். நாரதர் அகம் மகிழ்ந்து, நளமன்னா! உன் உள்ளத்திலே இருக்கும் துயரத்தை யாம் அறிவோம். இதுவரை நடந்த துன்பத்திற்குக் காரணம் சனீசுவரனின் செயலேயாகும். அதனால் சனீசுவரனை ப்ரீதி செய்வாயாக! இப்பொழுதே தீர்த்த யாத்திரை புறப்படுவாயாக! சித்தம் தடுமாறும் நிலைமாறும் என்று நல் வார்த்தைகள் நவின்றார். மன்னனும் மனம் மகிழ்ந்து முனிவரைப் பன்முறை நமஸ்கரித்து, அவரது பேரருளைப் பரிபூரணமாகப் பெற்றான். நள மகராஜன் அரச பாரத்தை அமைச்சர்களிடம் ஒப்படைத்து, தமயந்தியுடனும் குமாரர்களுடனும் தீர்த்த யாத்திரைப் புறப்பட்டான். வட தேசத்திலும், தென் தேசத்திலுமுள்ள பற்பல புண்ணிய ÷க்ஷத்ரங்களைத் தரிசித்தான். புனித நதிகளில் நீராடினான். மகான்களைத் தரிசித்தான். இப்படியெல்லாம் இருந்தும் அரசனின் இதயத்திலுள்ள துன்பச் சுமை மட்டும் குறையவே இல்லை! நளன், தென்னாட்டிலுள்ள திருமுதுகுன்றத்தூரை வந்தடைந்தான். அவ்வூரில் கோவில் கொண்டுள்ள பழமலை நாதரையும், பிராட்டியாரையும் கண்குளிரக் கண்டுகளித்துப் பேரானந்தம் கொண்டான்.
ஆண்டவனைத் தரிசித்த மன்னர்க்கு அடியவரைத் தரிசிக்கும் பேறு கிட்டியது. மாத்தவசியான பரத்துவாஜ முனிவரைத் திருக்கோயிலில் கண்டார். மன்னன், மனைவி மக்களுடன், முனிவரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தான். மன்னனின் மனக்குறையைத் தமது தபோ வலிமையால் உணர்ந்த முனிவர், நளவேந்தே! உனது வேதனையை யாம் அறிந்தோம். புண்ணிய பாரதம் முழுதும் பகவத் கைங்கரியம் செய்தும் புண்பட்ட நெஞ்சிற்கு மட்டும் அமைதி பிறக்க வில்லையே! இதற்கு என்ன காரணம் என்பதனை அறிய முடியாமல் அல்லலுறுகிறாய்! அடுத்துள்ள திருநள்ளாறு ÷க்ஷத்ரம் செல்வாயாக! தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதியின் பக்கத்தில் எழுந்தருளியுள்ள சனி பகவானைத் தோத்திரம்செய்து ஆராதித்து, அவரால் ஏற்பட்ட துன்பத்தைத் தீர்த்துக் கொள்வாயாக! என்றார். முனிவர் மொழி கேட்டு, சுவாமி! அடியேன் தேவரீர் அருளினாற் போல் இப்பொழுதே சென்று எனது பாபத்திற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறேன் என்று கூறி, முனிவரின் ஆசியுடன் திருநள்ளாறு என்னும் திருப்பதியை வந்தடைந்தான். மன்னன், மனைவி மக்களுடன் பிரம்ம தீர்த்தத்தில் நீராடினான். அந்த தீர்த்தத்தில் நீராடிய நள மன்னன், கங்கை நதியில் நீராடி சனி பகவானைத் தரிசிக்கும் பேறு தனக்குக் கிட்டவில்லையே என்று வருத்தமுற்றான். வடக்கே ஓடும் கங்கை நீரை எப்படியாவது, திரு நள்ளாற்றுக்குக் கொண்டு வரவேண்டுமென்று பேராவல் கொண்டான். மனைவி மக்களுடன் சிவதியானத்தில் ஈடுபட்டான். நாளாக நாளாக தியானமே தவமானது. நள மன்னனின் தவம் சிவபெருமான் மனதை இளகச் செய்தது. சிவபெருமான் நள மன்னனுக்குத் தரிசனம் கொடுத்தார். நளன் எம்பெருமானை நிலம் கிடந்து சேவித்தான். அன்று பகீரத மன்னனுக்காக கங்கையைப் பெருக விட்ட சங்கரன் இன்று நள மன்னனுக்காக வேண்டி கங்கையைப் பெருக விட திருவுள்ளம் பற்றினார். சிவபெருமான் தமது சூலாயுதத்தால் நிலத்தைக் கீறி கங்கையைத் திருநள்ளாற்றில் பெருக விட்டார். அந்த தீர்த்தத்திற்கு நளகூபம் என்று திருநாமம் சூட்டினார். எம்பெருமான் நளனுக்குப் பேரருள் புரிந்தார். நள மன்னன் எம்பெருமானை தோத்திரம் செய்தான். நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். மனமகிழ்ச்சி பொங்க குடும்பத்துடன் ஆலய தரிசனத்துக்குப் புறப்பட்டார். சிவநாமத்தைச் சிந்தையிலே கொண்டு, இருகரம் கூப்பி கோபுரத்தைத் தரிசித்தான். அம்மன் சன்னதி அருகே அபயஹஸ்தம் அளிக்கும் திருக்கரத்துடன் அருட்காக்ஷி தரும் சனிபகவானைக் கண்டான். மன்னன் இருகரங் கூப்பித் தொழுதான். அபிஷேக ஆராதனைகளைச் செய்தான். எள் அன்னத்தை நிவேதித்தான். அவருக்கு பிரியமான கருமை நிற வஸ்திரம் சாத்தினான். எண்ணெய் விளக்கேற்றி தூபதீபம் காண்பித்தான். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் குமாரராக அவதரித்தவரே! சுபிட்க்ஷத்தை அள்ளித் தருபவரே! எனது பிழை பொறுத்தருளுவீர் என்று கோடிமுறை பிழை பொறுத்தருள பிரார்த்தனை செய்தான். இவ்வாறு மன்னன் சனிபகவானை ஆராதனையாலும், அபிஷேக பூஜையாலும், நாம சேவையாலும் மானசீகமாக போற்றிப் பணிந்ததும், சனிபகவான் மனம் குளிர்ந்தார். சனிபகவான் நளனை விட்டு நீங்கினார். நளன் புத்துணர்ச்சி பெற்றான். சித்தத்திலே சுத்தமான தெளிவு பிறந்தது.
சனிபகவான் நளனுக்குப் பேரருள் நல்கினார்.
அவஸம் த்வயி ராஜேந்த்ர ஸுது: கம்அபராஜித!
விஷேண நாகராஜஸ்ய தஹ்யமாநோ திவாநிசம
யே சத்வாம் மதுஜா லோகே கீர்த்தயிழ்யந்த்ய தந்த்ரிதா
மதப்ரஸுதம் பயம் தேஷாம் ந கதாசித் பவிஷ்யதி!
அரசர்களுள் ஒப்பற்றவனே! தோல்வியை உணராதவனே! இத்தனை காலம் யாம் உன்னுடன் வாஸம் செய்து வந்தோம். இரவும் பகலும் நாகராஜனின் நஞ்சு எம்மை பொசுக்கிக் கொண்டே இருந்தது. இதுகாறும் நான் துக்கத்துடன்தான் உன்னிடம் வசித்து வந்தேன். இவ்வுலகில், எந்த மனிதர்கள் உன்னுடைய சரிதத்தைச் சொல்வார்களோ, அவர்களுக்கு என்னால் எத்தகைய துன்பமும் ஏற்படாது. இவ்வாறு நளனுக்கு வரம் நல்கி, அந்த வரத்தால், மானிடர் அனைவர்க்கும் தமது வல்லமையை உணர்த்தினார் சனி பகவான்! நளமன்னன் அம்பிகையையும் அரவணிந்த அண்ணலையும் தரிசித்து, காதலால் கசிந்து கண்ணீர் மல்கினான். நளன், திருநள்ளாற்றில் சில காலம் தங்கியிருந்து, சனி பகவானையும், போகமார்த்த பூண்முலையாள் நாயகியையும், தர்ப்பாரண்யேஸ்வர நாயகரையும் ஆராதித்து அஷ்ட ஐசுவரியத்துடன் நாடு திரும்பினான். அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகிய சனிபகவானின் பேரருளால் நளன் சகல சவுபாக்கியங்களுடன் நிடத நாட்டை நெடுங்காலம் ஆண்டு பெருவாழ்வு பெற்றான். நமது ஜாதகத்தில் ஏற்படுகின்ற தோஷங்கள் - அதனால் வரும் துன்பங்கள் அனைத்தும், நவக்கிரஹதேவனான திரு நள்ளாற்று நாயகனான சனிபகவானைப் பூஜித்து வழிபடுவதால் தானாக விலகிப் போகும்! திருநள்ளாற்று திருக்கோவிலில் எழுந்தருளி, அடியவர்களுக்கு ஆனந்த தரிசனம் தரும் ஆதவன் மைந்தனான - சனி பகவானை - ஆராதித்து ஆனந்த வாழ்வைப் பெறலாம்.
சனிபகவானும் திருக்கச்சி நம்பியும்: பண்டையக் காலத்தில் நறுமலர்ச்சோலைகளும், ஓங்கி உயர்ந்த மரங்களைக் கொண்ட சாலைகளும் கொண்டு விளங்கிய ஊர் பூவிருந்தவல்லி. அத்திருத்தலத்தில் ஆற்றலோடும், பக்தியோடும், பாரோர் போற்றும் செல்வத் தோடும் வாழ்ந்த குடிகள் பல உண்டு. உயர்ந்த குலத்திலே - ஆதவன் உதித்தாற் போல், மாசி மாதம், மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய பொன்னான நாளில் அவதரித்தவர் திருக்கச்சி நம்பிகள்! இவருடைய இயற்பெயர், காஞ்சிபூர்ணர் என்பதாகும். இளமையிலிருந்து எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்வதனையே பிறவியின் பெரும் பயனாகக் கொண்டிருந்தார். அனுதினமும் வைகறைத் துயிலெழுந்து நீராடி நெற்றியிலும், மேனியிலும் திருமண், ஸ்ரீசூர்ணம் அணிந்து கொள்வார். துளசிமணி மாலைகளை அணிந்து கொள்வார். வாசமிகும் நறுமலர்களைப் பறித்து வர நந்தவனம் செல்வார். ஸ்ரீமந் நாராயணனின் அனந்த கோடி நாமங்களை அகத்தே கொண்டு, மலரும் நிலையிலுள்ள வண்டுகள் தீண்டாத பூக்களை நிறைய பறித்துக் கொண்டு வரதராஜர், திருக்கோவியிக்குக் கொடுப்பார். திருக்கோயிலிலே, உத்ஸவமூர்த்தி திருவீதி உலா வரும் போது ஆலவட்ட (விசிறி) கைங்கரியம் செய்து வந்தார். பூவிருந்த வல்லிப் பெருமானுக்கு கைங்கரியம் செய்து வந்த அன்பருக்கு ஸ்ரீரங்கம் என்னும் திரு ÷க்ஷத்ரத்தில் கோயில் கொண்டுள்ள பள்ளி கொண்ட பெருமானுக்கு, கைங்கரியம் செய்ய வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. ஒருநாள் அங்கு சென்று, ஸ்ரீரங்கத்தின் எல்லையில் நின்று கோபுரத்தைத் தரிசித்து, ஸ்ரீரங்கநாதனைத் தரிசித்து, தோத்திரங்களால் ஆராதித்து ஆலவட்ட கைங்கரியத்தைத் தொடர்ந்தார்.
நம்பிக்கு, திருப்பதியிலே கோயில் கொண்டுள்ள திருவேங்கடமுடையானுக்கும் ஆலவட்ட கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஒருநாள், பூவிருந்த வல்லியில் இருந்து புறப்பட்டு, திருவேங்கடமுடையான் திருமலைக்கு வந்தார். ஸ்ரீநிவாஸனை உடலும் உள்ளமும் உருக கண்குளிரக் மனம்குளிரக் கண்டுகளித்து சேவித்தார். ஸ்ரீநிவாஸனுக்கு ஆலவட்ட கைங்கரியத்தை அளவிலா ஆசையோடும் பக்தியோடும் செய்து வந்தார். ஒருநாள் இரவிலே, எம்பெருமான், நம்பிக்கு காட்சி தந்தார். நம்பீ! நானோ இப்பிரதேசத்தில் குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். அதனால் உனது ஆலமிட்ட கைங்கரியத்தை வரதனுக்குச் செய்வாய் என்று திருவாய் மலர்ந்து அருளினார். எம்பெருமானின் அன்புக் கட்டளைப்படி காஞ்சி பூரணர், காஞ்சியம்பதி வந்தார். காஞ்சி வரதராஜனுக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்ய ஆரம்பித்தார். வரதராஜனின் பனிதூங்கும் மென்மலர்த் திருவடியில் சிந்தை எல்லாம் செலுத்திய நம்பிகள் அத்திருத்தலத்திலேயே தங்கி விட்டார். நம்பிகளின் பக்திக்குத் திருவுள்ளம் பற்றி வரதராஜப் பெருமான், அவர் முன்னால் பிரசன்னமாகி - வேதாந்த விஷயமாக ஆறு வார்த்தைகள் திருவாய் மலர்ந்தருளினார். நம்பிகள் பெருமானை வலம் வந்து, அநேக கோடி தண்டம் சமர்ப்பித்து, தம்மை எம்பெருமானின் திருவடியில் சேர்த்துக் கொள்ளும்படியான வைகுண்ட பதவியை பெறப் பிரார்த்தித்தார். அதற்கு எம்பெருமான், நம்பிகளிடம், ஆசாரிய முகமாகத்தான் வரவேண்டும் என்று அநுக்கிரஹித்து அருளினார். எம்பெருமானின் அருளால் நம்பிகளுக்கு ஆளவந்தாரிடம் பஞ்ச ஸமஸ்காரம், மந்திரோபதேசம் போன்ற குரு மார்க்கப் பேரருள் சித்தித்தது. நம்பிகள், வரதராஜனைப் போற்றிப் புகழ்ந்து, தேவராஜ அஷ்டகம் என்ற கிரந்தத்தை அருளினார். இவ்வாறு காஞ்சியிலே எழுந்தருளி பகவத் கைங்கரியம் செய்து நம்பிகளுக்கு ஓர் சோதனை ஏற்பட்டது!
ஒரு முறை சனி பகவான் நம்பிகளிடம், சுவாமி! தங்களை, யாம் ஏழரை ஆண்டு காலம் ஆட்கொள்ள வேண்டும் என்பது விதி என்றார். நம்பிகள், சனி பகவானை நமஸ்கரித்து, சனைச்சுவரா! தேவரீருடைய எண்ணப்படி, இந்த எளியவனை எத்தனை ஆண்டு காலம் வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கலாம். அடியேன் ஏற்றுக் கொள்ளச் சித்தமாக உள்ளேன். ஆனால், நான் அனுதினமும் நடத்திவரும் ஆலவட்ட கைங்கரியத்துக்கு பங்கம் ஏற்படுமே என்று தான் கவலை கொள்கிறேன் என்றார். சனி பகவான் சற்று சிந்தித்து, அப்படியானால் ஏழரை ஆண்டுகள் என்பதனை, உமக்காக வேண்டி ஏழரை நாட்களாக மாற்றிக் கொள்கிறேன் என்றார். ஏழரை நாட்களா! அதுவும் என் சுவாமிக்கு நான் அபச்சாரம் செய்வது போல் அல்லவா ஆகிவிடும். சூரிய குமாரரே! அடியேனை விட்டுவிடும். நம்பிகளின் பக்தியைக் கண்டு சனிபகவான், நம்பி! உனது பக்தியைக் கண்டு யாம் மகிழ்ந்தோம். உம்மை ஏழரை நாழிகை யாம் பிடித்துக் கொள்வோம்! என்ற திருவாய் மலர்ந்து அருளினார்! வழக்கம் போல், நம்பிகள் வரதராஜனுக்குத் திருவால வட்டக் கைங்கரியத்தை முடித்து விட்டு, ஆலயத்தைப் பன்முறை வலம் வந்து, தமது திருமாளிகைக்குத் திரும்பினார். அன்றைய தினம் எதனாலோ, சுவாமிகளின் இதயத்திலே ஒரு வித சலனம்; சஞ்சலம்; சங்கடம். சுவாமிகள் திரு மாளிகையிலே அமர்ந்து, தேவராஜ அஷ்டகத்தைப் பாராயணம் செய்து கொண்டிருந்தார். அது சமயம், பெருமானுக்குத் திருவாராதனம் செய்யப் போன அர்ச்சகர், சன்னதியிலே வைத்திருந்த தங்கவட்டிலைக் காணாது திகைத்தார். அந்த நேரம் அர்ச்சகருக்கு, நம்பிகளின் நினைவு தான் வந்தது! எம்பெருமானுக்கு அந்தரங்க பூர்வமாக ஆலவட்ட கைங்கரியம் செய்து வரும் நம்பிகள் எடுத்திருக்கக் கூடுமோ? என்ற ஐயப்பாடு எழுந்தது. அர்ச்சகர், அதிகாரிகளிடம் விஷயத்தைச் சொல்லி, நம்பிகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதிகாரிகள் நிலைமை தர்ம சங்கடமானது! என் செய்வது! வேறு வழியின்றி நம்பிகளை அழைத்து வந்தனர். அதிகாரிகள் சுவாமிகளிடம் மிகுந்த தயக்கத்துடன், சன்னிதானத்திலிருந்த தங்கவட்டிலைக் காணவில்லை! அதுபற்றித் தேவரீருக்கு ஏதாகிலும் தெரியுமா? என்று கேட்டவர், மீண்டும் சுவாமிகளிடம், அந்தரங்ககைங்கரியம் செய்யும் தங்களுக்குத் தெரியாமல் வட்டில் வெளியே போக வழி இல்லை என்று அர்ச்சகர் முறையிடுகிறார். இதில் சுவாமிகளின் அபிப்பிராயம் என்னவோ? என்று கேட்டார். நம்பிகள் நடுங்கினார். தணலிடைப் புழுவாய்த் துடித்தார்! அதிகாரிகளின் அபாண்டத்துக்கு என்ன பதில் சொல்வதென்பது அறியாமல் அவதிப்பட்டார். வரதராஜா! இதென்ன வேதனை! தேவரீருடைய திருமுடி முதல் திருவடி பரியந்தம் கண்குளிரக் கண்டுகளித்து கட்டியம் கூறி பேரின்பம் காணும் இந்த எளியவனுக்குப் பொன்னாசையா? வரதா! உனக்கு விளையாடுவதற்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? என்னை எதற்காக இப்படி சோதிக்கிறாய்? என்றெல்லாம் பலவாறு சொல்லிச் சொல்லி புலம்பினார். அதிகாரிகளின் நிலைமை தர்ம சங்கடமானது! இந்த சமயத்தில் அர்ச்சகர் வட்டிலும் கையுமாக ஓடோடி வந்தார். நம்பிகளை சாஷ்டாங்கமாகப் பணிந்தார்.
சுவாமி! அடியேன் பிழை பொறுத்தருளுங்கள். ஆராய்ந்து பார்க்காமல் ஐயனுக்கு அபச்சாரம் செய்து விட்டேன். வட்டில், எம்பெருமான் விக்ரஹத்திற்குப் பின்னால் இருந்தது. எதனாலோ என் கண்ணை ஒரு கணம் மறைத்து விட்டது! ஏழரை நாழிகை தங்களை ஏளனத்துக்குள்ளாக்கிய அடியேன் ஏழேழு ஜன்மங்கள் எடுத்து புலம்பி அழுதாலும் பாபம் தீராது! அதிகாரிகள் நம்பிகளிடம் தங்கள் பிழை பொறுத்தருள பிரார்த்தித்தனர். ஏழரை நாழிகை என்று அர்ச்சகர் சொன்னதும் சுவாமிகளுக்கு, சனிபகவானின் நினைவு வந்தது! நம்பிகள் குறுநகை சிந்தினார்! வரத நாதனின் திருப் பாசுரங்களைப் பாடிக்கொண்டே திருமாளிகைக்குச் சென்றார். இன்றும் காஞ்சி வரதராஜப் பெருமான் திருச்சன்னதியில், பூஜை காலத்தில், திருவால வட்டம் திருக்கச்சிநம்பி என்று அருளப்பாடு சொல்லி தாதாசாரியார் ஆலவட்ட கைங்கர்யம் பண்ணுவதனைக் கண்கூடக் காணலாம். பூவிருந்தவல்லியில், வரதராஜர் ஆலயத்தில் நம்பிகளுக்குப் பிரதான சன்னதியைக் தரிசிக்கலாம். நம்பிகளின் ப்ரீதிக்காக பிரதி வருஷமும் மாசி மாதம் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் விசேஷ உற்சவம் நடைபெறுவதைப் பக்த கோடிகள் கண்டு களிக்கின்றனர். சனி பகவான், தம்மிடம் பக்தி செய்வோர்க்கு இவ்வாறு பேரருள் பாலித்து, அவர்களுக்குத் தம்மால் வரும் சங்கடங்களைத் தீர்த்து வைப்பார்.
சனிபகவானும் தசரதரும்: தசரத சக்கரவர்த்தி சப்த த்வீபங்களும் அரசு பரிபாலனம் செய்து வந்தார். அவர் அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசு புரிந்தார் என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சிகாலத்தில் மாதம் மும்மாரி பொழிந்தது. குடி உயர்ந்தது. அக்குடி மக்களால் மன்னரின் கோன் உயர்ந்து, அவரது புகழ் எங்கும் கொடி கட்டிப் பறந்தது. ஈரேழு பதினான்கு லோகங்களும் தசரத சக்ரவர்த்தியின் பெருமையையும் புகழையும் பேசிய வண்ணமாகவே இருந்தன. இவ்வாறு இருந்து வரும் நாளில், ஒரு முறை தசரத மன்னனின் ஆட்சியின் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் சந்தர்ப்பம் ஒன்று உருவானது. அதனை முன்கூட்டியே உணர்ந்த ஜோதிடர் அரசனிடம், விஷயத்தை விளக்கினார்.
அரசே! சனிபகவான் கிருத்திகா நக்ஷத்திரத்திலிருந்து, ரோகிணி நக்ஷத்திரத்தைப் பிளந்து கொண்டு வெளிப்படப்போகிறார், இதனை ஜோதிட சாஸ்திரத்தில், நாங்கள், ரோஹிணீ சகடபேதநம் என்று சொல்லுவோம். அவ்வாறு சனிக்கிரஹம் செல்வதால் பூமிக்கு என்ன கேடு வரப் போகிறது? தசரத சக்கரவர்த்தி வியப்பு மேலிடக் கேட்டார். ஜோதிடர், மன்னரைப் பார்த்து, மன்னவா! கிரஹங்களிலே சலியானவர் அசுரர்களையும், தேவர்களையும் நடுங்கச் செய்யும் படியான ஆற்றல் கொண்டவர். அவருடைய உக்ரத்தை உலகம் அறியும். அரசனும் அதனை அறியாதவர் அல்லர். இருப்பினும் நாங்கள் கூறுகின்றோம். இத்தகைய ரோஹிணீ சகட பேதநத்தால், நாட்டில் பன்னிரண்டு ஆண்டு காலத்திற்கு மழை பொழியாது. மழை இன்றி பயிர்கள் வாடும். பயிர் வாடுவதால் நாட்டிற்கு என்னென்ன இன்னல்கள் ஏற்படும் என்பதனை எவரும் அறிவர் என்று கூறினார்.
நாட்டிற்கு வரப்போகும் துன்பத்தை, ஜோதிட நிபுணர்கள் மூலம், முன் கூட்டியே அறிந்த தசரத சக்கரவர்த்தி, சற்றும் தாமதியாமல் அவை கூட்டினான். அவை அறிய ஜோதிடர் சொன்னவற்றைப் பிரகடனப்படுத்தினான். அமைச்சர்கள், வசிஷ்ட முனிவரைக் கேட்டால் இதற்கு நல்லதொரு மார்க்கம் பிறக்கும் என்று கூறினார். தசரதர், வசிஷ்டமுனிவரை, அரண்மனைக்கு வர வழைத்தார். முறைப்படி மாமுனிவரை வரவேற்று உபசரித்தார். பின்னர் அரசன், முனிவர் பெருமானிடம், ஜோதிடர் மொழிந்தவற்றைச் சொன்னார். முனிபுங்கவரே! எனது ஆட்சி காலத்தில் பிரஜைகளுக்குத் துன்பம் ஏற்படலாமா? இதற்கு ஏதாகிலும் சனிப்ரீதி செய்வதற்கான உபாயம் உண்டா? என்று மனக் கலக்கத்துடன் வினவினார்.
வசிஷ்ட முனிவர், மன்னர் முகம் நோக்கி, ரகுகுல நாயக! நீ சனிபகவானைத் தரிசித்து இதற்கு நல்லதொரு மார்க்கத்தைக் காண்பாயாக! என்றார். முனிவரின் மொழியை முழுமனத்துடன் ஏற்றுக் கொண்ட தசரத மாமன்னர், மகரிஷியே! தேவரீர் சித்தம்; எந்தன் பாக்கியம். அடியேன் இப்பொழுதே சென்று சனி பகவானைத் தரிசித்து, தியானித்து நமது நாட்டிற்கு வர இருக்கும் துன்பத்தைத் தடுக்க வழி கண்டு வருகிறேன் என்றார். வசிஷ்ட முனிவர், மங்களாநி பவந்து என்று மன்னனை அநுக்கிரஹித்தார். ஒரு நல்ல சுபமுகூர்த்த வேளையில், சனி பகவானைத் தரிசிக்க தசரதர் புறப்பட்டார்.
பத்து திக்குகளுக்கும் தங்கு தடை இன்றிச் செல்லும், தனது பொன் வண்ணத் தேரைப் பூட்டினார் தசரதன்! திவ்யமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ரதத்தில் அமர்ந்தார். காற்றினும் கடுக ரதத்தைச் செலுத்தினார். தசரதரின் பொற்தேர், ஆகாய மார்க்கமாக சூரியனுக்கு மேலே ஒன்றே கால் லக்ஷம் யோஜனை உயரத்தில் அமைந்துள்ள நட்சத்திர மண்டலத்தை அடைந்தது. ரோகிணி நட்சத்திரத்தின் முன்பாகச் சென்று நின்றார் தசரதர். அங்கே கோடி சூர்ய பிரகாசத்துடன் கூடிய பேரொளியைக் கண்டார் மன்னர்! ஒப்பற்ற - உயர்ந்த பலவகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கமயமான மேருபர்வதம் போன்ற உயர்ந்த திவ்யத் தேரில் அன்னப் பறவைகள் போன்ற வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அத்தேரிலுள்ள நவமணித் தட்டில், வைர நவரத்ன பொற்கிரீடம் ஜொலி ஜொலிக்க - சூரியனைப் போல் காந்தியுடன் எழுந்தருளியிருந்த சனி பகவானைக் கண்டார் தசரத மன்னர்.
தசரதர் வில்லில் நாணேற்றி, சனிபகவான் மீது ஸம்ஹா ராஸ்திரத்தைப் பிரயோகம் செய்ய முற்பட்டார். தசரதரைப் பார்த்து சனீசுவர பகவான் குறுநகை புரிந்தார். தசரத மன்னா! தேவர்களும் அசுரர்களும் அஞ்சும்படியான உனது அதிபராக்கிரமத்தைக் கண்டு யாம் அக மகிழ்ந்தோம்! பிரஜைகளின் ÷க்ஷமத்திற்காக என்னை எதிர்த்து வந்த உன் பிழையைப் பொறுத்துக் கொள்வேன். உம்முடைய தவமும், வலிமையும் எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வேண்டும் வரம் தருவோம்! சனிபகவானின் பெருங்கருணையால், மன்னர் கோடி இன்பம் கொண்டார். நாணேற்றிய வில்லைக் கீழே போட்டார். கரங்கூப்பித் தொழுதார். ஆதவன்மைந்தா! அநேக கோடி நமஸ்காரம். எனது நாட்டில் உம்மால் மழைபொழியாமல் இருக்கக் கூடாது த்வாதச வர்ஷ க்ஷõமம் என்பது எப்பொழுதுமே எனது பிராஜைகளுக்கு ஏற்படக் கூடாது. பிரஜைகளின் ÷க்ஷமத்தைப் பெரிதாகக் கொண்டு வாழும் சக்ரவர்த்தியின் ராஜ தர்மத்தைக் கண்டு, சனி பகவான், மன்னர் மீது கருணையும், வாத்ஸல்யமும் கொண்டு, தசரத மன்ன! உமது விருப்பம் போல் யாம் வரமளித்தோம். நீரும் உமது பிரஜைகளும் ÷க்ஷமமுடன் வாழ்வீர் என்று அருள்வாக்கு அளித்தார். தசரதர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை! முடிபட, சனிபகவானை அடிபணிந்தார் தசரதமன்னர். சனிபகவானைத் தோத்திரம் செய்தார்.
தசரத மன்னரின் தோத்திரங்களால் சனிபகவான் மகிழ்ந்தார். தசரத மன்னா! நீர் துதிசெய்த இந்த ஸ்தோத்திரத்தைக் காலையிலும், மாலையிலும் துதிப்போர்க்கு, அவர்களைப் பற்றியுள்ள தோஷங்கள் விலகும். சகல சுபமங்களங்களும் பொங்கும். எனக்கு விருப்பமான சனிக்கிழமைகளில், வன்னி தளத்தால் எம்மை அர்ச்சித்து, ஆராதித்து, எள் அன்னம் நிவேதித்து, தானம் செய்வோர்க்கு நான் நன்மையைச் செய்வேன். இவ்வாறு சனிபகவான் திருவாய் மலர்ந்து அருளியது கேட்டு, மனம் மகிழ்ந்த தசரதமன்னர் சனிபகவானை பன்முறை வலம் வந்தார். சனிபகவானின் ஸ்தோத்திரத்தை ஜபித்துக் கொண்டே தமது நகரத்திற்குத் திரும்பினார். சனிபகவானுக்குப் ப்ரீதியான சனிக்கிழமையன்று, தங்கத்தினால் செய்யப்பட்ட சனிபகவானின் விக்ரஹத்திற்குப் பூஜைகள் செய்து, எள் அமுது நிவேதித்து, தோத்திரங்களைச் சொல்லி, அன்றைய தினம் பூரண உபவாஸம் இருந்து அவரை ஆராதித்தார் தசரதர்! சனிபகவானின் அருளால், தனக்கும் தனது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் வர இருந்த பேராபத்தைத் தடுத்தார் தசரதர். சனிபகவானின் கிருபாகடாக்ஷத்தால் எல்லோரும் இன்புற்றனர்.
சனிபகவானும் முத்து சுவாமிதீட்சிதரும்: கர்நாடக சங்கீதத்திற்குச் சிறந்த பீடமாகத் திகழ்ந்தது தஞ்சை! இசைவாணர்கள் பிறந்த இடம் தஞ்சை! மும்மூர்த்திகளுள் ஒருவராக விளங்கும் முத்து சுவாமிதீட்சிதர் அவர்கள் பிறந்த இடம் தஞ்சையைச் சேர்ந்த திருவாரூராகும். திருவாரூர்த் தியாகேசப் பெருமானின் பேரருளால் கீர்த்தனங்களை இயற்றிப் பாடும் சுக்ருதத்தைப் பெற்றிருந்த தீட்சிதர் அவர்கள் வடமொழியிலான அநேகம் கிருதிகளை மிக்க அற்புதமாக இயற்றியுள்ளார். குருநாதரான சிதம்பரயோகியிடம் சீடராகி, வித்தியா உபதேசம் பெற்றார். குருதேவருடன் எண்ணற்ற கோவில்களைத் தரிசித்தார்.
இவர், திருத்தணி முருகன் மீது பக்தி கொண்டிருந்தார். முருகனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற முத்துசுவாமி தீட்சிதர் அவர்கள் குருவின் ஆக்ஞைப்படி, கர்நாடக சங்கீதத்தையும், யோக சோதிட சாஸ்திரங்களையும் லோக சேமத்திற்கு அர்ப்பணித்தார். தீட்சிதர் அவர்கள் இயற்றியுள்ள கீர்த்தனங்கள் அனைத்தும், அவர் தரிசித்த ÷க்ஷத்ரங்களின் மகிமையைச் சொல்லும் வண்ணம் இயற்றப்பட்டிருந்தன. திருவாரூர் திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள கமலாம்பிகை பேரிலும், மாயூரம் அபயாம்பிகை பேரிலும் தீட்சிதர் இயற்றியுள்ள கிருதிகள் நெஞ்சை அள்ளும் அற்புத சாகித்யங்களாகும்! மதுரை மீனாட்சி அம்பிகையின் பேரிலும் க்ருதிகளைத் தந்துள்ளார். இவர் இயற்றிய நவக்கிரஹ கீர்த்தனங்கள் மிகவும் பிரசித்தமானது. நவக்கிரஹகிருதிகளைப் பாடுவதால் நம்மைப் பற்றியுள்ள கிருஹதோஷம் விலகும். தீட்சிதர் அவர்கள் சனி பகவானைப் போற்றி துதித்துப் பாடியுள்ள கீர்த்தனங்களைப் படிப்போர்க்கு சனிபகவான் பேரருளை தந்தருள்வார்.
ஆறுதல் சொன்ன வியாசர்: பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அவர்களுடன் வந்த திரவுபதி நடக்க முடியாமல் சோர்ந்தாள். காட்டில் கிடந்த இலைச் சருகுகளைப் பரப்பி விரித்து, அவளைத் தூங்கச் செய்தனர். ராஜபோகத்தில், பஞ்சு மெத்தையில் படுத்த அவள், சருகு படுக்கையில் உறங்க நேர்ந்தது கண்டு கண்ணீர் சிந்தினர். அவ்வழியே வந்த வியாசர் இக்காட்சியைக் கண்டார் ராஜகுமாரர்களே! உங்கள் நிலை வருந்தத்தக்கது தான் என்றாலும், காலம் என்ற நியதிக்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். நிடதநாட்டில் நளன் என்னும் சக்கரவர்த்தி இருந்தான். அவனும், அவன் மனைவி தமயந்தியும் படாத துன்பமில்லை. சனீஸ்வரரின் பிடியில் சிக்கி நாட்டை இழந்து காட்டுக்குச் சென்றான். பின்னர் நாரதரின் உபதேசத்தால் தீர்த்தயாத்திரை சென்று சனிதோஷம் நீங்கப்பெற்றான். ஒருபோதும் கலங்காதீர்கள். கெடுப்பதும் கொடுப்பதும் காலம் தான்! என்று ஆறுதல் கூறினார்.

No comments:
Post a Comment