Saturday, August 2, 2014

ஜாதகப்படி கண்களில் பாதிப்புகள்


கண்கள் அழகாக அமைவது  முகத்திற்கு அழகு. அதை கண்கள் நல்ல ஒளியுடனும் பார்வையுடனும் அமைவது வாழ்க்கைக்கே அழகு. கண் பார்வை என்பது மனிதனுக்கு உயிர் நாடியாகவும் விளங்குகிறது.  தனியாக பிறர் தயவின்றி செயல்படுவதற்கும், இயற்கை அழகை ரசித்து வாழ்வதற்கும் கண்கள், மிக முக்கியமானதாகும். கண் பார்வையின்றி வாழ்வது மிகவும் கடினம் ஒளியிழந்த வாழ்க்கை என்பதால் தொடுதல், உணருதல் போன்றவற்றின் மூலமே எதையும் தெரிந்து கொள்ள முடியுமே தவிர வாழ்க்கை என்பது ஒரு கேள்வி குறியாக தான் இருக்கும். எவ்வளவு திறமைகள் இருந்தாலும்  அவற்றை முழுமையாக வெளிப்படுத்த இயலாத அளவிற்கு சிக்கல்கள் உண்டாகும். ஒவ்வொன்றிற்கும் பிறரின் தயவை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். எதனால் இந்த பார்வை கோளாறு ஏற்படுகின்ற தென்று ஜோதிட ரீதியாக ஆராய்ச்சி செய்யும் போது நவகிரகங்களின் திருவிளையாடலே காரணமாக இருக்கின்றது.


பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் வீடு வலது கண்ணுக்கு 12 ஆம் வீடு இடது கண்ணுக்கும் உரிய ஸ்தானமாகும். இந்த இரு ஸ்தானங்கள் பாவிகளால் பாதிக்கப்பட்டால் கண் பார்வை பாதிக்கும். கண் பார்வைக்கு முக்கிய காரகனாக விளங்கக் கூடிய கிரகம் சூரியனாவார். வலது கண்ணுக்கு சூரியனும் இடது கண்ணுக்கு சந்திரனும் காரகர்களாவார்கள்.

சூரியன் சந்திரன் சுக்கிரனும் பாவிகள் சேர்க்கைப் பெற்று பலமிழந்து அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, கண் பார்வை குறையும் அமைப்பு உண்டாகும். கண் பார்வையை குறைப்பதில் முக்கிய கிரகமாக விளங்கக் கூடியவர்கள் வலது கண்ணுக்கு சனியும், இடது கண்ணுக்கு செவ்வாயும் ஆகும். சூரியனை சனி பார்த்தால் கண் பார்வை பாதிக்கும். அது போல செவ்வாய் 2,12 ஆம் வீட்டை பார்த்தால் கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.

ஜென்ம லக்னத்திற்கு 6,8 ஆம் பாவங்களில் பலமான பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் கண் பார்வையில் பாதிப்பு உண்டாகும். 8ல் அமையும் கிரகம் இடது கண்ணையும் 6ல் அமையக் கூடிய கிரகம் வலது கண்ணையும் பாதிக்கும்.

லக்னாதிபதி 6,8,12ல் அமையப் பெற்று 2,12க்கு அதிபதிகள் சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும், சூரியன் சந்திரன் இணைந்து 12ல் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 6ல் சந்திரன், 8ல் சூரியன், 12 சனி, 2ல் செவ்வாய் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 1,2,7க்கு அதிபதிகள் சந்திரன் சேர்க்கை பெற்று 6,8,12ல் இருந்தாலும், லக்னாதிபதி சனி சேர்க்கைப் பெற்று 2,12ல் இருந்தாலும் சனி செவ்வாய் இணைந்து 2,12ல் இருந்தாலும் சந்திரன், சுக்கிரன் இணைந்து பாவிகள் சேர்க்கை பெற்றாலும், கண்களில் பாதிப்பு உண்டாகும்.


பொதுவாக ஜென்ம லக்னத்திற்கு 2,12 அதற்கு 7 ஆம் வீடான 6,8ல் பாவிகள் அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு உண்டாகும். 6,8,12ல் சந்திரன் சுக்கிரன் அமையப் பெற்றால் மாலைக் கண் நோய் உண்டாகும்.

ஜென்ம லக்னாதிபதி 2 ஆம் அதிபதி சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும், சூரியன் கேது சேர்க்கை பெற்று 2,6,8,12ல் அமையப் பெற்றாலும் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

சூரியன், சந்திரன், சுக்கிரனுக்கு பரிகாரம் செய்தால் கண் சம்மந்த பட்ட பாதிப்புகள் குறையும்.

No comments:

Blogger Gadgets